June 21, 2021, 3:37 am
More

  ARTICLE - SECTIONS

  மே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்!

  உழைக்கும் தன்னார்வுத் தொண்டர்களுக்கு நன்றி கூறும் நாளாக அகில உலக ரெட் க்ராஸ் நாள், டுனான்டின் பிறந்த நாளான மே 8ம் தேதியன்று உலகம்

  World Red Cross Day
  World Red Cross Day

  Red Cross:- செஞ்சிலுவை சங்கம்;- 1859 ல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Jean-Henri Dunant என்பவர் தன் வியாபாரத்தை அல்ஜீரியாவில் விரிவுபடுத்த எண்ணி, பிரான்சை ஆண்ட மூன்றாம் நெப்போலியனை சந்திக்க விரும்பினார். 1830 முதல் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியா, பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. ஆனால் அச்சமயத்தில் ஸால்பெரினோ (Solferino) என்ற இடத்தில் ஆஸ்திரியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் நெப்போலியன் பங்கு கொண்டிருண்டிருந்தார். அவரை தேடி அங்கு சென்ற ஹென்றி டுனான்ட் (Dunant) போர்க்களத்தில் தான் கண்ட காட்சிகளால் மனமுடைந்து போனார்.

  1828, மே மாதம் 8 ம் தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் பிறந்த டுனான்ட், சிறு வயது முதலே பெற்றோர்களால் பொதுச் சேவையிலும் தான தர்மத்திலும் விருப்பமுடையவராக வளர்க்கப்பட்டிருந்தார். ஆஸ்ட்ரோ-சார்டினியன் யுத்தம் (Austro-Sardinian War) என்றழைக்கப்பட்ட Battle of Solferino வில் யுத்தத்திற்குப் பின் அங்கு கிடந்த இறந்தவர்களையும், காயமுற்றவர்களையும் கண்டு கண் கலங்கினார் டுனான்ட். இரு தரப்பிலும் சுமார் நாற்பதாயிரம் பேர் அங்கு கை கால் முறிந்து அடிபட்டுக் கிடந்தனர்.

  அவர்கள் எல்லோரும் ஈவிரக்கமின்றி இழுத்து வரப்பட்டு அருகிலிருந்த தேவாலயத்தில் போடப்பட்டனர். மருத்துவ உதவி இன்றி அவர்கள் துடித்துக் கதறிய காட்சி டுனான்டின் இதயத்தைப் பிழிந்தது. ஸால்பெரினோ போர்க்களத்தின் அருகிலிருந்த கிராம மக்களை ஒன்று திரட்டி, தன்னால் இயன்ற வரை கைக்காசை செலவு செய்து அவர்களுக்கு சிகிச்சை செய்ய முயன்றார். தீவிரமாக முயன்று பிரஞ்சு படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஆஸ்திரியாவின் டாக்டர்களை விடுவித்தார்.

  தன் ஊருக்குத் திரும்பிய பின்னும் அந்த போர்க்களக் காட்சி அவர் மனதை விட்டு அகலவில்லை. 1862 ல் “A Memory of Solferino” – ‘ஸால்பெரினோ போரின் நினைவுகள்’ என்ற புத்தகத்தை எழுதி 1600 காப்பிகள் அச்சடித்து தன் சொந்த செலவில் அதனை ஐரோப்பாவின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் படைத் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

  அப்புத்தகத்தில் 1859 ல் தான் பார்க்க நேர்ந்த உருக்கமான நிகழ்சிகளை விரிவாக விளக்கியதோடல்லாமல், போரில் காயமடைந்தோருக்கு, அவர் எப்பிரிவைச் சேர்ந்தவராக இருப்பினும் முதலுதவி செய்வதற்கான ஒரு தன்னார்வு தொண்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் வலியுறுத்தி இருந்தார். அதோடு கூட, போர்க்களத்தில் அத்தகைய மருத்துவ உதவிக் குழுவினருக்கும், அவர்களுடைய மருத்துவ முகாமுக்கும் அகில உலகத் தலைவர்கள் பாதுகாப்பிற்கு உத்தவராதம் அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தானே நேரில் பயணித்து பல தலைவர்களை சந்தித்து தன் கருத்துக்களுக்கு ஆதரவு தேடினார். தலைவர்களிடையே இப்புத்தகம் மிகுந்த பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றது.

