October 18, 2021, 4:11 pm
More

  ARTICLE - SECTIONS

  மார்கண்டேயனாக வாழ சீந்தில் கொடி!

  chithil kodi - 1

  சீந்தில் முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. பேதி, வெள்ளை படுதல், ஆகியவை குணமாகும். கிழங்கு, மேகம், காய்ச்சல், கழிச்சல், மாந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றைக் குணமாக்கும். இலை, தண்டு உடல் பலத்தை அதிகரிக்கும். சிறுநீர் பெருக்கும். முறைக் காய்ச்சல் தீர்க்கும். செரித்தல் குணமாகும்; வாதநோய்கள், கிரந்தி முதலியவை கட்டுப்படும்.

  பல்லாண்டு வாழும் ஏறு கொடி வகையைச் சார்ந்தது. கிளிப்பச்சை நிறமான இதய வடிவ இலைகள், 5-10 செ.மீ. வரை நீளமானவை, தெளிவான 7-9 நரம்புகளுடன் இருக்கும். தண்டு பச்சையானது, சாறு நிறைந்தது, தக்கையான தோலால் மூடப்பட்டிருக்கும். தண்டும், கிளைகளும் வெண்மையான சுரப்பிப் புள்ளிகளுடன் காணப்படும். கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும் பூக்கள், மஞ்சளானவை, கொத்தானவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை.

  காய்கள் உருண்டையானவை, கொத்தானவை, பச்சையானவை. பழங்கள் சிவப்பானவை, பட்டாணி அளவில் காணப்படும். இந்தியாவின் வெப்பமண்டலப் பிரதேசம் முழுவதும் வளர்கின்றது. காடுகளிலும் வேலியோர மரங்களிலும் படர்ந்து காணப்படும். பழங்கால இலக்கிய நூல்களில் பொற்சீந்தில் கொடி என்கிற பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி, சஞ்சீவி, ஆகாசவல்லி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டுகள் அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

  வயோதிகம் வாட்டும் போதும், தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்திலும், உடல் நலனை மீட்டெடுக்க சீந்தில் போதும்! பல பருவங்களைக் கடந்து வாழும் ‘மூலிகை மார்க்கண்டேயரான’ சீந்தில் கொடி

  சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்களைக்கொண்டது சீந்தில். ‘வல்லி’ என்றால் ‘கொடி’ என்ற பொருளில், கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த‘வல்லி’ எனும் பெயர். அமிர்தம் என்றால் ‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற அர்த்தத்தில் ‘அமிர்தை’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் பொற்சீந்தில் எனும் இனமும் உண்டு.

  மெனிஸ்பெர்மேசியே’ (Menispermaceae) குடும்பத்தின் உறுப்பினரான சீந்தில் கொடியின் தாவரவியல் பெயர் ‘டினோஸ்போரா கார்டிஃபோலியா’ (Tinospora cordifolia). ‘ஃபுரானோலேக்டோன்’ (Furanolactone), ‘டினோஸ்போரின்’ (Tinosporin), ‘பெர்பெரின்’ (Berberine), ‘பால்மடைன்’ (Palmatine) போன்ற மருத்துவ வேதிக்கூறுகளை சீந்தில் அதிகமாக வைத்திருக்கிறது.

  சாதாரண சளியுடன் வரும் காய்ச்சலுக்கு ஒரு அடி நீளமான சீந்தில் தண்டிலிருந்து, அதன் மேல் தோலை அகற்றி, இடித்து, 1 லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் அளவாக இரசம் செய்யவும். ஒரு கோப்பை அளவு இந்த இரசத்தைப் பருக வேண்டும். இதேபோல் மூன்று நாட்களுக்கு, தினம் மூன்று வேளைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

  நோயால் இளைத்த உடல் உறுதியடைய முதிர்ந்த கொடிகளை, தோல் நீக்கி, உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை வேளைகளில், லு தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் பாலுடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும்.

  நாவறட்சி, தாகம் குணமாக மேல் தோல் நீக்கிய சீந்தில் தண்டு, நெற்பொரி, வகைக்கு 50 கிராம், நசுக்கி, ஒரு லிட்டர் நீரில் இட்டு, ரு லிட்டராக சுண்டக்காய்ச்சி, வேளைக்கு 50 மி.லி. வீதம், 4 வேளைகள் குடிக்க வேண்டும்.

  சீந்தில் கிழங்கை நெய் வடிவில் காய்ச்சி, உணவு வகைகளில் சேர்த்துவர, பசித்தீ அதிகரித்து வயிற்று மந்தம் நீங்கும்.

