இனிய காலை வணக்கம் ராவண சம்ஹாரம் கழிந்து ராமர், சீதை மற்றும் வீபீஷணன், சுக்ரீவ அனுமன் சமேதராக அயோத்தி மாநகரம் திரும்பும் நிகழ்ச்சியை தீபாவளி திருநாளாக வட இந்திய மாநிலங்களில் ஒரு பண்டிகையாக வெகு உற்சாகத்தோடு கொண்டாடுவார்கள்,
— ராமலிங்கம் கிருஷ்ணா —
தெரிந்த புராணம்… தெரியாத கதை!
உலகில் பவித்திரமானது, பரிசுத்தமானது என்று எதனைக் குறிப்பிட்டாலும், கங்கைதான் முதலில் நம் நினைவுக்கு வரும். அசுத்தமான இடத்தில்கூட கங்கையைத் தெளித்தால், அந்த இடம் பரிசுத்தமானதாகிவிடும் என்பது சாஸ்திர நம்பிக்கை. எந்த பூஜையிலும் முதலில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து, அதில் கங்கையை ஆவாகனம் செய்து, அந்தத் தீர்த்தத்தால் பூஜை செய்யும் இடத்தையும், பூஜா திரவியங்களையும் புனிதப்படுத்திக் கொள்வது சாஸ்திர முறை.
இந்துவாகப் பிறந்தவர்கள் இறக்கும்தறுவாயில், கங்கா ஜலத்தை வாயில் ஊற்றி, அவர்களது பாவங்களை நீக்கிப் புனிதர்களாக இறைவனடி சேர வழிவகுக்கும் சடங்கும் உள்ளது. இத்தகைய புனித கங்கை, பாவங்களைப் போக்கும் பவித்திரதேவி மட்டுமல்ல, ஞானத்தை தரவல்ல சக்தியும் அவள்தான் என்கின்றன சாஸ்திரங்கள்!
தீபாவளித் திருநாளில், உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் புனித கங்கை ஆவாஹித்து இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நரகாசுரன் அழிந்த துலா மாத சதூர்த்தசியில் நரகாசுரனைப் புனிதப்படுத்தி அவனுக்கு மோட்சமளிக்க, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தன் சங்கு தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார். அப்போது அவர் சங்கல்பப்படி உலகிலுள்ள எல்லா நீர்பரப்பிலும் கங்கை அந்தர்யாமியாக வியாபித்தாள். அதனால் நரக சதுர்த்தசியன்று ஸ்நானம் செய்வதை, ‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?” என்று சம்பிரதாயமாகக் கேட்கிறோம்.
இந்துக்களின் இல்லங்கள்தோறும் பூஜை அறையில் கண்டிப்பாக ஓரிரண்டு கங்கைச் செம்புகள் இருக்கும். (அப்படி இல்லாவிட்டால் அவசியம் அது இருக்கும் படி செய்ய வேண்டும்). அது வீட்டின் புனிதத்துக்கும், தோஷங்கள் நீங்குவதற்கும், குறைகள் தீர்வதற்கும் வீட்டிலிருக்க வேண்டிய அவசியமான செல்வம். அந்தப் புனித கங்கையின் தோற்றம், ஓட்டம், தேக்கம், சங்கமம் ஆகியன குறித்த தெரியாத கதையை இங்கே தெரிந்துகொள்வோம்.
ஸ்ரீமன் நாராயணனின் நாபியில் பிரம்மன் தோன்றினான். அவன் அண்ட சராசரங் களையும், சகல எல்லா ஜீவராசிகளையும் சிருஷ்டித்தான். அதன்பின்பு, தன்னைப் படைத்த நாராயணனுக்குப் பாத பூஜை செய்ய பவித்திரமான கலசம் ஒன்றைப் படைத்து, அதில் தன் தவ சக்தியால் உருவான பவித்ர நீரை நிரப்பினான்.
அதற்கு கங்கா எனப் பெயரிட்டு, அதனை பகவான் நாராயணனின் பாத கமலங்களில் சேர்த்தான். கங்காதேவி என்ற அந்தப் பவித்ர நீர்த்தாரை விஷ்ணு பாதத்தில் சேர்ந்து, அவரது பத்தினியானாள். அவள் பகவான் விஷ்ணுவின் சேவையிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள். அவள் தோன்றிய இடம்தான் ‘கங்கோத்ரி’.
