திருப்புகழ் கதைகள் பகுதி 64
திருப்புகழில் இராமாயணம் – வானரர்கள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
மாயமானைத் தேடிச் சென்ற இராமனும் அவரைத் தேடிச் சென்ற இலக்குவனும் திரும்பி வருகிறார்கள்; சீதையைக் காணாததால், பிராட்டியாரைத் தேடிக் கிளம்பினார்கள். இதனை அருணகிரியார்,
இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ
கவெங்கே மடந்தை …… யெனவேகி
எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ
யிடுங்கா வலன்றன் …… மருகோனே
(திருப்புகழ் 1265 பெருங்காரியம் போல் – பொதுப்பாடல்கள்)
என்று பாடுவார். அதாவது பெரிய காட்டிற்குச் சென்று, இளைய வீரனாம் தம்பி லக்ஷ்மணன் பின் தொடர, காணாது போன மாது சீதை எங்கே என்று தேடிச் சென்று புறப்பட்டு, அனுமன் என்னும் வானரத்தின் மூலம் இலங்காபுரியில் நெருப்பை வைத்த அரசனான ராமபிரானின் மருகனே என்பது இவ்வரிகளின் பொருளாகும். இந்தத் திருப்புகழில் அனுமனைப் பற்றிச் சொல்கிறார்.
அனுமன் மட்டுமல்லாது சூரியனின் மகனான சுக்ரீவன் பற்றியும் சொல்கின்ற ஒரு திருப்புகழ் உண்டு.
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து …… பரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி ராவ ணன்ற …… னுறவோடே
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் …… மருகோனே
(திருப்புகழ் 161 சுருளளக பார – பழநி)
சூரியனுடைய மகனான சுக்ரீவனின் அரண்மனை வாயில் மந்திரியாகிய அனுமானுடைய உதவியுடன் நேராகப் பணிந்து, ஸ்ரீராமர் தன்னை அன்புடனும் தகைவுடனும் அழைப்பதற்கு முன்னமேயே தானே பணிவுடன் சென்று, பக்தியுடன் சரணாகதி அடைந்த விபீஷணன், பொன் மகுடம் முடியில் சூட்டப்பட்டு நின்றான். அதனால் இராவணன் தன் உறவினர்களுடனும் படைகளுடனும் இறந்து நெருப்பிற்கு இரையாகி மடிய,
மாறாத பக்தி உடைய தேவர்கள் இந்திர லோகத்தில் குடி புகுந்து மீண்டும் வாழவும், இராவணனிடம் பகை கொண்ட, ரகு குலத்தில் வந்த தலைவனான இராமச் சந்திர மூர்த்தியின் மருகனே என்பது பாடலின் பொருளாகும்.
பாற்கடலை கடைந்தபோது வாலி ஒருபுறமும் திருமால் ஒருபுறமும் நின்று வாசுகியைக் கயிறாகக் கொண்டு கடலைக் கடைந்தனர் என ஒரு திருப்புகழில் அருணகிரியார் குறிப்பிடுவார்.
மலையை மத்தென வாசுகி யேகடை
கயிறெ னத்திரு மாலொரு பாதியு
மருவு மற்றது வாலியு மேலிட …… அலையாழி
வலய முட்டவொ ரோசைய தாயொலி
திமிதி மித்திமெ னாவெழ வேயலை
மறுகி டக்கடை யாவெழ மேலெழு …… மமுதோடே
துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள
வயலை யற்புத னேவினை யானவை
தொடர றுத்திடு மாரிய கேவலி …… மணவாளா
(திருப்புகழ் 914 முலை மறைக்கவும் – வயலூர்)
அந்தச் சமயத்தில் மேலே எழுந்த அமுதுடனே அதற்கு ஒப்பாக வந்த அழகிய மயில் போன்ற லக்ஷ்மியை தன்னுடன் கொண்ட திருமாலையும் இப்பாடலில் அவர் பாடுகிறார். இதன் பிறகு வாலியுடன் சுக்ரீவன் போர் செய்த காட்சியை வேறு ஒரு திருப்புகழில் விவரிக்கிறார்.
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய
குரங்கைச் செற்றும கோததி தூளெழ நிருதேசன்
குலங்கட் பட்டநி சாசரர் கோவென
இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய
குமண்டைக் குத்திர ராவண னார்முடி அடியோடே
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல்
ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென விருதூதும்
(திருப்புகழ் 493, விடுங்கை)
ஏழு மராமரங்கள் துளைத்தது, வாலி வதம் செய்தது, இராவணாதியர்களை அழித்தது என மீதுமுள்ள இராமகாதையை மீண்டும் ஒரு முறை அருணகிரியார் இத்திருப்புகழில் பாடியுள்ளார்.
வாலி வதம் இன்னமும் சில திருப்புகழ் பாடல்களில் இடம் பெற்றிருக்கிறது. அவற்றை நாளைக் காணலாம்.