  இதன் கிழங்குக் குடிநீர், சுரத்தைக் குறைக்கும் நேரடி மருந்து. செரிமானக் கருவிகள் சோர்வடைந்து, பசியும் ருசியும் இல்லாமல் அவதியுறும் போது, காய்ந்த சீந்தில் கொடி, லவங்கப்பட்டையை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, ‘ஊறல்-பானத்தை’த் தயாரித்து, செரிமானத்துக்கு உற்சாகமூட்டலாம்.

  நீரிழிவு நோயில் உண்டாகும் அதிதாகத்தைக் குறைக்க சீந்தில் உதவும் என்கிறது தேரன் வெண்பா. சீந்தில் கிழங்கால் பித்தம், பேதி, மாந்தம், மேக நோய்கள் போன்றவை சாந்தமடையும் என்பதை ’சீந்திற் கிழங்கருந்த தீபனமா மேகவகை…’ எனும் பாடல் தெரிவிக்கிறது.

  மருந்தாக: இன்சுலின் சுரப்பை அதிகரித்து, அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் உற்பத்தியாகும் காரணிகளைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க சீந்தில் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  எலும்புகளுக்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு, எலும்புகளின் திண்மையை அதிகரித்து முதிர்ந்த வயதிலும் வீறுநடை போட சீந்தில் துணை நிற்கிறது. புற்று செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு, புற்று நோயின் அதிகாரத்தைக் குறைக்கும். தனது எதிர்-ஆக்ஸிகரணி செயல்பாடு மூலம், நமது உடல் உறுப்புகளின் செயல்திறனைப் பன்மடங்கு அதிகரிக்கிறது.

  வீட்டு மருந்தாக: உள்ளங்கை, பாதங்களில் தோன்றும் எரிச்சலுக்கு, சீந்தில் சூரணத்தைத் தண்ணீரிலிட்டுப் பருக, எரிச்சலுக்கு நிவாரணம் கிடைக்கும்.

  chithil kodi 1 - 2

  தலைபாரம், மூக்கில் நீர்வடிதல், அடுக்குத் தும்மல் போன்ற பீனச (சைனசைடிஸ்) குறிகுணங்களுக்குச் சீந்தில் சிறப்பான பலன் அளிக்கும். சீந்தில் துணைகொண்டு தயாரிக்கப்படும் ‘சீந்தில்-சுக்கு பால் கஷாயம்’, வாத நோய்களுக்கான மருத்துவப் பொக்கிஷம். சீந்தில், இஞ்சியின் நுண்கூறுகள், சித்த மருத்துவத்தின் கூட்டு மருத்துவத் தத்துவத்துக்கு ஆதாரம். மெலிந்த உடலுக்கு வலுவைக் கொடுக்க, சீந்தில் சூரணத்தோடு பூனைக்காலிச் சூரணத்தைச் சிறிதளவு சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிடலாம்.

  சீந்தில்சர்க்கரை: சீந்தில் கொடியிலிருந்து நுணுக்கமாக உருவாக்கப்படும் ‘சீந்தில் சர்க்கரை’ (சீந்தில் மா) எனும் சித்த மருந்து, தோல் நோய் முதல் நீரிழிவு நோய்வரை கட்டுப்படுத்தும் திறமை வாய்ந்தது.

  தோல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் சித்த மருந்துகளில், சீந்தில் சர்க்கரையின் சேர்மானம் மருந்தை மேலும் வீரியமாக்கும். வெண்ணிறத்துடன் கைப்புச் சுவையை உணர்த்தும் சீந்தில் மா, ஆரம்ப நிலை ஈரல் பிரச்சினைகளுக்கான மருந்தும்கூட!

  இதன் புகையைச் சுவாசிக்கப் பல நோய்கள் குறையும் என்பதால், காய்ந்த சீந்தில் கொடியைப் புகை போடும் வழக்கம் கிராமங்களில் உண்டு. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, இதன் கிழங்குத் துண்டுகளை மாலையாக்கி அணிந்துகொள்ளும் பழக்கமும் சில பகுதிகளில் இருக்கிறது.

  இளம் சீந்தில் தண்டைவிட, கசப்பு ஊறிய முற்றிய சீந்தில் கொடிக்கே மருத்துவக் குணங்கள் அதிகம். முதிர்ந்த சீந்தில் கொடியைக் காயவைத்துப் பொடித்து, கற்கண்டுத் தூள் சேர்த்து, பாலில் கலந்து பருகுவது உடலை உரமாக்கி, ஆயுளை அதிகரிப்பதற்கான டானிக்.

  பனிக்காலத்தில் ஏற்படும் சளி, தலைபாரத்துக்குச் சீந்தில் சாறு, கறிவேப்பிலைச் சாறு, கற்பூரவள்ளிச் சாறு, மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மருந்தாகப் பயன்படுத்தலாம்.

