spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுவிஷக்கடி முதல் மூலம் வரை.. பலன் தரும் நாயுருவி!

விஷக்கடி முதல் மூலம் வரை.. பலன் தரும் நாயுருவி!

- Advertisement -
nauruvi
nauruvi

நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும்.

Achyranthes aspera என்பது நாயுருவியின் தாவரப் பெயர் ஆகும். ஆங்கிலத்தில் Prickly chaff flower என்று அழைக்கிறார்கள். ஆயுர்வேதத்தில் அபமார்க்கா, ஷிகாரி, மயூரா என்றும், தமிழில் நாயுருவி என்ற பெயரோடு கதிரி, சிறுகடலாடி, மாமுனி என்ற பெயர்களாலும் சொல்வதுண்டு.

நாயுருவி வேர் கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக் கலைக்கும்; முக வசீகரத்தை அதிகமாக்கும்.

நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென தனித்துவமான மருத்துவக் குணங்கள் உள்ளன.

நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும்.

நாயுருவி அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய சிறுசெடி. நாயுருவி இலைகள் முட்டை வடிவமானவை, எதிரடுக்கிலே அமைந்தவை.

நாயுருவி தண்டுகள் பட்டையானவை, நாயுருவி மலர்க்கொத்துகள் நீண்டவை. நுனியிலோ கிளைகளிலோ காணப்படும். மலர்கள் சிறியவை. இருபால் தன்மையானவை. நாயுருவி விதைகள், அவற்றைச் சூழ்ந்துள்ள சிறு முட்களுடன் எளிதில் ஒட்டிக்கொண்டு பரவும் தன்மையானது.

தமிழகமெங்கும், தரிசு நிலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஈரப்பாங்கான பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி ஆகிய மாற்றுப் பெயர்களும் நாயுருவி தாவரத்திற்கு உண்டு. நாயுருவி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது.

ஆன்மிகரீதியாகவும் பெரிய முக்கியத்துவம் கொண்டது நாயுருவி. ஓமம் வளர்க்கும்போது காய்ந்த நாயுருவியை அக்னியில் சேர்ப்பது வழக்கம். நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கு உரியதாகவும், தான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும் என்றும் நாயுருவியை ஆன்மிகத்தில் கொண்டாடுகிறார்கள்.

நாயுருவியை எரித்தால் கிடைக்கும்
சாம்பலில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. மலைப்பகுதியில் வளரும் செடிகள் சிவப்பான தண்டுகளுடன், சிவந்த இலைகளுடன் காணப்படும். இவற்றுக்கு செந்நாயுருவி அல்லது படருருக்கி என்கிற பெயர் உண்டு.

நாயுருவி வேரை நீரில் கழுவி, சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். இந்தத் தூளால் பல் துலக்கி வரலாம் அல்லது பச்சை வேரை சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அதனால் (வேப்பங்குச்சியால் பல்துலக்குவது போல) பல் துலக்கி வர பற்கள் உறுதியடையும்.

நாயுருவி வேர் மற்றும் தண்டுகளை நிழலில் காயவைத்து, இடித்துத் தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, தேவையான அளவு வெந்நீரில் குழப்பி, பசையாக்கி, முகத்தில் பூசிவர முகம் பொலிவடையும்.

10 கிராம் நாயுருவி இலைகளை அரைத்து, பசையாக்கி, 10 மி.லி. நல்லெண்ணெயுடன் கலந்து குழப்பி சாப்பிட வேண்டும். காலை, மாலை வேளைகளில் 10 நாட்கள் வரை சாப்பிட இரத்த மூலம் குணமாகும்.

நாயுருவி வேர்த்தூள் லுடன் முதல் 1 கிராம் வரை வெந்நீரில் சாப்பிட்டு வர உடல் பலமடையும். நாயுருவி வேர் அல்லது இலையை அரைத்து பசையாக்கி, மேல் பூச்சாகப் பூச கொப்புளம், சிரங்கு குணமாகும்.

நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் , உணவுக்காக நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும்.

நாயுருவி இலைகளில் அதிகாலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.

நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும். நாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.

நாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

கண் நோய்கள், சரும நோய்கள் ஆகியவற்றுக்கும் நாயுருவியின் விதைகளை உள்ளுக்குள் மருந்தாக உபயோகிக்கலாம்.நாயுருவி இலைகளைப் புதிதாகப் பறித்து, நன்கு மைய அரைத்து உருட்டி தேள் கடிக்குத் தேய்த்தால் உடனே நச்சு நீங்கப் பெற்று நலம் உண்டாகும். நாயுருவி செடியின் இளம் மொட்டுக்களைச் சேகரித்து, கொஞ்சம் இனிப்பு சேர்த்து அரைத்து, மாத்திரை போல உருட்டி உள்ளுக்குள் மருந்தாகக் கொடுத்தால் வெறிநாய்க்கடி விஷம் வெளியேறிப் போகும்.

நாயுருவியின் சமூலத்தை வெயிலில் இட்டுக் காயவைத்து, எரித்து எடுத்த சாம்பலைக் கஞ்சியில் கலந்து உள்ளுக்குக் கொடுக்க ‘மகோதரம்’ என்கிற பெருவயிறு மங்கிப் போகும். இலைக்குடிநீரை வயிற்றைச் சுத்தம் செய்யும் பொருட்டு பேதி மருந்தாகவும் பயன்படுத்தலாம். பிரசவ காலத்தில் நாயுருவி குடிநீரைக் கொடுத்துவந்தால் இடுப்பு வலி தூண்டப்பட்டு எளிய பிரசவத்துக்கு வழி பிறக்கும்.

நாயுருவி இலைகளை மிளகு, பூண்டு இவைகளுடன் சேர்த்து அரைத்து, மாத்திரைகளாகச் செய்து உள்ளுக்குக் கொடுப்பதால் விட்டுவிட்டு வந்து வேதனையைத் தருகிற காய்ச்சல்கள் மறைந்து போகும்.

நன்னாரியுடன் நாயுருவியை சமபங்கு சேர்த்துக் குடிநீராக்கிக் கொடுப்பதால் கொடுமையான குடற்கோளாறுகளும் கட்டுப்படும். நாயுருவியின் இலைக்கொழுந்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து ரத்த மூலம், வெளித்தள்ளிய மூலம், வேர் விட்ட மூலம் என எவ்வித மூலமானாலும் மேற்பூச்சாகப் பூசி வந்தால் விரைவில் மூலம் குணமாகும்.

நாயுருவியின் இலையை கலவாங்கீரையில் (பலவகை கீரைகள் கலந்தது) சேர்ப்பது வழக்கம். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த மூலம், அதிசாரபேதி, சீதள நோய்கள், அதிக வியர்வை, பல் சம்பந்தமான நோய்கள்(பல்லில் ரத்தம் மற்றும் சீழ் வடிதல்) ஆகியன குணமாகும்.நாயுருவி சமூலத்தின் சுட்டெரித்த சாம்பல் பிரசவித்த பெண்களின் உதிரச்சிக்கலைப் போக்கும்.

சிவந்த நாயுருவியை வாத நோய்களைத் தடுக்கவும், குளிர்ச்சியை உண்டாக்கவும் மருத்துவர்கள் பயன்படுத்துவர்.

வெண்மை, சிவப்பு இரண்டு வகை நாயுருவிகளையும் வாந்தி, கபம், கொழுப்பு, வாதம், இதயநோய், வயிறு உப்புசம், மூலநோய், அரிப்பு, வயிற்றுவலி என்பனவற்றைப் போக்குவதற்குப் பயன்படுத்துவர்.

நாயுருவி வேரில் ஊற வைத்த குடிநீர் அல்லது சமூலக் குடிநீர் தயார் செய்து 20 மி.லி. முதல் 35 மி.லி. வரை உள்ளுக்குக் கொடுத்து வந்தால் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும்.

நாயுருவி வேரை 15 கிராம் அளவு எடுத்து, இரவு ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, ஊறிய தெளிந்த நீருடன் சுவை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று வலி, வயிற்றுப்புண் ஆகியன குணமாகும்.

நாயுருவி சாற்றை செம்மறி ஆட்டின் சிறுநீரில் கலந்து உள்ளுக்குக் கொடுப்பதால் சிறுநீர்ப்பையில் சேர்ந்து துன்பம் தரும் கல் கரைந்து வெளியேறி விடும் என்று ஆயுர்வேத நூல்கள் பரிந்துரைக்கின்றன.நாயுருவி விதைகளை எடுத்து விழுதாக அரைத்து, எண்ணெயில் இட்டுக் காய்ச்சிப் பக்குவப்படுத்தி, எண்ணெய் குளியல் செய்வித்தால் தீராத தலைவலியும் தீர்ந்து போகும்.

