― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeலைஃப் ஸ்டைல்யுகாதி பண்டிகை; தெலுங்கு வருடப் பிறப்பு (02.04.2022)

யுகாதி பண்டிகை; தெலுங்கு வருடப் பிறப்பு (02.04.2022)

- Advertisement -

ஆந்திரா, கர்நாடகம், தமிழகம் உள்பட நாட்டில் தெலுகு, கன்னடம் பேசும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு. உகாதி அல்லது யுகாதி என்பது, தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் பண்டிகை. மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின் படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வருகிறது. இந்து சூரிய சந்திர நாள்காட்டியின் படி, உகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாள்.

யுகாதி என்றால் யுகத்தின் ஆதி. யுகத்தின் தொடக்கம் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் இவ்வாறு அழைக்கப்படுது. சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்படுது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது.

சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிக்கின்றது. சம்ஹத்தர கௌரி விரதம் என்ற விசேஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நாம் எல்லோரும் ஸ்வேத வராக கல்பத்தில் இருக்கிறோம். அந்த கல்பம் தொடங்கிய நாளும் தேவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

சூரியன் பன்னிரெண்டு ராசிகளில் நிற்பதைக் குறிப்பது, சௌரமான மாதங்கள். அதே போல் சந்திரன் நிற்கின்ற ஒரு மாதத்தின் நட்சத்திரத்தை வைத்து சாந்திரமான மாதங்கள் என தெலுகு சம்பிரதாயத்தில் குறிப்பிடப்படுகிறது.

யுகாதியின் சிறப்பு

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்து வரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு ஒவ்வொரு பெயர் . இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.

பொதுவாக யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள் தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி.

யுகாதி நாளன்று மாலை, பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைகிறது. எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள்.

யுகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

பண்டிகை கொண்டாடும் முறை

இது புத்தாண்டுப் பிறப்பு. எனவே யுகாதிக்கும் தமிழ் வருடப் பிறப்பை நாம் கொண்டாடுவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. காலை எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் – ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். பின், ஏழை எளியோருக்கு நிவேதனப் பொருட்களைக் கொடுப்பது வழக்கம்.

பஞ்சாங்கம் படித்தல்

உகாதி பண்டிகையில் பஞ்சாங்க படனம் முக்கியம். ஓர் ஆண்டுக்கு, தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக் கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட பஞ்சாங்கப் படனம் மக்களுக்கு வாசித்துக் காட்டப் படுகிறது.

திருமலையில் யுகாதியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உற்சவ மூர்த்தி தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

யுகாதி பண்டிகையை வரவேற்று ஒரு துதி கூறிய பிறகு அந்தந்த மாதத்தின் பலனைக் குடும்பத் தலைவர் படிப்பார். இந்த ஆண்டின் இயற்கை வளம், மழைப் பொழிவு, அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் நன்மை, ஆட்சியாளர்களின் நிலை, நட்சத்திரங்களின் அடிப்படையில் முற்பாதி, நடுப்பகுதி, பிற்காலப் பலன்கள், ஆண்டின் கந்தாய பலன்கள், நவக்கிரகங்கள் எந்தெந்த பொறுப்பில் இந்த ஆண்டு முதல் மந்திரிகளாகவும் அரசர்களாகவும் வருகிறார்கள் ஆகிய விவரங்களைப் பஞ்சாங்கப் படனத்தின் மூலம் அறியலாம்.

அவர்களால் இயற்கையிலும் மனித வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள், குரு, சனி, ராகு, கேது கிரச்சார முறையில் இடம் மாறுதல்களால் பூமியிலும் மக்கள் மத்தியிலும் எவ்விதமான மாற்றங்கள், எந்தக் காலங்களில் நிகழும் என்ற குறிப்புகளைப் படித்தறிவது வழக்கம்.

யுகாதி பண்டிகை ஓர் ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலனகளையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான அறிவிப்பாய் திகழ்கிறது.
மகாகவி காளிதாசரின் உத்தரகாலாமிருதம் என்னும் ஜோதிட நூலில் முப்பத்தியெட்டாம் பாடல் கீழ்வரும் வரிகள் மூலம் யுகாதிப் பண்டிகையைக் குறிப்பிட்டுள்ளது.

