
திருமதி உலக அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த போடிநாயக்கனூர் டாக்டர் பங்கேற்கிறார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் ஹேமமாலினி ரஜினிகாந்த். இவர் சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். ஹேமமாலினி கடந்த ஆண்டு நடந்த திருமதி தெற்காசிய அழகி பட்டத்தையும், 2021-ம் ஆண்டு நடந்த திருமதி பிரபஞ்ச இந்திய அழகி போட்டியில் 2-ம் இடத்தையும் பிடித்தார். 2022-ம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப்போட்டி பல்கேரியாவில் இன்று ஜன 30-ந்தேதிநடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பில் டாக்டர் ஹேமமாலிலினி பங்கேற்க உள்ளார்.
இது குறித்து டாக்டர் ஹேமமாலினி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் திருமதி உலக அழகி போட்டி ஜன 30-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான் பங்கேற்க உள்ளேன். இந்த போட்டியில் 110 நாடுகளில் இருந்து 120 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். அழகி என்றாலே வெளிதோற்றத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.ஆனால் உள்ளே இருக்கும் அழகான எண்ணங்கள் தான் முக்கியம். திருமணமாகிய பின்பு வாழ்க்கை முடிந்து விட்டதாக சிலர் கருதுகிறார்கள். திருமணத்துக்கு பின்னர் தாம் வாழ்க்கையே தொடங்குகின்றது.
கடினமான உழைப்பு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். அதனால் நிச்சயமாக வெற்றிப் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தருவேன்.தமிழகத்தில் இருந்து திருமதி உலக அழகிப்போட்டியில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. இன்னும் நிறைய திருமதிகள் இதுபோன்ற உலக அழகி போட்டிகளில் பங்கேற்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
இதற்கு முன்பு நான் பட்டங்களை வெல்வதற்கு எனது குடும்பத்தினர் நல்ல ஆதரவினை தந்தார்கள். அதுபோன்று இப்போதும் தங்களது ஆதரவினை வழங்கியிருக்கிறார்கள். நிச்சயமாக நான் பட்டம் வெல்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.