நாயுருவி சமூல விழுதை நெய் கலந்துஅரிசி கழுவிய நீரில் கலந்து உட்கொள்ளச் செய்தால் பாம்பு விஷம் நீங்கும். நாயுருவி சமூலத்தை அரைத்து விழுதாக்கி, நெல்லிக்காய் அளவு எடுத்து பாலுடன் சேர்த்து உள்ளுக்குக் குடித்தால் சிறுநீர் தடை, சொட்டு மூத்திரம், சிறுநீர்த்தாரை எரிச்சல் ஆகியன குணமாகும்.

நாயுருவி விதையை அரைத்து நெல்லி அளவு எடுத்து, அரிசி கழுவிய நீரில் கலந்து உட்கொள்ளச் செய்தால் ரத்த மூலம் குணமாகும். நாயுருவி வேரை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வெருகடி அளவு எடுத்து சம அளவு மிளகுப் பொடியும் சேர்த்து தேனில் குழைத்து உள்ளுக்குக் கொடுக்க இருமல் குணமாகும்

Pectoral என ஆங்கிலத்தில் சொல்லப்படும் மார்பகத்தசை தொடர்பான நோய்களைத் தீர்க்கும் வல்லமை பெற்றது நாயுருவி.

இதன் இலைச்சாறு 100 மி.லி.+100 மி.லி.எள் நெய் சேர்த்துக் காய்ச்சி சாறு சுண்டியவுடன் வடித்து வைக்கவும். காதில் வலி, எழுச்சி, புண், செவிடு ஆகியன குணமாக இதனைச் சொட்டு மருந்தாக இரு வேளை காதில் விடவும். மூக்கில் சளி, புண்ணுக்கும் இச்சொட்டு மருந்தினைப் பயன் படுத்தலாம்.
இதன் இலைச்சாறு 100 மி.லி.+100 மி.லி.எள் நெய் சேர்த்துக் காய்ச்சி சாறு சுண்டியவுடன் வடித்து வைக்கவும். காதில் வலி, எழுச்சி, புண், செவிடு ஆகியன குணமாக இதனைச் சொட்டு மருந்தாக இரு வேளை காதில் விடவும். மூக்கில் சளி, புண்ணுக்கும் இச்சொட்டு மருந்தினைப் பயன் படுத்தலாம்.

இதன் இலைச் சாறு பிழிந்து 30-50 மி.லி.அளவு குடித்து 7 நாள் உப்பில்லாப் பத்தியம் இருக்க வெறி நாய்கடி, பாம்புக்கடி விடம் தீரும். அரைத்துக் கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

இதன் இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும்.

நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.

விதையைச் சோறு போல் சமைத்து உண்ணப் பசி இராது. ஒரு வாரம் ஆயாசமின்றி இருக்கலாம். மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.

நாயுருவிச் சாம்பல், ஆண் பனை பூ பாளை சாம்பல் சம அளவு சேர்த்து நல்ல நீர் விட்டுக் கரைத்து 1 பொழுது ஓய்வாய் வைத்திருக்க நீர் தெளிந்திருக்கும். அதை அடுப்பேற்றிக் காய்ச்ச உப்பு கிடைக்கும். இவ்வுப்பில் 2 அரிசி எடை தேன், நெய், மோர், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி, நீரேற்றம், குன்மம், பித்தப்பாண்டு, ஆஸ்துமா ஆகியவை தீரும். தூதுவேளை, கண்டங்கத்திரி, ஆடாதொடை இவற்றின் குடிநீர்களை துணை மருந்தாகக் கொள்ளலாம்.

இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும். இதன் சாம்பலில் பொட்டாஸ் உள்ளதால் இதை அழுக்குத் துணி துவைக்கப் பயன் படுத்திவர்.

இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.

இதன் இலைச்சாற்றில் ஏழுமுறை துணியைத் தோய்த்து உலர்த்தி திரி சுற்றி விளக்குத்திரியாகப் போட்டு நெய் தடவி எரியும் புகையை அதில் படிய பிடிக்கவும், புகைக் கரியை ஆமணக்கு நெய் விட்டு மத்தித்து கண்ணில் தீட்ட கண் பார்வைக் கோளாறு தீரும். குளிர்ச்சி தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe