ஐப்பசி மூலம்…. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஏற்றம் கொண்ட நாள். மணவாள மாமுனிகள் திருநக்ஷத்திரம்.
மணவாள மாமுனியே…
நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இந்த ஐப்பசி மாதம் பலவிதங்களில் ஏற்றம் கொண்டது . ஆழ்வார்கள் முதல் மூவரான #பொய்கையாழ்வார், #பூதத்தாழ்வார் , #பேயாழ்வார் அவதரித்த புண்ணிய மாதம் இது. அஃதே போல் நம் சம்பிரதாயத்தின் கடைசி ஆச்சாரியாரான மணவாள மாமுனிகள் அவதரித்ததும் இந்த மாதத்தில் வரும் #மூலம் நட்சத்திரம் தான்.
வேறொரு விஷேசம் இங்கு உண்டு. அது நட்சத்திர அடிப்படையில் மூலம் நட்சத்திரம் தான் முதலில் வரும், பின்னர் தான் முதல் ஆழ்வார்களின் நட்சத்திரங்களான திருவோணம், அவிட்டம்,சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரிசையாக வரும்.
மணவாள மாமுனிகளுக்கு இவ்வாண்டு 654 வது ஆண்டு. ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டுமே மிக நீண்ட ஆச்சாரியார் பரம்பரை கொண்டது. பன்னெடுங்காலமாக நம் சனாதன தரிசனத்திற்கு உறுதுணையாக நின்று வேத மார்க்கத்தில் காட்டிக் கொடுக்கும் பரம்பொருளை அழகு தமிழில் பாசுரங்களை கொண்டு சேவித்த, சேவிக்கும் புண்ணிய சீலர்கள் வந்துதித்த புண்ணிய பூமி இது.
இது போன்ற ஓர் அற்புதமான அவதானிப்பு இந்த உலகில் வேறு எங்கும் இல்லை.
ஆகச் சிறந்த ரஸவாதம் இது.
பிறப்பால் வளர்ப்பால் வருவது அல்ல ஸ்ரீ வைஷ்ணவம். . பெறும் ஞானத்தால் மட்டுமே இது சாத்தியம்.இதனை இந்த ஞானத்தை உள்வாங்க, உருக்கொள்ள உணர்த்த ஓர் ஆச்சாரியார் அவசியம். இப்படி சொன்னது தான் ஸ்ரீ வைஷ்ணவம். அதனால் தான் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில்…., ஆச்சார்யா பரம்பரை பரம்பரையாக கொண்டாடப் படும் ஓர் அற்புதமான விஷயமாக மாறியிருக்கிறது.
இங்கு ஆச்சாரியார் என்பவர் வெறும் ஆசிரியர் மாத்திரம் அல்ல. அதற்கும் மேலாக ஒன்றை உணர்த்தும் செயல்பாடு.
மனிதன் தான் ஆச்சாரியாராக இருக்க வேண்டும் என்பது அல்ல…. பார்க்கும் பார்வையில் உள்ள விஷயம். தேவை தேடல் உள்ள ஜீவன் மாத்திரமே … இப்படி சொன்னது தான் #தத்தாத்ரேயர் தத்துவம். இவ்வுலகில் வாழும் 24 வகையான ஜீவராசிகளை அவர் ஆச்சாரியாராக கொண்டார்.
ஆசிரியர் போதிப்பவர்.
ஆச்சாரியார் உணர்த்துபவர்.
தீ சுடும் என்று அதன் குண நலன்களை விவரமாக எடுத்து சொல்வது…, போதிப்பது என்று பொருள். அந்த தீயின் வெம்மையை உங்களுக்குள் உணரச்செய்வது தான் ஓர் ஆச்சாரியாரின் மாண்பு.
இப்படி தான் ஆரம்பமானது #வையம்_தகளியா என்றுபடி, முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் எடுத்து கொடுத்தது தான் நம் சம்பிரதாயத்தின் ஆணி வேர்.அதனை நன்கு போஷித்து ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயமாக மாற்றி கொடுத்த வள்ளல் நம் #ராமாநுஜமுநி.
சந்தேகமேயில்லாமல் தமிழை அரியணை ஏற்றிய அரும் பெரும் சாதனை படைத்தவர் #உடையார். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் உயிர் நாடி அதன் ஜீவ ரஸம்… தமிழில்… தமிழ் பாசுரங்களில் தான் உள்ளது என்று அழகாக எடுத்து சொன்னது நம் #ராமாநுஜமுநி தான். இதனை இன்று நாம், பூலோக வைகுண்டம் என்று கொண்டாடும் #ஸ்ரீரங்கத்தில் வைத்து சாதித்து காட்டினார். #படிப்படியாக தமிழ் மொழியின் உன்னத நிலை வெளிப்பட்ட தருணம் அது. ஆம் படிப்படியாக…
ஆராயிரப் படி, #பன்னீயிராயிரம்படி ….
என்று திருவாய்மொழிக்கு விருத்தாத்துமங்களாக நாளொரு மேனியாக தமிழ் மொழி வனப்புடன் வளர்ச்சி கண்ட சமயம் அது. இதன் உச்சம் #நம்பிள்ளை ஈடு #முப்பத்தாராயிரம்_படி.
இவையெல்லாம்….
1323 ஆண்டு ஸ்ரீ ரங்கத்தில் நடந்த கலாபத்தில் அடியோடு மாறியது. அஃது ஓர் ரத்த சரித்திரம். ஆதலால் அது இங்கு இத்தருணத்தில் வேண்டாம்.
நம் சம்பிரதாயத்தின் வேர் நசுக்கப்பட்ட சமயத்தில் அதனை நசிந்து போகாமல் தடுக்க பல மஹநீயர்கள் முயன்றனர். கலாபத்தின் போது வெளியேறிய அழகிய மணவாளன் #நம்பெருமாளாக திருவரங்கத்தில் மீண்டும் நிலைக்கொண்டார்.
அந்த சமயத்தில் ஸ்ரீ ரங்கத்தில் மீண்டும் திருவாய்மொழி வியாக்கியான ஈட்டினைக் கொண்டு அர்த்தம் சாதித்து மீண்டும் தமிழை வனப்புடன் அரியணை ஏற்றினவர் தான் நம் #மணவாளமாமுநிகள்.
நம் அந்தரங்கத்தில் உறையும் அந்த தென்னரங்கனுக்கு திருவாய்மொழி வியாக்கியான ஈட்டின் மீது மாளாக்காதல். நம்பிள்ளை ஈடு சாதித்த காலத்தில் உள்ளிருந்து எழுந்து வந்து கொறட்டில் நின்று எட்டிப்பார்த்த #பெரியபெருமாள் அவர். மறுமுறை மீண்டும் அதனை சாதித்த மாமுனிகள் மீது அளவற்ற பாசம், ஆதலால் தான் தான் ஏகியிருக்கும் சேஷ வாகனத்தையே மணவாள மாமுனிகளுக்கு தந்து அழகு பார்த்தார். அதன் பொருட்டே, இன்றும் நாம் மணவாள மாமுனிகளை நாம் சேஷ வாகனத்தில் வைத்தே சேவித்து வருகிறோம். தவிர மணவாள மாமுனிகளையே தம் ஆச்சாரியாராக வரிந்து அன்னவருக்கு தனியனாக #ஸ்ரீசைலேஷ_தயாபாத்ரம் பிரசாதித்து அருளினார் .
நாதமுநிகள் தொடங்கி மணவாள மாமுனிகள் வரையில் உள்ள நம் ஆச்சாரிய லக்ஷணம் இது. இதில் நடுநாயகமாக இருப்பது நம் #ராமாநுஜமுநி.
இவர்கள் அனைவருமே தமிழை தேன் சுவை தமிழ் பாசுரங்களை கொண்டாடி தமிழை கொண்டு சம்பிரதாயம் வளர்த்த மஹா புருஷர்கள்.
சங்கம் வைத்து வளர்த்த தமிழை கொண்டு சமயத்தில் வைத்து வார்த்த…. வளர்த்தெடுத்த மஹநீயர்கள் இவர்கள்.
ஆதலால்
அடியார்கள் வாழ….
அரங்க நகர் வாழ….
#மணவாள_மாமுநியே இன்னுமொரு நூற்றாண்டு இரும்.
இன்று ஐப்பசி மூலம்.
- ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்