― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: தாமிரபரணி ஆற்றின் புகழ்!

திருப்புகழ் கதைகள்: தாமிரபரணி ஆற்றின் புகழ்!

- Advertisement -
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் (பகுதி 76)
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்பமும் துன்பமும் – திருச்செந்தூர்
தாமிரபரணி ஆறு – தொடர்ச்சி

தமிழ் நாட்டிலேயே உருவாகி, தமிழ் நாட்டிலேயே கடலில் கலக்கிறது என்ற பெருமை பெற்ற ஒரே நதி தாமிரபரணி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கும் இந்த நதி, திருநெல்வேலி மாவட்டத்தில் 60 சதவீதம் அளவிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீதம் அளவிலுமாக மொத்தம் 125 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, தனது ஓட்டத்தை அந்த இரு மாவட்டங்களுக்குள் அடக்கிக் கொள்கிறது.

‘தாமிரபரணி மகாத்மியம்’ என்று தனியாக ஒரு நூல் உருவாகும் அளவுக்கு அதன் பெருமைகள் ஏராளமாக நிரம்பிக் கிடக்கின்றன. தாமிரபரணியின் பிறப்பிடம், அமைந்துள்ள மலை மீது அமர்ந்துதான் அகஸ்திய முனிவர் தமிழ் மொழியை உருவாக்கினார் என்று புராணங் கள் கூறுகின்றன.

இப்போது உள்ளது போன்ற தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது.

tanirabarani e1537928935362

மகாபாரத இதிகாசம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த மகாபாரதத்திலேயே தாமிரபரணியின் புகழ் பாடப்பட்டு இருக்கிறது. பாண்டவர்களில் ஒருவரான தர்மர், வனவாசத்தின் போது வசிப்பதற்கு ஏற்ற இடத்தைக் கூறும்படி தௌம்யர் என்ற முனிவரிடம் கேட்கிறார். முனிவர் தௌம்யர், பல இடங்களைப் பற்றி விரிவாகச் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு கூறுகிறார்–

tamirabarani thai

‘‘குந்தியின் புதல்வனே! தாமிரபரணியைப் பற்றிச் சொல்வேன், அதனைக் கேள்! மோட்ச பலனை விரும்புகிற தேவர்களால் எந்த இடத்தில் ஆசிரமத்தில் தவம் செய்யப்பட்டதோ, கோகர்ணம் என்று மூவுலகிலும் பிரசித்தி பெற்ற அந்த தாமிரபரணி என்ற ஷேத்திரம் இருக்கிறது. அவ்விடத்தில் குளிர்ந்த ஜலமுள்ளதும், அதிக ஜலமுள்ளதும், புண்ணியமானதும், மங்களகரமானதும், மனதை அடக்காத மனிதர்களால் அடைய மிக அரியதுமான மடு இருக்கிறது. அந்த இடத்தில் உள்ள தேவசஹம் என்கிற மலையில் மரங்களாலும், புல் முதலியவைகளாலும் நிறைந்தும், கனிகளும் கிழங்குகளும் உள்ளதும், புண்ணியதுமான அகஸ்தியருடைய ஆசிரமம் இருக்கிறது’’.

இவ்வாறு தாமிரபரணி குறித்தும், அது உருவாகும் மேற்குத் தொடர்ச்சி மலை குறித்தும், மகாபாரதத்தில் கூறப்பட்டு இருப்பதால், அந்தக்காலத்திலேயே தாமிரபரணி நதியின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தி இயற்றப்பட்ட, பெருமை மிகு ஸ்ரீமத் பாகவதத்திலும் தாமிரபரணி ஆறு பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஸ்ரீமத் பாகவதத்தின் பதினோறாவது காண்டம், ஐந்தாவது அத்தியாயம், முப்பத்தி எட்டாவது சுலோகத்தில் முனிவர் நாரதர், நிமிச் சக்கரவர்த்தியிடம் ‘‘இந்த கலியுகத்தில் பல நாராயண பக்தர்கள் இருப்பார்கள். இந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் தோன்றுவார்கள். என்றாலும், குறிப்பாக தென்இந்தியாவில் அநேகம் பேர் தோன்றுவார்கள்.

tamirabarani mandap

இந்த கலியுகத்தில் திராவிட தேசத்து புண்ணிய நதிகளான தாம்ரபரணி, கிருதமாலா, யஸ்வினி, மிகவும் புண்ணியம் வாய்ந்த காவேரி மற்றும் பிரதீசி, மகாநதி ஆகிய நதிகளின் நீரைப் பருகுபவர்கள், கிட்டத்தட்ட பரமபுருஷராகிய வாசுதேவரின் தூய இருதயம் படைத்த பக்தர்களாக இருப்பார்கள்’’. இவ்வாறு ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

பழங்கால தமிழ் இலக்கியங்களில் ‘பொருநை’ என்ற பெயரில், தாமிரபரணி ஆற்றின் புகழ் பல இடங்களில் பாடப்பட்டு இருக்கிறது. மாமன்னர் அசோகரின் பாறைக் கல்வெட்டுக்களிலும் தாமிரபரணி ஆறு இடம்பிடித்து இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டினர் பலர், இந்தியாவின் புகழ் மிக்க வரலாறு பற்றிக் கேள்விப்பட்டு, அதனை நேரில் பார்க்க இங்கே வந்து சுற்றுப்பயணம் செய்து, தாங்கள் கண்டவற்றை ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் கி.மு. 5–ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொரோட்டஸ், பிளினி ஆகியோரின் குறிப்புகளிலும் தாமிரபரணி கூறப்படுகிறது.

கி.பி. 5–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிளாடியஸ் தாலமி, தனது ‘ஜியாக்ரபி’ என்ற புத்தகத்தின் 7–ம் பாகம் முதல் அத்தியாயத்தில் தாமிரபரணி ஆறு பற்றியும், கொற்கை நகர் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version