October 27, 2021, 12:13 am
More

  ARTICLE - SECTIONS

  உங்கள் ஆசிரியரை கௌரவியுங்கள்: டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்!

  அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

  dr radhakrishnan
  dr radhakrishnan

  செப்டம்பர் 5 : ஆசிரியர் தினம்
  – ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

  கடவுளும் குருவும் அருகருகில் இருந்தால் முதலில் குருவையே வணங்க வேண்டும் என்றார் கபீர்தாஸ். ஏனென்றால் கடவுளை முதலில் காட்டியவர் குருவே என்று விளக்கமளித்தார்.

  கு என்றால் இருள். ரு என்றால் விலக்குவது என்று பொருள். நம்மில் உள்ள அறியாமை இருளை விலக்கி ஞான விளக்கை ஏற்றுபவர் குரு. அப்படிப்பட்ட குருவை கடவுளை விட உயர்வாக போற்றுகிறது பாரதீய கலாச்சாரம்.

  ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். பாரதரத்னா, சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவர் டாக்டர் சர்வேபல்லி ராதாகிருஷ்ணன் 1888ல் திருத்தணியில் பிறந்தார். இவர் பிறந்த நாளான செப்டம்பர் ஐந்தை 1962 முதல் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். இவர் பதினைந்து முறை நோபல் இலக்கிய விருதுக்கும் பதினோரு முறை நோபல் அமைதி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.

  மகாபாரத காலத்தில் இருந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் அர்ஜுனனையும் உண்மையான குரு சீடன் உறவுக்கு அடையாளமாக வணங்கி வருகிறோம். சர்வேபல்லி ராதாகிருஷ்ணன் தனக்கு கிருஷ்ணனுக்கு சமமானவர் என்று தேசப்பிதா மகாத்மா காந்தி புகழ்ந்தார். “நீங்களே எனக்கு கிருஷ்ணன்! நான் உங்கள் அர்ஜுனன்” என்றார் காந்திஜி. “நீங்கள் என் ஆசிரியர்” என்று ராதாகிருஷ்ணனை பண்டித நேரு வணங்கினார்.

  யுகயுகமாக, பாரம்பரியமாக வரும் சனாதன தத்துத்தை உலகிற்கு நேராக, எளிதாக, தெளிவாக விளக்கிய தீரரான ராதாகிருஷ்ணன் உள்ளத்தையும் அறிவையும் சரியான அளவில் சேர்த்து போதித்தார். தத்துவ சாஸ்திரத்தோடு இலக்கிய இன்பத்தை இணைத்த சிறந்த எழுத்தாளர் ராதாகிருஷ்ணன்.

  நவீன சமுதாயத்திற்கு எப்படிப்பட்ட குரு தேவை, குரு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அவருடைய சுயசரிதையில் தெளிவாக விவரித்துள்ளார். போதிக்கும் குருமார்கள், சோதிக்கும் குருமார்களின் இயல்புகளை விளக்கியுள்ளார்.

  மகாபாரதத்தில் யட்ச பிரச்னையில் யக்ஷன், தர்மனிடம் கேட்கிறான்… மனிதன் மனிதனாக எவ்வாறு ஆவான்? “பயிற்சியாலும் குரு மூலமும்” என்று பதிலளிக்கிறான் தர்மன். குருவுக்கு உள்ள சக்தி அத்தனை உயர்ந்தது.

  குரு எப்படி இருக்க வேண்டும் என்று பாரதிய சனாதன தர்மம் தெளிவாக விளக்குகிறது. குருவுக்கு இருக்க வேண்டிய இயல்புகளும் குருவின் உயர்வும் பற்றி கந்தபுராணத்தில் உள்ள ‘உமா மகேஸ்வர சம்வாதம்’ குருகீதையாக புகழ் பெற்றுள்ளது. குரு அமைதியானவராக, நல்ல நடை உடை பாவனை கொண்டவராக புத்திக்கர்மையும் பாடத்தில் திறமையும் கொண்டவராக புலனடக்கமும் நிக்ரஹ அனுகிரக சாமர்த்தியமும் கொண்டவராக விளங்க வேண்டும் என்று பரமேஸ்வரன் பார்வதி தேவியிடம் எடுத்துரைக்கிறார். தற்போதைய உலகிற்கு இதுபோன்ற குருவே தேவை.

  சாணக்கியரின் கையில் வடிவு கொண்ட சிற்பம் சந்திரகுப்த மௌரியன். சமர்த்த ராமதாசர் தயாரித்த வீர வாள் சத்ரபதி சிவாஜி. ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் உலகிற்கு அளித்த ஆன்மீக சிகரம் சுவாமி விவேகானந்தர். பாரதிய குரு சிஷ்யப் பரம்பரையின் சக்திக்கு இவர்கள் உதாரணங்கள். ஆதிதேவனிடம் தொடங்கி குருபரம்பரை வேத வியாசரிடம் முழுமை அடைந்தது. பாரதிய கலாச்சாரத்தில் இன்றும் அது தொடர்ந்து வருகிறது.

  ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் டாக்டர் சர்வேபல்லி ராதாகிருஷ்ணன். மாணவர்களிடம் ஆசிரியருக்கு எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்பதை அவருடைய வாழ்க்கை கற்றுத்தருகிறது. தன் அறிவுத் திறனால் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

  இன்றைய தினம் ஆசிரியர்களுக்கு சன்மானம் அளித்து கௌரவித்து ஆசிரியர் தினத்தை கொண்டாடுகிறோம். இதற்குப் பின்னால் ஒரு சுவையான சம்பவம் உள்ளது.

  அரசியலுக்கு வரும் முன்பு ராதாகிருஷ்ணன் சென்னை பிரசிடென்சி கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் போன்ற பல கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதுமட்டுமல்ல அவர் ஆந்திர விஸ்வ வித்யாலயம், டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்றவற்றில் வைஸ் சான்சிலராக பணிபுரிந்தார். கீழை நாட்டு மதங்கள் பற்றி போதிப்பதற்கு 1936ல் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று அங்கு சென்று பல ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார்.

  ஆசிரியராக இருந்ததோடு இவர் 1946 இல் இருந்து 1952 வரை ஐநா சபையின் கல்வி கலை இலக்கிய அமைப்பான யுனெஸ்கோவில் இந்தியாவின் பிரதிநிதியாக விளங்கினார். சோவியத் யூனியனில் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவர் 1952 ல் சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1962ல் பாரத தேசத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.

  அப்போது மாணவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்தித்து அவருடைய பிறந்தநாளை கொண்டாட அனுமதிக்குமாறு வேண்டினார். அதற்கு அனுமதிக்காமல் தன் பிறந்த நாளன்று உங்கள் ஆசிரியரை கௌரவியுங்கள் என்று ராதாகிருஷ்ணன் மாணவர்களிடம் தெரிவித்தார்.

  அன்று முதல் ஆசிரியர் தினமாக அவருடைய பிறந்த நாளன்று ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் மாணவர்கள் கௌரவித்து வருவது பெருமைக்குரிய விஷயம்.

  ஆசிரியராக டாக்டர் ராதாகிருஷ்ணன் நமக்களித்த பாடத்தை மறவாமல் ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் இன்றைய நாள் மாணவர்களுக்கு மேலும் கல்வியில் உற்சாகமூட்டட்டும்!

  அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-