
ஆண் மகன் மட்டுமே மீசை வளர்த்தால் அழகா ?பெண்களுக்கும் இது சாத்தியமே..!
கேரளாவில் இளம் பெண் ஒருவர் ஆண்மகனுக்கு நிகராக மீசை வளர்த்து பலரையும் திரும்பிப்பார்க்க வைத்து வியப்படைய செய்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜா. 34 வயதான இவர் தன்னை மீசைக்காரி என்றே அறிமுகம் செய்து கொள்கிறார்.டீன் ஏஜ் பருவத்தில் இருந்த சமயத்தில் இவருக்கு மீசை இருக்கும் இடத்தில் கீழே முடி வளர தொடங்கி உள்ளது. முதலில் குறைந்த அளவே முடி இருந்ததால் அதைக் கண்டுகொள்ளவில்லை.
இருப்பினும், காலப்போக்கில் முடி அதிகமாக வளரத் தொடங்கி உள்ளது. இதனால் நாளடைவில் அந்த பெண்ணுக்கு மீசை வளரத் தொடங்கி உள்ளது. இருப்பினும், தனக்கு மீசை வளர்வதை நினைத்து ஒருபோதும் ஷைஜா கவலை அடையவில்லை. அப்போது சிலர் அவரை மீசைக்காரி என்று கிண்டல் செய்யத் தொடங்கினர். இருப்பினும், அப்போதும் கூட அவர் மீசையை ஷேவ் செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லையாம்.
மீசையை வைத்துக் கிண்டல் செய்வதையே தனது அடையாளமாக மாற்றிக் கொள்ள முடிவு செய்தார். அனைவரிடமும் தன்னை மீசைக்காரி என்று கூறியே அறிமுகம் ஆகிறார். மேலும், சமூக வலைத்தள பக்கங்களுக்கும் மீசைக்காரி என்ற பெயரையே வைத்துள்ளார். பல ஆண்களும் ஷைஜாவின் இந்த முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், சிலர் இந்த மீசை ஒர்ஜினல் மீசைத் தானே என்று சந்தேகத்துடனேயே பார்க்கிறார்களாம்.
இன்னும் சிலரோ பெண்ணுக்கு எதற்கு இப்படி வினோத ஆசை என்றும் அறிவுரை கூறுகிறார்கள். இது தொடர்பாக ஷைஜா கூறுகையில், ‘மீசை இருப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் கூட இதில் பிரச்சினை இல்லை என்ற போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இதை எல்லாவற்றையும் விட மீசை என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது’ என்பதே ஷைஜாவின் பதிலாக உள்ளது.
மேலும், ஷைஜா இது பற்றிக் கூறுகையில், ‘நான் என் மீசையைக் காதலிக்கிறேன். என்ன கொடுத்தாலும் அதற்காக மீசையை ஷேவ் செய்ய மாட்டேன். கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காக மீசையை அகற்ற முடியாது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் நான் பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். ஆனால், மீசையை எடுக்க வேண்டும் என ஒரு நாளும் யோசித்தது இல்லை’ என்றார்.
கணவர் லட்சுமணனும் ஷைஜாவின் மீசை காதலுக்குத் தடை போடவில்லை. இதுவரை ஒரு வார்த்தை கூட ஷைஜாவின் மீசை பற்றி லட்சுமணன் தவறாகப் பேசியது இல்லையாம். எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் அவிஷ்காவும் தாய்க்கு மீசை இருப்பதை மகிழ்ச்சியாகவே பார்க்கிறார். ஷைஜா ஒரு ஆணாகப் பிறக்க வேண்டும் என்றும் தப்பித் தவறி பெண்ணாகப் பிறந்துவிட்டதாகச் செல்லமாகக் கிண்டல் செய்கிறார்கள் ஷைஜேவின் உறவினர்கள்.