வருஷாதி பிரதிபந்தவேத சஹிதா க்ராஹ்யா ரக்ஷனாம் பதே:|
மத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ ஜென்மா பவத்சா திதி:
||

உகாதி சுலோகம்

உகாதி பண்டிகையான இன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து ஸம்பத்தும் கிட்டும்.

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச |
சர்வாரிஷ்ட விநாசாய நிம்பஸ்ய தல பக்ஷணம் ||.

பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையில் குளித்து விட்டு, வீட்டின் முகப்பை மாவிலைகளால் அலங்கரிப்பார்கள். சிவபெருமான், பார்வதி தேவியின் புதல்வர்களுக்கான விநாயகருக்கும் முருகனுக்கும் மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்று நம்பப்படுகிறது. அதனால் மாவிலைகளை கட்டினால், நல்ல தானியங்களை அளித்து குடும்ப நலனை அவர்கள் காப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

யுகாதித் திருநாள் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடப்படுகிறது.

“யுகாதி’என்றால் “புதிய பிறப்பு’.

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும், ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்புப் பெறுகிறது.சந்திரனின் சஞ்சாரப்படி சித்திரை முதல்நாள் தான் யுகாதி

அதிரசம் யுகாதி அன்று செய்யடும் சிறப்பான இனிப்பு. தெலுங்கு தேவதை ஒரு கையில் அமிர்த கலசம் மறுகையில் விவசாயிகளின் உயிர் “நெற்பயிர்” கொண்டு வருகிறாள்.

சில இடங்களில், சந்திர நாட்காட்டியின் வழியே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது. சூரிய நாட்காட்டியின் வழியே, தமிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டாகவும், அசாமில் பிஹுவாகவும், பஞ்சாபில் வைசாஹியாகவும், ஒரிஸாவில் பாண சங்கராந்தியாகவும், மேற்கு வங்கத்தில் நாப பார்ஷாவாகவும் கொண்டாடப்படுகிறது.

எப்படிக் கொண்டாடுவது?

விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.

ரங்கோலி

சுற்றுச்சூழலை தூய்மையாக்க, நற்பதமான மாட்டின் சாணம் கலந்த நீரைக் கொண்டு வாசல் தெளிப்பார்கள். அதன் பின் ஒவ்வொரு வீட்டிலும் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்படும்.

பஞ்சாக ச்ரவணம்

வீட்டினுள் உள்ள அனைவரின் வருங்காலத்தை கணிக்க, புகழ் பெற்ற இந்த மரபு பின்பற்றப்படுகிறது. ஒரு ஜோதிடரை உகாதி தினத்தன்று வீட்டிற்கு வரவழைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.

கவி சம்மேளம்

உகாதி தினத்தன்று இலக்கியம் சார்ந்த கூட்டங்களும் நடைபெறும். இதில் கவிதைகள் படித்து, இலக்கியம் சார்ந்த விவாதங்களும் நடைபெறும். மேலும் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, பல விதமான சுவைமிக்க சைவ உணவுகளை சமைத்து போடுவதும் ஒரு வழக்கமாகும்.

யுகாதி பச்சிடி:

யுகாதியன்று, எல்லார் வீடுகளிலும் யுகாதி பச்சடி செய்யப்படும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய பொருட்களால் ஆன பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறிவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், பேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.

பிற உணவு வகைகள்

ஒப்பட்டு அல்லது பூரண போளி/பூரண போளி -ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, கருநாடகம், மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களில் உகாதி அன்று செய்யப்படும்.

கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா வில் உகாதி அன்று செய்யப்படும் சிறப்பு உணவு வகை பூரண போளி ஆகும். இது மைதா மாவு, வெல்லம் மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் சுவையான சிற்றுண்டி ஆகும். மக்கள் இதனுடன் நெய், பால் கலந்து உண்ணும் பழக்கம் உள்ளது.

யுகாதித் தினத்தில் , நல்ல காரியங்கள் துவங்கினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்றும் நம்பப்பட்டு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version