திருப்புகழ்க் கதைகள் பகுதி 328
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நகைத்து உருக்கி – திருக் கயிலை
கங்கை
சிவனின் பாதியிலிருந்து உருவாக்கிய ஆதிசக்தி, தாட்சாயிணியாக அவதரித்து, தக்ஷனின் யாகத்தில் விழுந்து இறந்தார். தாட்சாயிணியின் எரிந்த உடலை எடுத்து திரிந்த சிவனை சாந்தப்படுத்த நினைத்த திருமால் தனது சக்ராயுதத்தினால் அவ்வுடலை துண்டுதுண்டுகளாக்கினார். சிதைக்கப்பட்ட தாட்சாயிணியின் உடல் பல பாகங்களாக பூமியில் விழுந்தது. அதில் ஒன்று பர்வதராஜனின் எல்லையில் விழுந்திருந்தது.
அதை அரக்கர்களிடமிருந்து பாதுகாக்க எண்ணிய பர்வதராஜனுக்கு அவருடைய மகனான கங்கையும் உதவி செய்தாள். இதனால் சிவபெருமான் கங்கைக்கு “நீ நதியாக மாறும் பொழுது புண்ணியம் மிகுந்த நதியாக இருப்பாய்” என்று வரமளித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு கங்கைக்குச் சிவபெருமான் மீது காதல் வந்தது. அதைச் சிவபெருமானிடம் கூறியபோது தாட்சாயிணியைப் பிரிந்த சோகத்தில் இருந்த சிவன் மறுப்பு தெரிவித்துவிட்டார். பின் பர்வதராஜனின் மகளாக ஆதிசக்தி பிறந்து சிவபெருமானை அடைவதற்காக தவமிருந்து சிவபெருமானை திருமணம் செய்தாள். இவள் பார்வதி என்று அனைவராலும் அறியப்படுகின்றார்.
சிவபெருமானின் வரத்தினால் புண்ணியம் மிகுந்த நதியாக இருந்த கங்கையை, அரக்கர்களால் களங்கப்படுத்தப்பட்ட தேவலோகத்தை புனித படுத்துவதற்காக பிரம்மாவும் இந்திரனும் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். தேவலோகத்திலே இருந்தாலும் சிவபெருமானின் மீது கொண்ட காதலால் கங்கை வருத்தத்துடன் இருந்தாள்.
சூரிய குலத்தில் பிறந்த திலீபன் என்பவனின் மகன் பகீரதன் இவன் தனது முன்னோர்கள் சாபத்தால் இறந்த செய்தியை முனிவர் வசிஷ்டர் மூலம் தெரிந்து கொண்டான். பின் பகிரதன் தனது முன்னோர்களின் சாப விமோசனத்திற்காக 10000 ஆண்டுகள் பிரம்மனை நோக்கி தவம் இருந்தான். பிரம்மன் “நீ கங்கையை நோக்கி தவம் செய்து அவர்களின் சாம்பலை கங்கையில் கரைத்தால் அவர்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும்” என்று கூறிச்சென்றார்.
பகீரதனும் அவ்வாறே செய்தான். கங்கையும் பகீரதனின் முன் தோன்றி நான் பூமிக்கு வரும் வேகத்தை பூமி தாங்காது என்று கூற பகீரதன் பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அதற்கு பிரம்மா “கங்கையின் வேகத்தை சிவபெருமானால் மட்டுமே தாங்க முடியும்; எனவே நீ சிவபெருமானை நோக்கி தவம் செய்” என்று கூறினார். பகீரதனும் அவ்வாறே செய்தான். சிவபெருமானும் சம்மதம் தெரிவித்து விட்டார்.
இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த கங்கை தேவலோகத்திலிருந்து மிகுந்த வேகத்துடன் வந்து சிவபெருமானையும் அழைத்துக் கொண்டு பாதாள லோகம் செல்ல தீ்ர்மானித்தாள். அதனை உணர்ந்த சிவபெருமான் கங்கை சடாமுடியில் பிடித்து வைத்து அவளின் ஆணவம் தீரும் வரை பூலோகத்தில் விட மறுத்துவிட்டார்.
கங்கையோ, சிவபெருமானின் சடாமுடியில் மோகம் கொண்டு அங்கேயே சுற்றி வந்தாள். அதனால் கவலையுற்ற பகிரதன் மீண்டும் சிவனை நோக்கி தவம் செய்தான். சிவபெருமானும் கங்கையை பிந்துசரஸ் மலையில் பாய செய்தார். பின்னர் பகீரதனின் முன்னோர்களின் சாபமும் நீங்கியது. இவ்வாறு சிவன் கங்கையைத் தனது சடாமுடியில் முடிந்து கொண்டதாலே கங்கையை சிவனின் மனைவியாக கருதுவர்.
மகாபாரதத்தில் கங்காதேவி வருணனின் மனைவியாகவும், பீஷ்மரின் தாயாகவும் கருதப்படுகிறாள். தேவலோக நதியான கங்கையும், தேவர்களும் சத்திய லோகத்தில் இருக்கும் பிரம்மனைத் தரிசிக்கச் சென்றனர். அப்பொழுது வருண தேவன் தன்னுடைய சக்தியினால் மெல்லிய காற்றினை வீசச் செய்தான், அக்காற்றில் கங்கையின் மேலாடை விலகியது. அதனை/ கண்டு திகைத்த தேவர்கள் அதனைக் காணாமல் இருக்க தலையை கீழ் நோக்கினர்.
வருணனின் இந்த இழிந்த செயலை கண்டு கோபம் கொண்ட பிரம்மா வருணனைப் பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும்படிச் சாபமிட்டார். அத்துடன் மேலாடையைச் சரி செய்யாத கங்கையையும் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கவும், மனிதனாகப் பிறக்கும் வருணனைத் திருமணம் செய்து கணவனுக்குப் பிடிக்காத செயல்களைச் செய்வாயெனவும் சாபமிட்டார்.
இதனால் வருந்திய கங்கை சாபவிமோசனம் கேட்டார். அதனால் மனமிறங்கிய பிரம்மா கணவனுக்கு பிடிக்காத செயல்களைச் செய்து வருபவளை எப்பொழுது மோகம் நீங்கிய மனிதன் அச்செயல்களுக்காக காரணம் கேட்கின்றானோ அப்பொழுது கங்கைக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். பிரம்மாவின் சாபத்தின்படியே வருணன் சாந்தனு மகாராஜாவாக பிறந்தார்.
கங்கை கண்ட சந்தனு அவளின் மீது காதல் கொண்டார், அவளை திருணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்குக் கங்கை தன்னுடைய செயல்களை ஏன் என்று கேள்வி கேட்கக் கூடாதன்ற ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். கங்கை மீதிருந்த காதலால் அந்நிபந்தனையைச் சந்தனு வடிவிலிருந்த வருணன் ஏற்றார்.
இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தை பிறந்தது, அக்குழந்தையை கங்கா ஆற்றில் மூழ்கச் செய்தாள். சந்தனு கங்கையுடைய நிபந்தனையின் காரணமாக மௌனம் காத்தான். ஆனால் அடுத்தடுத்துப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள்.
கோபத்தின் எல்லைக்குச் சென்ற சந்தனு “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்று கேட்டார். இதனால் கங்கையின் சாபமும் நீங்கியது.