- Ads -
Home சமையல் புதிது ஆஹா நாவில் எச்சில் ஊற வைக்கும் புளியோதரை ..

ஆஹா நாவில் எச்சில் ஊற வைக்கும் புளியோதரை ..

எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன் நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது!

புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர் போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.. அடுத்து நிறம்.!

புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்.. அடுத்து எண்ணெய்.. நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது.. நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும் ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி!அதிலும் செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில் எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன். அடுத்து புளி.. நேற்று முளைத்த புதுப்புளி கூடாது.! பழம் புளியே புளிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது..

ALSO READ:  சபரிமலை தரிசனம்... இனி ஆன்லைனில் மட்டுமே பதிவு!

புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில் தான் அது புலியாகும்! அடுத்து மிளகாய்.. நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு, அடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்க டலைப் பருப்புகள்.!

இப்போது முழு முந்திரியும் வறுநிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள்! நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்குச் சமம்.! புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்..

அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான்! கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/ புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்.. இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம், இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு.. பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்.!

ALSO READ:  திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பந்தல்கால் நடல்!

திருநெல்வேலி சீமையிலும் நாஞ்சில் நாட்டு வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தருவார்கள். அசுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. ஓகோ போடவைக்கும் கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு!

முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்.. என் அம்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார்!

அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.! ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும் பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு.. ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது போல..

புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்.! அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக் கு (ரு)சி வந்துவிடும்.! திருப்பதி, மயிலை, திருவட்டார் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு பலரும் அடிமை என்றே சொல்லலாம்.

ALSO READ:  இனி தட்கலில் டிக்கெட் போட வேண்டாம்! ரயில்வே முன்பதிவில் மிகப் பெரிய மாற்றம்!
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version