  சீந்தில் கொடி, பொடுதலை, வல்லாரை, திப்பிலி போன்ற மூலிகைகளின் சாற்றைச் சுண்டச் செய்து தயாரிக்கப்படும் ‘சுரச’ வகை மருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும்.

  குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க சீந்தில் கொடியின் சிறு துண்டை எண்ணெய்யில் வறுத்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம்.

  ஜலதோஷத்திற்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிப்பார்கள். அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருத்துவதில் சீந்தில் சர்க்கரை உபயோகப்படுத்தபடுகிறது.

  சீந்தில் கொடியின் மருத்துவப் பயன்கள்
  பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்

  நீரிழிவு, இருமல், மண்ணீரல் கோளாறுகள், கபம், வாந்தி, காமாலை, ஜுரம், பலவீனம், அஜீரணம், வாதநோய், கிரந்தி போன்ற நோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு சீந்திலை கஷாயம் போல செய்து சாப்பிட்டால் பூரண குணம் பெறலாம்.

  மூட்டு வலி குணமாகும்
  ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டுவலியால் உண்டாகும் கடுமையான மூட்டு மற்றும் இணைப்பு வலிகளை சீந்தில் கொடி கொண்டு குணமாக்கலாம். சீந்தில் தண்டை பொடி செய்து, பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் மூட்டு வலி பறந்தோடும்.

  வீக்கத்தை கரைக்கும்
  புண்கள், வீக்கம், கட்டி போன்றவற்றிக்கு சீந்தில் இலையை வாட்டி பற்று போல போட்டால் விரைவில் வீக்கம் மற்றும் புண்களை ஆற்றும். மேலும் சீந்தில் இலையை வேப்ப எண்ணெய்யில் வதக்கி புண்களின் மேல் வைத்துக் கட்டி வந்தாலும் புண்கள் ஆறும். மேலும் சீந்தில் கொடி எல்லா கஷாயங்களிலும் உப பொருளாக பயன்படுத்தபடுகிறது.

  பார்வைத்திறன் மேம்படும்
  சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களின் மேல் தடவி வந்தால், கண் பார்வை தெளிவடையும்.

  வெயில் காலத்தில் வரும் மயக்கம், கிறுகிறுப்பு ஆகிய அனைத்து பிரச்சனைக்கும் சீந்தில் தண்டுச் சாற்றைப் பசும்பாலில் கலந்து உட்கொண்டால் போதும்.

  மலசிக்கலை தீர்க்கும்
  சீந்தில் பொடி ஜீரண சக்தியை தூண்டும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கலை சரி செய்யும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

  காய்ச்சலுக்கு அருமருந்து
  சீந்தில் கொடி அடிக்கடி வரும் காய்ச்சலுக்கு சிறந்த மூலிகை மருந்தாக விளங்குகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் காய்ச்சலின் அறிகுறிகளை முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கிறது.

  சீந்தில் கொடியை காயவைத்து பொடித்து வைக்கவும். இதை பசும்பாலில் கற்கண்டுத்தூள் சேர்த்து பாலில் கலந்து குடித்துவந்தால் ஆயுள் அதிகரிக்கும்.

  சீந்தில் கொடியை இடித்து குளிர்ந்த நீரில் ஊறவைக்க வேண்டும். 10 மணி நேரம் கழித்து அதை அப்படியே கடைந்து நீரை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். அதில் மேலும் சிறிதளவு நீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். தொடர்ந்து வெயிலில் வைத்து எடுக்கும் போது அந்த பாத்திரத்தின் அடியில் வெண்மையான மாவு போன்ற பொருள் கிடைக்கும். இதுதான் சீந்தில் மா அல்லது சீந்தில் சர்க்கரை என்றழைக்கபடுகிறது.

  காய்ச்சலுக்கு பிறகு வயதுக்கேற்ப ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரை வாயில் இட்டு நீர் குடிப்பதால் கடும் காய்ச்சல் உபாதைக்கு பிறகு வலிவிழந்த உடல் பலமாக கூடும்.

  சீந்தில் சர்க்கரை இருமல், மண்ணீரல், வாந்தி, ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு ஏற்றது. ஈரல் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் ஆரம்ப கட்டத்தில் இதை சாப்பிட்டு வந்தால் ஈரல் பலமாகும்

  நாள்பட்ட செரிமான பிரச்சனை கொண்டிருப்பவர்கள் சீந்தில் கொடியுடன் அதிமதுரப்பொடி சிறிதளவு எடுத்து, அதோடு சோம்பு. பன்னீர் ரோஜா சேர்த்து நீர் விட்டு ஊறவைக்க வேண்டும்.

  பிறகு அந்த நீரை வடிகட்டி தினமும் கால் டம்ளர் அளவு குடித்துவரவேண்டும். இது வயிற்று உப்புசம், நாள்பட்ட செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்தும்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,564FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-