பர்தா போட்டு விளையாட முடியாது; ஈரான் செஸ் தொடரை புறக்கணித்த சௌம்யாவுக்கு குவியும் பாராட்டுகள்!

இங்குள்ள ஊடகங்கள், பெண் உரிமைப் பாதுகாவலர்கள் என்று சொல்லி கொண்டு உலவும் சில சங்கங்கள் இது போன்ற பிற்போக்கு தனமான சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா!?

மத கோட்பாடுகளை விளையாட்டில் புகுத்தும் நாட்டுக்கு என்னால் விளையாடச் செல்ல முடியாது என்று சொல்லி செஸ் போட்டித் தொடரில் இருந்து விலகிய சௌம்யா ஸ்வாமிநாதனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

லட்சத்தில் ஒருவர்தான் இப்படி கொள்கைப் பிடிப்புடன் இருக்க முடியும்! பணம் மற்றும் புகழ் எல்லாம் அதற்குப் பிறகு தான் என்கின்ற உறுதியுடன் கூடிய உணர்வுடன் உள்ள இவரைப் போன்ற சிலராவது இருப்பதால்தான் இந்தியாவின் பெருமையும் மானமும் வெளிநாடுகளில் காக்கப்படுகிறது.

இந்தியன் செஸ் ஸ்டார் செளம்யா சுவாமிநாதன், (இவர் பெண் கிராண்ட்மாஸ்டர்) ஈரானில்  அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆசியன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். காரணம் அங்கு விளையாடும் பெண்கள் முகத்தை மூடும் headscarf அல்லது பர்கா அணிந்து கொண்டுதான் விளையாட வேண்டும்.

இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் நிலமை அனைவரும் அறிந்த ஒன்றே. இதை எதிர்த்து செளமியா சுவாமிநாதன் ஆணித்தரமாக தன் கருத்தை பதிவு செய்து உள்ளார்.

“பெண்களுக்கு எதிரான இந்தச் சட்டமானது என்னுடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. அது மட்டுமல்லாமல் என்னுடைய கருத்து சுதந்திரம், உணர்வு சுதந்திரம், மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கும் எதிரானது. எந்த நாடும் அவர்களுடைய மத ஆடை கோட்பாடுகளைதான் விளையாட்டு போட்டிகளில் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு இடமில்லை.

இந்த செஸ் போட்டியில் நம் நாட்டிற்காக விளையாட என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குக் கிடைத்த பெருமை. ஆனால் சில விஷயங்களை சமரசம் செய்து கொண்டு விளையாட என்னுடைய தன்மானம் என்றுமே இடம் கொடுக்காது. எனவே நான் இந்தப் போட்டித் தொடரில் இருந்து விலகுகிறேன்.” –  என்று பதிவிட்டிருந்தார்.

இந்த போட்டியினால் கிடைக்கக் கூடிய பெரும் பணம் மற்றும் புகழைப் பற்றி இந்த வீராங்கனை கவலைப் படவில்லை. என்ன ஒரு உறுதி, கொள்கைப் பிடிப்பு, பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கும் ஒரு அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை அமைதியாக வெளிப்படுத்திய தன்மை. உண்மையான பெண்ணுரிமைப் போராளி.

இதே காரணத்திற்காக 2016ல் ஈரானில் நடைபெற்ற ஆசியன் துப்பாக்கி சுடும் போட்டியில் இருந்து இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீரா சித்து விலகினார்.

இங்குள்ள ஊடகங்கள், பெண் உரிமைப் பாதுகாவலர்கள் என்று சொல்லி கொண்டு உலவும் சில சங்கங்கள் இது போன்ற பிற்போக்கு தனமான சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா!?

சௌமியா சுவாமிநாதனுக்கும், ஹீரா சித்துவுக்கும் நமது பாராட்டுக்கள்.