செய்யாறு அருகில் உள்ளது ஜடேரி என்ற கிராமம். இங்கே உள்ள மக்களின் முக்கியத் தொழில், திருமண் எனப்படும் நாமக்கட்டி தயாரிப்பது. இதற்காகவே இந்த கிராமம் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்த கிராமத்தில் அண்மைக் காலமாக கிறிஸ்துவ சபைகள் பெருகி, மக்களிடம் மத பிரசாரம் செய்து, அவர்களை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றி வருகின்றனர்.  இது இந்தப் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாமக்கட்டி தயாரிக்கும் தொழிலை நசுக்குவதற்காகவும், நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்படும் கிறிஸ்துவ பிரசார சபைகளின் தந்திரங்களை புரிய வைப்பதற்காக, அந்த கிராமத்துக்குச் சென்றனர் ஆன்மிகப் பெரியவர்கள் சிலர். அவர்களில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அக்காரக்கனி ஸ்ரீநிதி, சென்னை, மற்றும் திருச்சியில் இருந்து சென்ற சிலர், உள்ளூர் இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் என சிலர் முக்கியமானவர்கள்.

தாங்கள்  ஜடேரி சென்ற காரணம் குறித்து அவர்கள் கூறியவை…

1. உண்மை கள நிலவரம் அறிதல்
2. ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்
3. உள்ளூரிலேயே பயிற்சியாளர்களைக் கண்டறிதல்
4. காஞ்சி, செய்யாறில் உள்ள அடியார்களைக் கொண்டு நீண்ட கால திட்டங்களுக்கு வழிவகுத்தல்
5. ஆச்சாரியர்களின் திருவடி பட்டால் தீமைகள் விலகி அந்த ஊரே செழிப்படையும் என்று நாங்கள் நிச்சயம் நம்புவதால், ஸ்ரீ அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி முதலிய ஆச்சார்யர்களின் அருளாசிகளை அந்த ஊர் மக்கள் பெற வழிவகை செய்தல்
6. தீய எண்ணங்களை ஒழித்து ஸாத்வீக (நல்ல) குணங்களை வளர்க்க, தீபாவளிக்கு பெருமாளுக்கு நைவேத்யம் செய்த பிரசாதம் (கொஞ்சம்) வழங்குதல்
7. குழந்தைகளுக்கு ஆன்மீக புத்தங்கள் விநியோகம் செய்தல்; விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; திருமண் தயாரிப்பது எவ்வ்ளவு பெரிய தொண்டு என்று அவர்களுக்கு விளக்கிச் சொல்லுதல்.

– இவற்றை மனத்தில் கொண்டு அந்த கிராமத்துக்கு சென்றோம் என்று கூறிய அவர்கள், ஜடேரி மக்களுடன் கலந்து பேசி, அவர்களுக்குச் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து கண்டறிந்ததாகவும், அதற்காக சில திட்டங்களை வகுத்துள்ளதாகவும் கூறினர்.

அந்த மக்களுக்குச் செய்ய வேண்டியவை என்ன  என்பது குறித்து இந்தக்  குழுவுடன் சென்ற வீரராகவன் சம்பத் என்பவர் கூறியபோது,

* தொழில் முறையில் நாம் (திருமண் இட்டுக் கொள்பவர்கள்) அவர்களின் நேரடி வாடிக்கையாளர்கள். அவர்களின் நாமக் கட்டிகளை (திருமண்) நேரடியாக வாங்கி அவர்களுக்கு அதிக லாபம் ஈட்டுதல். இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டோம். ஆன்மீகப் பெரியோர்களின் சம்மதம்/ஆசீர்வாதம் பெற்ற பின், இணையத்தில் நேரடியாக நீங்கள் “ஜடேரி திருமண்” வாங்கலாம்.

* ஆன்மீகக் கல்வி சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்த முயற்சிகளை மேற்கொள்ளல். ஜடேரி மட்டுமல்லாது எல்லா ஊர்களிலும் இதற்கு தேவை இருக்கிறது. இந்த இரண்டு செயல்களுமே மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்றார்.

மேலும், வெளியூரில் இருப்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டு அறியாமையால், இலவசப் பொருட்களை அதிகம் வழங்க வேண்டிய தேவை இல்லை என்றும்,  எல்லோரும் திடீரென்று ஒட்டு மொத்தமாக நேரில் சென்று பேசினால், அந்த ஊர் மக்களிடையே அதுஒரு பீதியை உண்டாக்கி விடும் என்றும் தெளிவாக்கினார் வீரராகவன் சம்பத்!

ஜடேரி கிராம மக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் செய்யும் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் சுய மதிப்பையும் உணரச் செய்யவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம் என்றார். மேலும், மக்களுடன் பேசி அவர்களின் ஆன்மிக சந்தேகங்களைப் போக்கிய அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி, உதவி செய்த இந்து மக்கள் கட்சி தொண்டர்கள், ஊர் மக்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம் என்றார்.

அக்காரக்கனி ஸ்ரீநிதி ஜடேரி கிராம மக்களுடன் பேசியவற்றின் காணொளி (விடியோ) காட்சிகள்…

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.