குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் :
– S.காளிராஜன் –
~
ஸ்ரீவிநாயகா ஜோதிடம், இலத்தூர்
– போன்: 9843710327
குருப்பெயர்ச்சி: குரு ஒரு ராசியில் ஒரு வருடம் தங்குகிறார். சில நேரங்களில் அதிசாரம் பெறுவதுண்டு. வருகின்ற இந்த குரு பெயர்ச்சியைப் பற்றியும் ஒவ்வொரு ராசிக்குள்ள பலனும் செய்ய வேண்டிய பரிகாரங்களும் பற்றி இங்கே தருகின்றோம்…
குருவைப் பற்றி சொல்வதென்றால்… தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குருவானவர் ஆசிரியர் பொன்னன் என்ற பெயருடையவர். மூவுலகங்களில் புத்தி சக்தியாக விளங்கக் கூடிய அந்த வியாழ பகவானை வணங்குகிறேன். தெய்வீக அறிவுக்கும் வேதாந்த அறிவுக்கும்(ஞானம்) தூய்மைக்கும் மென்மைக்கும் மூலப்பொருளாக விளங்குபவர் குரு.
ஒளி பொருந்திய மேதைகளையும் நன்கு கற்றுணர்ந்த ஞானிகளையும் உருவாக்கக் கூடியவர்.
பலம் படைத்த இவரது தசை இளம் வயதில் வந்தால் கல்வியிலும் தேர்ச்சியிலும் முதல் நிலை அடைவர். நடு வயதில் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். முதுமைக்காலத்தில் வந்தா சந்ததிகள் செழிப்பார்கள். தலைவணங்காத தலைமைப் பதவியை தந்திடுவார். மாபெரும் சாதனைகள் செய்ய வைத்து பெயரெடுக்கச் செய்வர் குரு.
நாட்டை ஆள வைப்பார் நல்லோருடன் சேரவைப்பர். புதிய புதிய முயற்சிகளை செய்ய வைப்பார். விவேகத்தையும் விவரத்தையும் கொடுக்கக் கூடியவர். சிம்மக் குரலைத் தந்து பலரையும் பணியவைப்பார் ஆண் கிரகம்.
சாத்வீக குணமுடையவர். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களின் நாயகன்.
இப்படிபட்ட குரு வருகின்ற பெயர்ச்சிக்கு எந்த ராசியினர்க்கெல்லாம் சுபத்தை தரப் போகிறார் என்பதைக் காண்போம்.
குரு ஜெனன ராசிக்கு கோட்சாரத்தில்
இப்பொழுது ஜென்மத்தில் இருந்தால் உடல் நலம் பாதிக்கும்.
2லிருந்தால், பணம் நிறைய வரும் … குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். செல்வம் செல்வாக்கு சேரும்.
3லிருந்தால் பொருளாதார நெருக்கடி வரும். புதிய முயற்சிகளில் தடை ஏற்படும்.
4லிருந்தால் இடம்விட்டு இடம் மாறுதல் வீண் பழிச் சொல் ஏற்படும்.
5லிருந்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம், புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திரம் கிடைப்பதும் நடைபெறும். அரசு வழி ஆதாயம் உண்டு.
6லிருந்தால் நோய் , கடன் எதிரி தொல்லை போன்றவை நிகழும்.
7லிருந்தால் திருமணம் நடை பெறும் கூட்டுத்தொழில் சிறக்கும். மனைவி மூலம் அனுகூலம் உண்டு. வாகனம் உண்டு.
8லிருந்தால் காரியத்தடை, பொருளாதர நெருக்கடி, தொழில் முடக்கம்.
9லிருந்தால் சிறப்புதான் ஆன்மீகப்பணி அறம்(தானம்) செய்ய விரும்புதல், ஆலயப்பணி செய்யவைக்கும்.
10லிருந்தால் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பது குறைவு. ஜீவனம் கழிப்பதே சிரமத்தை கொடுக்கும்.
11லிருந்தால் லாபம் தான் துன்பத்திலிருந்தவர்களுக்கு குரு பதினொன்றுக்கு வந்தவுடன் சிறப்புதான்.
12லிருந்தால் வீன் விரயம் அலைச்சல் மிகும் சுமாராக இருக்கும்.
மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும் யார் எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
மேஷம் : காலபுருஷனின் முதல் வீடு மேஷம். இந்த ராசிக்கு இதுவரை 10மிடத்தில் இருந்து வந்த குரு நவம்பர்13க்கு பிறகு அதாவது பெயர்ச்சிக்கு பிறகு 11மிடம் செல்வது சிறப்பு. மேஷம் ராசிக்கு நன்மைகளை வாரி வழங்கப்போகிறார் வியாழ பகவான். உத்யோகம் மாற்றம். புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். துன்பக் கடலில் நீந்தியவர்களுக்கு வாழ்க்கையில் தெளிவு பிறக்கும். நண்பர்களிடத்தில் கருத்து வேறுபாடு தலைதூக்கும் கவனம் வேண்டும்.
ரிஷபம் :- காலபுருஷனின் இரண்டாம் வீடு ரிஷபம் … ராசிக்கு இதுவரை 9மிடத்திலிருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு 10மிடம் செல்வது சிறப்பானது இல்லை. மருத்துவச்செலவு சிலருக்கு அறுவை சிகிச்சை, பழைய வாகனம் வாங்குவது அவற்றால் விரயம். இதயம்,உடலில் பங்கம் அதாவது அங்ககீனம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. இவர்கள் பரிகாரம் செய்து கொள்ளல் அவசியமாகிறது. நவகிரகத்தில் இருக்கும் வியாழ பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வர பலன் உண்டு. இந்த தீபம் கொண்டைக்கடலை மீது அகல் வைத்து தீபம் ஏற்றவேண்டும். இன்னொரு பரிகாரம் திருச்செந்தூர் முருகனை வணங்க சிறப்பை காணலாம்.
மிதுனம்: காலபுருஷனின் மூன்றாம் வீடு மிதுனம் காற்று ராசி இரட்டை மனது அறிவிலும் ஆற்றலிலும் ஜொலிக்கப்போகும் ராசி. சும்மாவே அதித புத்திஉள்ள ராசி. கும்பத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக குரு பார்க்கப் போகிறார். சிறப்புதான். ராசிக்கு இதுவரை 8லிருந்து அட்டமத்தோனாகி இருந்துவந்த குரு , பெயர்ச்சிக்கு பிறகு 9மிடம் செல்வது சிறப்புதான். பாக்கிய ஸ்தானத்தில் அமருவது சிறப்புதான் . பதவிகள் உயரும். அரசியல் லாபம் வரும். குருப்பெயர்ச்சி பொன்னான காலமே.
கடகம்:-
காலபுருஷனின் நான்காம் வீடு. நீர் ராசி. ஆகாயம் தத்துவத்தை குறிக்க கூடிய ராசி இதுவரை 7மிடத்திலிருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு 8மிடம் செல்வது சிறப்பல்ல வழக்கு சாதகமாவது இல்லை காரியத்தடை. சொத்து வியாபாரம் ஆகும் பிரயோஜனம் இருக்காது. கடன் ஏற்படும் மாமன், மாமியார் கருத்து வேறுபாடு. வீட்டில் பொருள் விரயம் பணம் விரயம் ஏற்படும். இந்த ராசிக் காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். ஆதிமூலவராகிய விநாயகப் பெருமானை 16முறை வலம் வரவேண்டும் இடம்7முறை சுற்றவேண்டும். கொண்டைக்கடலை தானம் கொடுக்க வேண்டும்.
சிம்மம்:
காலபுருஷனுக்கு 5மிடம் சிம்மம். நெருப்பு ராசி. ராசிக்கு இதுவரை 6மிடத்திலிருந்து வந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு 7மிடம் செல்வது சிறப்பு. உடல் நலம் சரி இல்லாதவர்களுக்கு சரியாகி பூரண குணமடைவார்கள். நலம் பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் .புதிய வாகனம் வாங்க உகந்தகாலம். கும்பத்தில் இருக்கும் குரு7ம் பார்வை பார்க்கிறார். பெயர்ச்சி சிறப்புதான்.
கன்னி:- காலபுருஷனின் ஆறாம் வீடு கன்னி நில ராசி. இதுவரை ராசிக்கு ஐந்தாமிடத்திலிருந்த வியாழன் பெயர்ச்சிக்கு பிறகு 6மிடம் செல்வது சிறப்பல்ல ஆறாமிடம் என்பது ரோகம், ருண ,சத்ரூ ஸ்தானம் அல்லவா. சொத்துப் பிரச்சனை, பாகம் பிரிப்பதில் சண்டை சச்சரவு ,பணமோசடி, பங்குதாரர்கள் பகை ஏற்படும் .இந்தச் சூழ்நிலையிலும் புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். நவகிரகத்தில் இருக்கும் வியாழ பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுவதும் குருவாக இருப்போருக்கு பணிவிடை செய்ய அந்த வியாழ பகவானுக்கு ஆற்றும் பரிகாரம் ஆகும்.
துலாம்:-
கால புருஷனின் 7மிடம் காற்று ராசி காமத் திரிகோணம் இங்கு நீதியரசர் சனிபகவான் உச்சம். இந்த துலாம் ராசிக்கு இதுவரை நான்காமிடத்தில் இருந்துவந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு ஐந்தாமிடம் சென்று அளப்பரியா சந்தோஷத்தை வாரிவழங்கப் போகிறார். துலாம் ராசிக்கு குரு இருக்கும் இடம் ஐந்தாமிடம் பூர்வபுண்ணியஸ்தானம் ஆகும். இன்னொன்று பெரியவிஷயம் கும்பத்திலிருந்து 9ம்பார்வையாக பார்க்கிறார். சந்தான பாக்கியம் கிடைக்கும், புதிய பதவி கிடைக்கும். பழையகடன்வசூல் ஆகும்.. புதியசொத்து வாங்க நேரும் .சிறப்புதான்.
