September 28, 2021, 12:03 pm
More

  ARTICLE - SECTIONS

  இயற்கை உரத்திற்கு மட்டுமல்ல இதயத்தின் தரத்திற்கும் கொழுஞ்சி!

  kozhuntchi - 1

  கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும்.

  இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் தழை-உரமாகப் பயன்படுத்துவர்.

  இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் பிற தழையுரம் போட்ட இடத்தைவிட மிகச் செழிப்பாக வளரும். விளைச்சல் நன்றாக இருக்கும்.

  இது இந்தியா மற்றும் இலங்கையில் பொதுவாக காணப்படுகிறது. இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

  மருத்துவப் பயன்கள்:
  கொழுஞ்சியின் முழுத்தாவரமும் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன. இது, மனிதர்களுக்கு உண்டாகும் மிதமான பேதி மற்றும் – பூச்சினை அகற்ற உதவுகிறது.

  கொழுஞ்சியின் விதைகளின் – சாறு, வயிற்றில் பூச்சிகள் உண்டாவதைத் தடுக்கும். குறிப்பாக குழந்தைகளின் தோல் வியாதிகளுக்குப் புறப்பூச்சாகப் பயன்படும்.

  கொழுஞ்சியின் வேர் செரிமானம், தீராத வயிற்றுப்போக்கு இவற்றைக் குணப்படுத்தும்; பட்டை மிளகுடன் பொடித்து வயிற்று வலிக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

  விவசாயிகளின் தோழனாகத் திகழ்கிறது. வயல்களில், நெல்மணி நாற்றுகளை நாடும் சமயத்திற்கு ஓரிரு வாரங்கள் முன்னர் அந்தச் செடிகளை, விதைகள் மூலம் நட்டு, வயலில் வளர்த்து வருவார்கள்.

  மழை பொழிய ஆரம்பித்ததும், வளர்ந்து சில நாட்களே ஆன கொழுஞ்சி செடிகளை, சேற்றில் கலந்து மண்ணில் பரவும் வகையில், வயலை உழுது விடுவார்கள். அதன் பின்னரே, வயலில், நெல் நாற்றுக்களை நடுவார்கள்.

  வயலில் வளர்த்து, வயல் மண்ணிலேயே கலந்த கொழுஞ்சி தான், அந்த நெற்பயிருக்கு சிறந்த இயற்கை உரமாகத் திகழும். சாம்பல், மணிச்சத்து மற்றும் தழைச் சத்து மிக்க, இந்த கொழுஞ்சி உரம், நெற்கதிர்களை விரைவில் செழித்து வளர வைத்து, நல்ல விளைச்சலை உண்டாக்கும் தன்மை மிக்கதாக விளங்குவதால்தான், கொழுஞ்சி செடிகளை வயலில் வளர்த்து, இயற்கை உரமாக்குகிறார்கள். இயற்கை கொழுஞ்சி உரத்திற்கு, விவசாயிகளிடையே ஏகப்பட்ட தேவையும் நிலவுகிறது.

  தோட்டங்களில், குழி வெட்டி, அதில் கொழுஞ்சி செடிகளைப் போட்டு சற்று காலம் மூடி வைக்க, செடிகள் மக்கி, நல்ல இயற்கை உரங்களாக மாறும். இவற்றை நெற்பயிர் விளையும் நிலங்களில் இட, பயிர்கள் செழித்து வளரும்.

  கொழுஞ்சி உரத்தில், தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மிகுந்து இருக்கின்றன. இதனால், மண்ணிற்கு தேவையான அனைத்து வளங்களும், இந்த ஒரே உரத்தில் கிடைத்து விடுகின்றன. ஒரு முறை கொழுஞ்சி இயற்கை உரத்தை நிலத்தில் இட்டால், குறைந்த பட்சம் ஐந்தாறு ஆண்டு காலம், மண்ணை வளமாக்கி வைத்திருக்கும்,

  கூட்டு இலைகளுடன் கூடிய நீல வண்ண மலர்களுடன் வெடிக்கும் தன்மையுள்ள காய்களைக் கொண்ட கொழுஞ்சி, வயல் வெளிகளிலும் காணப்படும்.
  உடலுக்கு, ஊட்டச்சக்தியையும், எதிர்ப்பு சக்தியையும் அளிக்கவல்லது.

