― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: கஜேந்திர மோட்சம்...!

திருப்புகழ் கதைகள்: கஜேந்திர மோட்சம்…!

- Advertisement -
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் (பகுதி 52)
அருணமணி மேவு (திருச்செந்தூர்) திருப்புகழ்
கஜேந்திர மோட்சம் (தொடர்ச்சி)
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நெடுங்காலமாகப் போராடிய கஜேந்திரனின், மனோபலமும் உடல் பலமும் வெகுவாகக் குறையலாயின. அச்சமயத்தில், மிகுதியான துன்பத்தில் இருந்த போதிலும் தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக, கஜேந்திரனுக்கு இறை பக்தியும் ஞானமும் பிறந்தன.

உடனே, அந்த யானை, தன் துதிக்கையால், குளத்தில் இருந்த தாமரை மலர்களை எடுத்து, பகவானை அர்ச்சிக்கத் தொடங்கியது. (தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக‌) இந்திரத்யும்னனாக இருந்த போது கற்றுக் கொண்ட ‘நிர்க்குண பரப்பிரஹ்ம ஸ்தோத்திர’த்தைக் கூறிக்கொண்டே பகவானை அர்ச்சிக்கத் தொடங்கியது கஜேந்திரன். பூதத்தாழ்வாரின் கீழ்க்கண்ட பாசுர வரிகளை இங்கு நாம் தியானிக்கலாம்!.

அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், – கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து.

தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன்றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு.

​ கஜேந்திரனின் நிர்குண பரப்பிரம்ம ஸ்தோத்திரம், ஸ்ரீமத் பாகவதத்தில் தரப்பட்டுள்ளது.. மிக உயர்வாக இந்த ஸ்துதியைப் போற்றுகிறது ஸ்ரீமத் பாகவதம்.. இந்த ஸ்தோத்திரத்தின் பொருளை சுருக்கமாகத் தருகிறேன். நிர்க்குண நிராகார பரம்பொருளை போற்றுவதான இந்தத் துதி, மிகவும் மகிமை வாய்ந்தது. அனைத்துத் துன்பங்களையும் நீக்க வல்லது.

gajendramokcha

​யாரொருவர் தன் சக்தியின் எல்லையை உணர்ந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை ஆபத்துக்காலத்தில் பரிபூரணமாகச் சரணடைகிறார்களோ அவர்களை பக்தவத்சலனான எம்பெருமான் நிச்சயம் வந்து காப்பாற்றுகிறான். பாரதக்கதையில் திரௌபதி, தன் இருகரங்களையும் கூப்பி தீனரட்சகனான பரம்பொருளை முழுமையாகச் சரணடைந்தபோது, வற்றாது புடவை சுரந்து அவள் மானம் காத்த பரமதயாளனின் கருணைக்கு அளவேது?.

தம் பக்தனைக் காக்க, கருட வாகனமேறி, ககனமார்க்கமாக விரைந்து வந்து, கஜேந்திரன் இருந்த தடாகத்தை அடைந்தார் பகவான். எம்பெருமான், தன் உத்தரீயம் (அங்கவஸ்திரம்) கீழே விழுவதையும் பொருட்படுத்தாது, தம் பக்தரைக் காக்க விரைந்து பூலோகம் வந்த தருணங்கள் இரண்டு. ஒன்று கஜேந்திரனின் அபயக்குரல் கேட்டு. மற்றொன்று பிரகலாதனுக்காக என்று கூறுவதுண்டு…

கஜேந்திரன் குரலுக்கு, பகவான் ஓடோடி வந்த நிகழ்வை, பகவான் நம் மீது கொண்டுள்ள அளவற்ற பெருங்கருணையைக் குறித்து விவரிப்பதற்காக, வேறொரு விதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. கஜேந்திரன், முதலை தன் காலைக் கவ்வியதும், ‘முதலே, முதலே’ என்று தான் கூவியதாம். ஆனால் ஆதி முதலான எம்பெருமான், தன்னைக் குறித்தல்லவோ அது இவ்விதம் கூவி அபயம் வேண்டியது என்று விரைந்தோடி வந்தானாம்.

எம்பெருமான், கஜேந்திரனை, தன் தாமரைக் கரத்தால் பிடித்துக் கொண்டு, தன் சக்ராயுதத்தால் முதலையைப் பிளந்தார். முதலில், கந்தர்வனுக்கு சாப விமோசனம் கொடுத்தார்.

பரம பாகவதர்களான இறையன்பர்களின் திருவடிகளைப் பற்றுபவர்களுக்கல்லவோ பகவான் முன்னுரிமை அளிக்கிறார்?. ஹூஹூவும் பகவானை வலம் வந்து நமஸ்கரித்து, அவரை பலவாறாகத் துதித்து வணங்கி, தன் இருப்பிடம் சேர்ந்தான். கஜேந்திரனும் சாரூப்ய முக்தியை அடைந்து பிரகாசித்தது…\

​அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்,
சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே.

என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை, இங்கு நினைவுகூரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version