விருச்சிகம்:- காலபுருஷனின் 8மிடம் விருச்சிகம் நீர் ராசி மோட்சத்திரிகோணம். ராசிக்கு இதுவரை மூன்றில் இருந்து வந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு நான்காமிடம் சென்று பலனை கொடுக்க தாமதப் படுத்துவதும். இடம் விட்டு மாறச் செய்வதும். உற்றாரும் சுற்றாரும் பகை ஏற்படும் காலம். பரிகாரம் செய்து கொண்டால் சிறப்பைக் காணலாம். கொண்டக்கடலை தீபம் ஏற்றி வர வியாழன் பகவான் மனம் குளிர்ந்து சந்தோஷத்தை கொடுக்க ஏதுவாகும். திருச்செந்தூர் முருகனை வணங்கிவர நிச்சியம் நல்லதொரு பலன் உண்டு.
தனுசு: – காலபுருஷனின் ஒன்பதாம் வீடு பாக்கியஸ்தானம். ராசிக்கு இதுவரை இரண்டிலிருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு மூன்றாமிடம் செல்வதால் பலன் சற்று குறைவு. பொருள் விரயம், உடல் பங்கம்,வேலைப்பளு அதிகரிக்கும்,வாகனம் வாங்க நேரும் அவற்றால் வீண் செலவு ஏற்படும். வம்பு வழக்கு தேடிவரும். எதிரிகள் தொல்லை ஏற்படும். இந்த ராசிக்காரர்களும் பரிகாரம் செய்யவேண்டியது அவசியம். கோயில்களுக்கு கொண்டைக்கடலை தானம் கொடுப்பதும். அன்னம் தானம் கொடுக்க குருவின் அருளுக்கு பாத்திரமாகலாம். நன்மைகள் பெறலாம்.
மகரம்:-
காலபுருஷனின் பத்தாம் வீடு மகரம். தொழில் ஸ்தானம் ராசிக்கு இதுவரை ஜென்மத்திலிருந்த குரு அதாவது ஒன்றிலிருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு இரண்டாமிடம் சென்று தனத்தை வாரிக் கொடுப்பதில் வள்ளலாகப் போகிறார் குரு. செல்வம் பெருகும் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். இந்த குருப் பெயர்ச்சி சிறப்புதான்.
கும்பம்:- காலபுருஷனின் பதினொன்றாம் வீடு. லாபஸ்தானம் காற்று ராசி … கும்ப கலசத்தை சின்னமாக கொண்டது. ராசிக்கு இதுவரை பனிரெண்டில் இருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு ஜென்மத்திலிருந்து சிரமத்தை கொடுக்கவே செய்வார். வேலையின்றி பொழுதைக் கழிக்கச் செய்வார். அதனால் மற்றோரை முகம் சுழிக்கச் செய்வார். பணம் பறிபோகும் , பொன் பொருள் சேதம், மருத்துதுவச் செலவு, பொருள் தொலைத்து மனக்கஷ்டம் .வீண் பிராயணம் மொத்தத்தில் பலன் குறைவு. பரிகாரம் செய்து கொள்ளவே தவிர்த்து விடலாம் .ஒரு கையளவு கொண்டைக்கடலை எடுத்து தூங்கும்பொழுது தலைக்குகீழ் வைத்து மறு நாள் காலையில் அந்த கொண்டைக்கடலையை ஓடும் நீரில் போட்டுவர பலன் உண்டு .. குரு ராசிக்கு 2மிடத்திற்கு வரும் வரை இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம். ஆதிமூலவராகிய விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபட்டு வர பலன் கிடைக்கும்.
மீனம்:-
காலபுருஷனின் பனிரெண்டாம் வீடு மீனம். நீர் ராசி. மோட்ச திரிகோணம். ராசிக்கு இதுவரை பதினொன்றில் இருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு பன்னிரெண்டாமிடம் வருவது சிறப்புடையது இல்லை. விரயமும் அயன சயன போகத்தை கொடுக்கப் போகிறார். சுமாரான பலன்தான். விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்ள பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். ஜீவசமாதி வழிபாடு, குருவழிபாடு (வாழ்ந்து கொண்டுள்ள) நல்ல குருவை அறிந்து வழிபாடு பணிவிடையும் செய்யலாம். குருஸ்தலமாகிய திருச்செந்தூர் சென்று எம்பெருமான் முருகனை வழிபடுவதே சிறந்தது.
நன்றி.