  கோழையகற்றுதல், மலத்தை இளக்கும், தாது ஊக்கமூட்டும், சீதமகற்றும், பூச்சியை வெளியேற்றும். வாயுவை நீக்கும். நரம்பு மண்டலத்தை ஊட்டமுடைய தாக்கும், விடத்தை முறிக்கும், குடல்புண் குணமாகும், சிறுநீர் பெருக்கும், வீக்கக் கட்டிகளைக் கரைக்கும், ஆஸ்மாவைப் போக்கும், இரத்த மூல வியாதியைப் போக்கும், மேகவியாதி, இருதய நோய், குட்டம் ஆகிய வியாதிகளைக் குணமாக்க வல்லது.

  இதன் வேரை இடித்துச் சூரணமாகச் செய்து சிலிமியில் வைத்து நெருப்பிட்டுப் புகையை உள்ளுக்கு இழுக்க அதிக கபத்தினாலுண்டான இருமல், இரைப்பு, நெஞ்சடைப்பு இவை போகும்.

  சுவாச பாதிப்புகளை சரியாக்கி, சளி மற்றும் ஆஸ்துமாவை விரட்டும். குஷ்டம் முதலிய சரும வியாதிகளுக்கு மருந்தாகிறது. உடலில் உள்ள வீக்கத்தைக் கரைக்கும். குடல் புண்களை சரி செய்யும். செடியின் வேரை மென்று சாற்றை விழுங்க, உடல் சூட்டினால் ஏற்பட்ட வயிற்று வலி, சிறுநீர்க் கடுப்பு போன்றவை, சில மணித்துளிகளில் தீரும்

  இதய பாதிப்புகளை சரி செய்து, இரத்த நச்சுக்களை அழிக்கும். வயிற்றுப் பூச்சிகளை அழித்து, மலச்சிக்கலை போக்கும் தன்மை மிக்கது, கொழுஞ்சி செடி.

  கொழுஞ்சி இலைப்பொடி!

  பொட்டுக்கடலை, துவரம் பருப்பு மற்றும் கொழுஞ்சி இலைப்பொடி இவற்றை சம அளவு எடுத்து, இவற்றின் அளவில் நான்கில் ஒரு பங்கு அளவு மிளகுத்தூள் மற்றும் இந்துப்பு சேர்த்து, நன்கு அரைத்து, தூளாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியை தினமும், சாப்பாட்டில் நல்லெண்ணெய் ஊற்றி பொடி சாதம் போல சாப்பிட்டு வர, வயிற்றில் உண்டான பூச்சிகளினால் ஏற்பட்ட வயிற்று வலி குணமாகி, பூச்சிக்களும் அழிந்து வெளியேறி விடும்.

  கொழுஞ்சி துவையல்:
  செடியில் பறித்த கொழுஞ்சி இலைகளை, நன்கு அலசி, வாணலியில் நல்லெண்ணை இட்டு அதில் வதக்கிய பின்னர், வதக்கிய கொழுஞ்சி இலைகளோடு, சிறிது காய்ந்த மிளகாய், மல்லி, சீரகம், புளி மற்றும் இந்துப்பு சேர்த்து, அம்மியில் அரைத்து, சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். கோடைக்கால சாப்பாட்டில் இந்த துவையலைச் சேர்த்து சாப்பிட, உடலுக்கு குளிர்ச்சி அளித்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

  கொழுஞ்சி தேநீர்!
  கொழுஞ்சி, துளசி, ஆவாரை, கீழாநெல்லி மற்றும் கிராம்பு இவற்றை உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் கலந்து தேநீராகப் பருகி வர, தலைவலி, உடல் வெம்மை போன்றவை நீங்கி, உடல் அசதி விலகும்.

