― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்டைமிங்... ரைமிங்... அதுதான் ஸ்பெஷாலிட்டி!

டைமிங்… ரைமிங்… அதுதான் ஸ்பெஷாலிட்டி!

- Advertisement -
variarswami

திருமுருக கிருபானந்த வாரியார்
(25.8.1906 – 7.11.1993)
– கே.ஜி.ராமலிங்கம் –

மனித வாழ்க்கையில் எக்காலத்திலும் நினைத்துப் போற்றக்கூடியவர்களாக வாழ்பவர்கள் ஒரு சிலரே. அந்த மிகச் சிலருள் ஒருவர் தான் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

மல்லையதாசர், கனகவல்லி தம்பதிக்கு நான்காவது பிள்ளையாகப் 25.8.1906ல் பிறந்தார். தந்தையே இவரின் கல்வி குரு. 8 வயதில் கவி பாடி, பன்னிரு வயதில் பதினாயிரம் பண்களை மனப் பாடம் செய்து, பதினெட்டு வயதில் சொற்பொழிவு வித்தகராக உருவானார், அவையறிதலில் பரமஞானி. யாருக்குத் தகுந்தபடி என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என நொடியில் கணித்துவிடும் திறமை இயற்கையாகவே இவருக்கு அமையப் பெற்றது இறைவனின் அருள் என்றே சொல்லலாம்.

அவரின் நகைச்சுவை சொல்லாடலுக்கு மயங்காத ஆளே அந்தக் காலத்தில் இல்லை. இப்போது நாம் சொல்லுகிற டைமிங்' என்பதன் மொழிவடிவம்தான் வாரியார் சுவாமிகள். நகைச்சுவையை தேவைப்படும் இடங்களில் மட்டும் நறுக்காகப் பயன்படுத்துவதில் வல்லவர்,சைவ சித்தாந்தம்’, பக்தி நெறி',இறையருள்’ பற்றி மணிக்கணக்கில் பிரசங்கம் நிகழ்த்தி எப்பேர்ப்பட்டவரையும் ஈர்த்துவிடும் திறன்கொண்டவர். இசைப் பேரறிஞர் என்பதால், தேவாரம், திருமந்திரம், திருப்புகழ் என பக்திச்சுவை சொட்டும் பதிகங்கள் பாடியும், அவற்றை விளக்கியும் மெய்யன்பர்களுக்கு ஆசியுரை வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே.

அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது “ஆன்மிக மொழி” பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழுடன் சைவ சித்தாந்தத்திலும் பெரும்புலமை பெற்றவர். அவரது சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆன்மீகம் தமிழகத்தில் தழைக்க வேண்டி கணக்கிடமுடியாத தொண்டுகள் உழவாரப்பணிகள் போன்ற பலவகை நற்காரியங்களை செய்துள்ளது எல்லோரும் அறிந்ததே. அவருடைய ஆன்மீக சொற்பொழிவுகளில் மேடைக்கு முன்பகுதியில் குழந்தைகளையும் மாணவர்களையும் அமரச் சொல்லி அவர்களிடம் ஆன்மீக கேள்விகள் கேட்பதுண்டு, அதில் நானும் ஒருவன். அவருக்கு பிறகு பள்ளி கல்லூரி மாணவச் செல்வங்களிடத்தில் அன்பும் பாசமும் மிக்கவர் அப்துல் கலாம் ஐயா அவர்கள்.

variar kannadasan

வாரியாரின் சொற்பொழிவை கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் பாதியிலேயே எழுந்து சென்றதாக சரித்திரமே இல்லை. அவ்வளவு விஸ்தாரமாக கதைகளை மேற்கோள்காட்டி விளக்குவார், சில கேள்விகளை முன்னால் அமர்ந்திருக்கும் குழந்தைகளிடம் கேட்பார், பதில் அளித்ததும் தன் கையில் வைத்துள்ள சிறிய அளவிலான கைப்புத்தகத்தை அந்த குழந்தையிடம் கொடுத்து மகிழ்விப்பார். ஒரு தரம் இப்படி சொற்பொழிவாற்றிக்கொண்டு இருக்கும் போது 12-B பஸ்ல ஏறினால் எங்க போகலாம் என்று முன்னாடியில் உள்ள பையனிடம் கேட்டார், அவன் பதில் சொல்ல முடியாமல் விழிக்கவே, உடனே அவர் அந்த பஸ்ல ஏறினால் தேனாம்பேட்டை போகலாம், ஆனால் அந்த பஸ் நம்ம மேல ஏறினால் கிருஷ்ணாம்பேட்டை போகலாம் என்று சொல்ல ஒரே சிரிப்புதான்.