அப்போது பூவுலகில் ரகுவம்ஸத்தில் பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஸ்ரீராமனின் மூதாதையர்களில் ஒருவன் பகீரதன். இவன் காலத்தில், தேசத்தில் கடும் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டன. அந்தக் கால கட்டத்தில் ஒரு சாபத்தால் மடிந்து சாம்பலான தன் மூதாதையர்கள் அஸ்தியைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதியை உண்டாக்கித் தரவும், நாட்டின் வறட்சி நீங்கவும் பகீரதன் விரும்பினான்.
அதற்காக, பவித்திரமான கங்கையை பூமிக்குக் கொண்டு வர முயன்றான். எனவே, ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் மேற் கொண்டான். அதன் பலனாக நாராயணன் பிரத்யட்சமானார். அவரிடம், விஷ்ணு பாதத்தில் பணி புரியும் கங்கா மாதாவை, கங்கோத்ரியிலிருந்து புறப்பட்டு இமயத்தின் சிகரங்கள் வழியே ஓடி, பூமியைக் குளிரச் செய்து, தன் மூதாதையர் அஸ்தியைக் கடலில் கரைக்கும் இடத்தில் அவள் சங்கமம் ஆகும்படி அருள்பாலிக்க, பகீரதன் வரம் கேட்டான். நாராயணனும் தந்தருளினார்.
புனித கங்கை ஆகாச கங்கையாக, அதிவேகமாக புறப்பட்டாள். இமயத்தைத் தாண்டி அவள் பூமியில் இறங்கும்போது அவள் வேகத்தைத் தணிக்காவிட்டால், நாடு நகரமெல்லாம் மூழ்கிவிடும் என்று பகீரதன் பயந்தான். அவள் வேகத்தைத் தடுக்க வல்லவர், சிவபெருமான் ஒருவரே என்றுணர்ந்து, சிவனைக் குறித்துத் தன் தவத்தைத் தொடங்கினான் பகீரதன்.
உலகைக் காக்க ஈஸ்வரன் தோன்றி, தன் சடையை விரித்து, கங்கையை அதில் தாங்கி, அவள் வேகத்தைத் தடுத்து, பூவுலகில் பாயச் செய்தார். (சிவனார் கங்கையைத் தலையில் தரித்தமையால், கங்கையையும் சிவ பத்தினி என்று சிலர் தவறாகக் குறிப்பிடுவதுண்டு. கங்கா அஷ்டோத்திரத்தில் கங்கையை விஷ்ணு பத்னி என்றும், சிவ சோதரி என்றும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது).
விஷ்ணு பாதத்தில் இருந்து புறப்பட்ட கங்கை, முதலில் நந்த பிராயக் என்றும், பிறகு சிவனை தரிசித்துத் தாண்டிய இடத்தில் ருத்ர ப்ராயக் என்றும் பெயர் பெற்று, பகீரதன் கங்கையை தரிசித்த இடத்தில் பாகீரதி என்று பெயர் பெற்றாள். பகீரதனிடம் கங்காதேவி, ”தான் எப்படிச் செல்ல வேண்டுமென்றும், எந்த மார்க்க மாகத் தன் தாரைகள் ஓட வேண்டும்?” என்றும் கேட்டாள். பகீரதன் தன் தேரில் ஏறி, ‘தாயே! நான் முன்னே வழிகாட்டிச் செல்கிறேன். என்னைப் பின்தொடருங்கள்’ என்று கூறிவிட்டு, வாயு வேகத்தில் புறப்பட்டான்.
கங்காதேவியும் பின்தொடர்ந்தாள். பல காதங்கள் வந்த பின்பு, திடீரென பகீரதன் திரும்பிப் பார்த்தான். கங்கை அவன் பின்னே வரவில்லை. ரதத்தின் வேகத்துக்குக் கங்கையால் ஓடி வர முடியவில்லை போலும் என்று நினைத்து, சிறிது நேரம் காத்திருந்தான் பகீரதன். அப்போதும் கங்கை வரவில்லை. எனவே, தேரைத் திருப்பிக் கொண்டு, வந்த வழியே சென்றான். சிறிது தூரம் சென்றதும், அவன் கண்ட காட்சி அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது.