  கொழுஞ்சி வேருடன் அதில் பாதி அளவு மிளகுத்தூள் சேர்த்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, நீர் சுண்டியதும், அந்த நீரை தினமும் இரு வேளை பருகி வர, பித்தத்தால் ஏற்பட்ட உடல் நலக் கோளாறுகள், கல்லீரல் வீக்கம், வயிற்று வலி மற்றும் செரிமானமின்மையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் சரியாகி விடும்.

  கொழுஞ்சி வேரின் தூளை, தூபக்கால் நெருப்பில் இட்டு, அந்தப் புகையை சுவாசித்து வர, சளியினால் உண்டான மூச்சிரைப்பு, நெஞ்சு வலி மற்றும் சளி இருமல் பாதிப்புகள் விலகும்.

  வாய்ப்புண் நீங்கும் :
  வேர்ப்பொடியை சிறிது மோரில் கலந்து பருகி வர, இரத்தத்தில் சேர்ந்த நச்சுக்களினால் ஏற்பட்ட கட்டிகள், முகப்பருக்கள் நீங்கி, நச்சுக்கள் அழிந்து, உடல் நலமாகும்.

  kuzhuntchi leaf - 2

  வேர்ப்பொடியை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாய் கொப்புளித்து வர, வாய்ப்புண், பூச்சிப்பல் மற்றும் பல் வலி பாதிப்புகள் நீங்கும்.

  வயிற்று வலியைப் போக்க, கொழுஞ்சி !
  கொழுஞ்சி செடியைப் பிடுங்கி, வேருடன் கூடிய முழுச்செடியை உலர்த்தி, அரைத்து, அதை சிறிது நீரில் இட்டு நன்கு கொதித்து வந்ததும், ஆற வைத்துப் பருகி வர, தீராத வயிற்று வலியும் தீர்ந்து விடும்.

  கொழுஞ்சி விதைகளை காயவைத்து, வறுத்தரைத்து வைத்துக்கொண்டு, காபித்தூள் போல டிகாக்ஷன் உண்டாக்கி, பாலில் கலந்து பனை வெல்லம் சேர்த்து பருகி வர, உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.

  10 கிராம் வேருடன் 5 கிராம் மிளகு சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மில்லியாக்க் காச்சி 50 மி.லி. அளவாகக் காலை மாலை தினம் இருவேளை 5 அல்லது 7 நாள் கொடுக்கப் பித்த சம்பந்தமான ரோகங்கள், மண்ணீரல், கல்லீரல், குண்டிக்காய் இவற்றில் உண்டான வீக்கம், வயிற்று வலி, அஜீரணப்பேதி ஆகியவை குணமாகும்.

  இதன் வேரை 10 கிராம் மென்று சாற்றை விழுங்கி வெந்நீர் அருந்த எவ்வகை வயிற்றுவலியும் குணமாகும். இதனை வேருடன் பிடுங்கி உலர்த்தி இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு 100 மி.லி. நீரில் போட்டுக் காய்ச்சி வடித்து, குடிநீராகப் பயன்படுத்தலாம். எவ்வகை வயிற்றுவலியும் குணமாகும்.

  இதன் வேர் 100 கிராம், உப்பு 100 கிராம் சேர்த்து அரைத்து மண் சட்டிக்குள் காற்றுபுகாது வைத்து மூடி எரு அடுக்கி தீ மூட்டி எரிக்க உப்பு உருகி இருக்கும். இதை ஆறவிட்டு உலர்த்திப் பொடி செய்து வைக்கவும். இதில் 2-4 கிராம் அளவு மோரில் குடிக்க வாயு, வயிற்றுப்பொருமல், கிருமி, வயிற்றுப்புண், சீதக்கட்டு, வயிற்றவலி ஆகியன குணமாகும். இதன் விதைப் பொடியை கோப்பியாகப் பயன்படுத்தலாம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,481FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-