மக்கள் திலகமும் மல்லையதாசர் வாரியாரும் – ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்தாலும் இயல், இசை, நாடகம் என்று மூன்று துறைகளிலும் தனித்திறமையைக் காட்டியவர், யானைக்கவுனியில் உள்ள பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் வீணைப் பயிற்சி பெற்றார், இவரது சொற்பொழிவுக்கு நாத்திகர்களும் கூட ரசிகர்களே.

வாரியார் சுவாமிகள் கந்தலங்காரம்/ கந்தபுராணம் சொற்பொழிவாற்றும் போது நம்மை செந்தூருக்கே கொண்டு சென்று விடுவார்.

பொன்னை (தங்கம்) உருக்கி அடித்து நகைகள் செய்யும் போது ஒரு மனம் வரும் அந்த மனம் என்றும் மாறாத குணம் கொண்டது, அது போலத்தான் மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மனமும் வள்ளல் தன்மையும், வாரியார் மக்கள் திலகத்திற்கு அளித்த பட்டம் தான் “பொன்மனச்செம்மல்” என்ற பட்டம்.

வாரியார் எழுத்துத் துறையில் மட்டும் அல்லாமல், தமிழ்த் திரைப்படத் துறையிலும் தன்னைச் சேர்த்துக் கொண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படத்துக்கு வசனங்கள் எழுதினார். முதலில் மறுத்தாலும் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டு கோளுக்கு ஏற்றுக் கொண்டு ‘துணைவன்’, ‘திருவருள்’, ‘தெய்வம்’, போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார்.

வாரியார், வாழ்நாள் முழுவதும் கோயில், பூஜை, சொற்பொழிவு என ஆன்மிக வழியில் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் கூட முருகனுக்குப் பூஜை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சுக் காற்றுகூட‘முருகா! முருகா!!’ என்றுதான் இருந்தது. வயலூர் முருகன் மீது அவருக்குத் தனி ஈடுபாடு. “வயலூர் எம்பெருமான்” என்று கூறித்தான் அவர் தன் சொற்பொழிவைத் துவங்குவது வழக்கம். ஏராளமான கோயில்களுக்குத் திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை.

ஒரு தரம் திருச்சியில் வாரியார் சொற்பொழிவில் பேசுகிற போது எம். கே. தியாகராஜ பாகவதர் (புகழின் உச்சியில் இருந்து வந்த சமயத்தில்) சொற்பொழிவை கேட்க வந்த சமயம் ஒரே பெருங்கூட்டம். முன் வரிசையில் பாகவதர் எழுந்து கிளம்புவதற்கு எத்தனிக்கவே, அவரை வாரியார் நிறுத்தி இன்னும் பத்து நிமிடங்களில் முடித்து கொள்கிறேன் என்று சொல்லவும் பாகவதரும் ஒப்புக் கொண்டார். சொற்பொழிவு முடிந்ததும் பாகவதர் கிளம்பியதும் தான் தாமதம் கூட்டம் முழுவதும் காலி, பக்கவாத்தியக் காரர்களும், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தான் மிச்சம்.

கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்”

என்கிறார் அருணகிரியார் கூறியுள்ளார் கந்தரனுபூதியில்.

பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

“ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்”

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். “நீ தர” – அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். “நின்னையே நிகர்க்க” என்றார்.

1993-ம் ஆண்டு லண்டன் பயணம் முடித்து தமிழகம் திரும்பும்போது சென்னையை அடையுமுன்னரே விமானம் திருத்தணிகை மலையின் மேல் பகுதியில் பறந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் பரமனின் மைந்தன் பதத்தை ஆவரது ஆத்மா சென்றடைந்தது. அவருடைய பூதவுடல் தான் சென்னையில் இறங்கியது புகழுடல் தணிகாசலம் மூர்த்தியுடன் இரண்டற கலந்துவிட்டது.

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் புசிக்கவும்
என்னால் சலிக்கவும் தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால்
நினைக்கவும்
என்னால் தரிக்கவும் இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் கண்டவேலா
மன்னா னதக்கனை முன்னாள் முடித்தலை
வன்வா ளியிற்கொளும் தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்கொரு தம்பிரானே…

என்ற வயலூர் திருப்புகழில் அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு வாழ்ந்தோம். வாரியார் சுவாமிகளின் பரத்யட்சமான தெய்வமாய் வழிபட்ட அந்த வயலூர் முருகனை நாமும் வேண்டுவோம்.

முருகனிடம் இருந்து தான் பெற்ற கிருபையை ஆனந்தமாக வாரி வாரி மக்களுக்கு மனமுவந்து வழங்குவதை கடமையென செய்ததால் “கிருபா அனந்த வாரியார்” (கிருபானந்த வாரியார்) என்று அழைக்கப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version