நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் விஜய்க்கு இரண்டாவது முறையாக ஜோடியாகி இருக்கிறார். இதுதவிர இவர் நடித்திருந்த சண்டக்கோழி படமும் சமீபத்தில் திரைக்கு வந்தது. முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். கீர்த்தி சுரேஷை காண்பதற்காக அப்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்ததால் அவரால் வெளியே வர முடியவில்லை. அதனைத்தொடர்ந்து காரை சூழ்ந்திருந்தோர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதன்பின் காரில் இருந்து வெளியே வந்த கீர்த்தி சுரேஷ், நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார். நடிகை கீர்த்தி சுரேசைப் பார்க்க வந்த கூட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை கீர்த்தி சுரேஷைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இது தமிழகத்தின் சாபக்கேடு என்றனர் அந்தக் கூட்டத்தை வேடிக்கை பார்த்தவர்கள்.
எத்தனையோ பிரச்னைகளில் தமிழகம் தள்ளாடும் போது, அதைக் கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போகும் தமிழக இளைஞர்கள் பட்டாளம், இன்னமும் நடிகையைப் பார்ப்பதற்கு முண்டியடித்து கூட்டமாய்க் கூடி, செல்பி மோகத்தில் சாலையில் விழுந்து உருண்டு புரண்டு, போலீஸில் தடியடி பெற்று பெரும் அவதியை சந்தித்ததும், அவமானத்தையும் அடைந்ததுள்ளனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் நகைக்கடையின் புதிய கிளை அமைக்கப்பட்டது. இக்கடையின் திறப்பு விழா இன்று நடைபெறும் என்றும், இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொள்வர் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு காலை முதலே ஏராளமான ரசிகர்கள் திரளத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து, சாலை முழுவதும் கூட்டமாகக் காணப்பட்டது.
ரசிகர்கள் கூட்டத்தின் காரணமாகவும், சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டிருந்ததாலும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அச்சாலையில் போக்குவரத்தை போலீசார் முற்றாக தடை செய்தனர். இதனிடையே ரசிகர்களின் உறசாக முழக்கத்திற்கிடையே காரில் வந்த கீர்த்தி சுரேஷ், நகைக்கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.. பின்னர் சாலை மறித்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் தோன்றி கையசைத்ததோடு, சிறிது நேரம் பேசி நடமாடினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ், காரில் ஏறி புறப்பட்டார். ஆனால் ரசிகர்களின் கும்பலுக்கிடையே கார் மாட்டிக் கொண்டதோடு, நகர முடியாமல் நின்றது. காருக்கு வழிவிடாத ரசிகர்களால் மீண்டும் நெரிசல் உருவானதையடுத்து அங்கு வந்த போலீசார், ரசிகர்களை அடித்து விரட்டினார். பலர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அடிதாங்க முடியாமல் பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.