நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீஸர் இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 2.0. 2015 டிசம்பரில் 2.0 படத்துக்கான பணிகள் துவங்கி ஒன்றரை ஆண்டுகள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப் பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் படம் பின்னர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இரண்டு மூன்று முறை ஒத்திவைக்கப் பட்டு, நீண்ட இழுபறிக்குப் பின் தற்போது நவம்பர் 29 ஆம் தேதி 2.0 வெளியிட ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. இந்நிலையில் 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். இந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ள இப்படம், சுமார் 572 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது. இதுவரை வெளியான இந்திய படங்களில் இதுதான் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் எனப் படுகிறது.