  1863 பிப் 9 அன்று ஜெனீவாவில் ‘Committee of Five’ என்ற ஐவர் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தப் பட்டது. அதில் டுனான்டைத் தவிர மேலும் நான்கு பேர் உறுப்பினர்களாக சேந்தனார். “இத்தகைய மருத்துவ உதவி போர்க்களத்தில் சாத்தியமா?” என்பது பற்றி ஆராய்ந்து அதனை செயல் படுத்த இக்கமிட்டியின் தலைவர்கள் முன்வந்தனர். எட்டு நாட்கள் கழித்து இதன் பெயரை இவர்கள், “International Committee for Relief to the Wounded” என்று பெயரிட்டனர். 1876 ல் இதன் பெயர் “இன்டர்நேஷனல் கமிட்டி ஆப் ரெட் கிராஸ்” – “International Committee of Red Cross (ICRC) என்று மாற்றப் பட்டது .

  தொடர்ந்து இவ்வமைப்புக்கு ஆதரவு தேடுவதில் ஈடுபட்ட டுனான்ட், தன் சொந்த வியாபாரத்தை கவனிக்க நேரமின்றி திவாலாகிப் போனார். இவருடன் சேர்ந்து ஐவர் குழுவில் அங்கத்தினராக இருந்த ஒரு வழக்கறிஞர், டுனான்டை இவ்வமைப்பிலிருந்து விலக்கிவிட்டுத் தானே அதன் தலைவராக அறிவித்துக் கொண்டார். அப்போது முதல் டுனான்ட், ஜெனீவாவை விட்டு நீங்கி, பாரிசில் உள்ள ஒரு சிறு ஊரில் வறுமையிலும் நோயிலும் வசிக்கலானார்.

  பின்னாளில் ஒரு பத்திரிக்கையாளர் இவரை அடையாளம் கண்டு இவரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை மூலம் மீண்டும் இவர் பெருமையை உலகம் உணர்ந்தது. அதன் பின் 1901 ல் அமைதிக்கான முதல் நோபல் பரிசு டுனான்ட்டுக்கும், பிரான்சைச் சேர்ந்த அகிம்சாவாதியான பிரெடெரிக் பாசி என்பவருக்கும் இணைந்து வழங்கப்பட்டது. மீண்டும் டுனான்ட் ஜெனீவா கமிட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால் அதன் பின் ஒன்பது ஆண்டுகளே உயிர் வாழ்ந்த டுனான்ட், 1910 அக்டோபர் 30 ல் தன் 82 ஆம் வயதில் காலமானார்.

  ஹென்றி டுனான்ட், தான் பெற்ற நோபல் பரிசின் தொகையை ஏழைகளுக்கான மருத்துவ மனையில் படுக்கைகள் வாங்குவதற்கும், ஏற்கெனவே வியாபாரத்தில் தான் அடைந்த கடனை அடைக்கவும் செலவழித்தார்.

  ராணுவத்திற்கு மட்டுமின்றி கடற்படைக்கும் தங்கள் சேவையை விரித்த செஞ்சிலுவை சங்கத்தில் ஆரம்பத்ததில் 36 நாடுகளே அங்கத்தினர்களாக இருந்தனர். ஆனால் இவ்வமைப்பு, தற்போது உலகளாவிய தன்னார்வு தொண்டமைப்பாக விரிந்து பரந்துள்ளது. தங்கள் சேவை எங்கு தேவையோ அங்கு தங்கு தடையின்றி சென்று உழைக்கும் தன்னார்வுத் தொண்டர்களுக்கு நன்றி கூறும் நாளாக அகில உலக ரெட் க்ராஸ் நாள், டுனான்டின் பிறந்த நாளான மே 8ம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

  மிகப் பெரிய செயல்கள் மிகச் சிறிய தீப் பொறியால்தான் உருவாக்கப்படுகின்றன. அதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் அபாரம்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  22FollowersFollow
  74FollowersFollow
  1,261FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-