- Ads -
Home லைஃப் ஸ்டைல் திருப்பாவை விளக்கம்- பாசுரம் 5 ( மாயனை மன்னு )

திருப்பாவை விளக்கம்- பாசுரம் 5 ( மாயனை மன்னு )

எனவே அந்தப் பெருமானின் திருநாமங்களைச் சொல்வாய்! - என்று இந்தப் பாசுரம் மூலம் தோழியர்க்கு ஞானம் உண்டாகச் செய்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்.

திருப்பாவை 05 - மாயனை மன்னு வடமதுரை மைந்தனை ; பாடலும் விளக்கமும்: மார்கழி வழிபாடு

திருப்பாவை – பாசுரம் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

விளக்கவுரை:

நான்காம் பாசுரத்தில் கண்ணன் கருணையால் மழை பொழிந்து செழிப்பு மிகும் என்று கூறிய ஆண்டாள், அவ்வாறு அவன் கருணைப் பார்வை நம் மீது விழ வேண்டுமானால், அவனைப் புகழ்ந்து பாட வேண்டாமோ என்று கூறி, கண்ணனின் தன்மைகளையும் புகழையும் தோழியர்க்குக் கூறி, அவர்களையும் கண்ணனை அடிபணிந்து உய்யுமாறு இந்தப் பாசுரம் மூலம் வேண்டுகிறார்.

ALSO READ:  இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

கண்ணன் – மாயச் செயல்களை உடையவன்; இறையருள் நிலையாகப் பெற்ற அந்த வடமதுரையின் தலைவன்; ஆழம் உடையதாகவும் மிகத் தூய்மையான நீரைக் கொண்டதாகவும் விளங்கும் யமுனை ஆற்றை உடையவன்; ஆயர் குலமாகிய இடையர் குலத்தில் தோன்றி அந்தக் குலத்தை மேன்மையுறச் செய்பவன்; மங்கள தீபத்தைப் போல் பிரகாசிக்கும் அணிவிளக்கு; தாயாகிய தேவகிப் பிராட்டியின் திருவயிற்றை விளங்கச் செய்வதற்காக அவதரித்தவன்…

இத்தகு பெருமை வாய்ந்த கண்ணபிரானை, அவனுக்கு அடிமை செய்கிறவர்களான நாம் முதலில் தூய்மைப் படுத்தி கொள்ள வேண்டும். பின்னர் தூய்மையான மலர்களைக் கொய்து வந்து தூவ வேண்டும். அவனை வணங்கி வாயாரப் பாட வேண்டும். நெஞ்சார தியானம் செய்ய வேண்டும்.

அதன் பின்னர், சேஷ-சேஷித்வம் எனும்படி, ஆண்டான்-அடிமை மனோபாவமும் ஞானமும் தோன்ற, நாம் முன்னர் செய்த பாவங்களும், பின்னாளில் நம்மையும் அறியாமல் நாம் செய்யப்போகும் பாவங்களும் தீயில் இட்ட பஞ்சைப் போலே எரிந்து உருமாய்ந்து போகும். எனவே அந்தப் பெருமானின் திருநாமங்களைச் சொல்வாய்! – என்று இந்தப் பாசுரம் மூலம் தோழியர்க்கு ஞானம் உண்டாகச் செய்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்.

ALSO READ:  அல்லல் பிறவியறுக்கும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம்!

விளக்கவுரை : செங்கோட்டை ஶ்ரீராம்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version