கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகை கொண்டாட்டங்களில் முக்கிய விழாவான திருச்சூர் புலியாட்டம் விழா இரு ஆண்டுகளுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை திருச்சூரில் கோலாகலமாக நடந்தது.சுமார்250பேர் புலிவேஷமிட்டு நகரில் பவனி வந்ததை பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.
கேரள மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. அந்த விழாவில் இடம்பெறும் புலியாட்டம் மிகவும் பிரபலமாகும்.மனிதன் புலி வேடம் இட்டு ஆடும் ஆட்டமே புலி ஆட்டம். ஓணம் விழாவில் இடம் பெரும் புலி ஆட்டம் “புலிக்களி” அல்லது “கடுவக்களி” என்று கேரள மக்களால் அழைக்கப்படும்.
இந்த ஆட்டம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. இசையின் ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலிவேடமிட்டு ஆடும்போது பார்வையாளர்களை ஆட்டம் போட வைக்கும்.களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர்கள்.
புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த ஆண்டு இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, திருச்சூரில் ‘புலிகள்’ நகரின் தெருக்களில் பழைய பிரமாண்டமான மற்றும் ஆடம்பரத்துடன் உலா வந்து திரும்பினர்.
பூங்குன்றம், கானாட்டுக்கரை, அய்யந்தோல், வியூர் சென்டர் மற்றும் சக்தன் புலிகலி சங்கம் ஆகிய ஐந்து புலிகலி அணிகள், இந்த ஆண்டு நகரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புலிகலி நிகழ்ச்சியில் பங்கேற்றன. இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை திருச்சூர் ஸ்வராஜ் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.