ஆம், கங்கை ஏழு பிரிவாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாக ஒரே இடத்தில், ஒரு தீவு போன்ற பகுதியை உருவாக்கிக் கொண்டிருந்தாள். காரணம், அங்கே சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு மகரிஷிகளும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களது தவத்துக்கும் ஞானத்துக்கும் கட்டுப்பட்டு, அவர்களின் பாதங்களை வருடிக்கொண்டு, அங்கே தானும் தவம் புரிந்து கொண்டிருந்தாள் ஞான கங்கை. அந்த இடம்தான் இன்று ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. கங்கை ஏழாகப் பிரிந்து, மீண்டும் இணைந்த நிலையை இன்றும் ஹரித்வாரின் பூமி அமைப்பைக் குறிக்கும் செயற்கைக்கோள் படங்களில் காணலாம்.
சப்த ரிஷிகளுக்கான ஆலயமும் ஹரித்வாரில் உள்ளது. சப்த ரிஷிகளைத் தாண்டிச் செல்லும்போது, அவர்களைத் தரிசித்து ஆசி பெறாமல் சென்றது தவறு என்று பகீரதனுக்குப் புரிந்தது. தன் தவத்துக்கு இரங்கி பூமிக்கு வந்த கங்கை தன்னைவிட உயர்ந்த தபஸ்விகளின் தரிசனத்துக்காகத் தங்கிவிட்டாள் என்பதை யும் உணர்ந்தான் பகீரதன். சப்த ரிஷிகளை யும் வணங்கி, பூஜித்து, அவர்கள் அனுமதி யுடன் கங்கையை தன்னுடன் வரும்படி வேண்டினான். இப்போது கங்கை முன்னே செல்ல, அவள் செல்ல விரும்பிய வழியில் ரதத்தைச் செலுத்தினான் பகீரதன்.
இன்றைய அலஹாபாத் பகுதிக்கு வரும் போது, யமுனையையும் சரஸ்வதியையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு திரிவேணி சங்கமமாகி, அங்கிருந்து தொடர்ந்து புண்ணிய க்ஷேத்திரமான காசி மண்ணை நனைத்து, சிவபூஜை செய்து தன் பயணத்தைத் தொடங்கினாள் கங்கை.
இன்றைய பீகாரின் மத்தியப் பகுதியைத் தாண்டும்போது, கங்கா தேவி தன் ஓட்டத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்கினாள். பீகாரிலுள்ள பாகல்பூர் என்ற ஊருக்கு அருகில், சுல்தான்கஞ்ச் என்னுமிடத்தில் தென்கிழக்காக ஓடிக் கொண்டிருந்த கங்கை திடீரென திசை திரும்பி, மீண்டும் இமயத்தை நோக்கி வடக்கு திசையாக ஓட ஆரம்பித்தாள். இதனால் உத்தரவாகினி என்ற பெயர் பெற்றாள். அப்போதும் பகீரதன் தன் முயற்சியில் தளராமல், சிவபெருமானையும் கங்கையும் பிரார்த்தித்து, தான் பெற்ற வரத்தின்படி வங்கக்கடல் வரை வரும்படி கங்கையை அழைத்தான்.
அப்போது சிவ பெருமான் தோன்றி, எல்லா யுகங்களிலும் கங்கை உத்தரவாகினியாகத் திரும்பிய இடத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பரிசுத்தமான கங்கையை பூஜித்து, காவடிகளில் சுமந்து செல்வார்கள். அவர்கள் பல காத தூரம் நடந்து சென்று, தேவ்கர் எனும் இடத்திலுள்ள சுயம்பு லிங்கமான வைத்தியநாதருக்கு அந்த நீரை அபிஷேகம் செய்து, புண்ணியம் பெறுவார்கள் என்று கங்கைக்கு ஒரு வரமளித்தார்.
ச்ராவண மாதத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் இன்றும் சுல்தான்கஞ்ச் என்ற இடத்திலிருந்து காவடிகளில் கங்கையைச் சுமந்துகொண்டு, சுமார் 110 கி.மீட்டர் கால்நடையாகச் சென்று, அங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது, பக்தி பரவசமான காட்சி. தேவ்கர் வைத்தியநாதர் ஆலயம் ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிசயத்தையும் நிகழ்த்திவிட்டு, பகீரதன் விருப்பப்படி மீண்டும் தென்கிழக்குத் திசையில் ஓடி, வங்கக் கடலில் சங்கமமானாள் புனித கங்கை. பூமி குளிர்ந்தது. பகீரதன் மூதாதையர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்து, அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை முடித்தான்!