ஏப்ரல் 10, 2021, 5:37 மணி சனிக்கிழமை
More

  தற்காலப் பெண்கள் தலைவிரி கோலமாய் அலைவது ஏன்?

  ladies hair style - 3

  கட்டுரை: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

  பெண்களுக்கு ஆண்டவன் அளித்த வரம் அழகான நீண்ட கூந்தல். கவிஞர்கள் பெண்களின் கூந்தலையும் நீண்ட ஜடையையும் பற்றி அழகிய உதாரணங்களோடு வர்ணித்துள்ளார்கள்.

  பெண்களுக்கு பரிபூரண அழகை அளிப்பது அடர்ந்த கூந்தலும் அழகிய பின்னலும்தான்.

  சத்தியபாமாவின் நீண்ட தலைப் பின்னல் பற்றி திரைப்படங்களில் பார்த்துள்ளோம். பொதுவாக கணவனைப் புடவைத் தலைப்பில் முடிந்து வைத்துக் கொண்டுள்ளாள் மனைவி என்று கிண்டல் செய்வதை கார்ட்டூன்களில் பார்த்துள்ளோம். ஆனால் சத்தியபாமா ஸ்ரீ கிருஷ்ணரைத் தன் நீண்ட பின்னலில் முடிந்து வைத்திருந்தாள் என்று கவிகள் பாடியுள்ளனர். ஜமுனா சத்யபாமாவாக நடித்து பாடிய ‘நிரஜாலகலடா…’ என்ற திரைப்படப் பாடல் பிரசித்தமானது.

  ஆனால் அந்தோ ! தற்காலத்தில் நம் பெண்கள் தலையைப் பின்னுவதை விட்டு விட்டு தலை விரி கோலமாய் வளைய வருகிறார்களே, ஏன்?

  திருமணங்களிலும் குத்து விளக்கு ஏற்றித் தொடங்கும் விழாக்களிலும் கூட தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வரும் பெண்களை பார்க்கையில் வியப்பாக உள்ளது. மீதி அலங்காரங்களுக்குக் குறைவில்லாத வகையில் பட்டுப் புடவை, கை நிறைய வளையல், நெக்லஸ், ஜிமிக்கி இன்னும் வங்கி, ஒட்டியாணம் என்று நம் பண்பாட்டோடு நிறைவாக இயங்கும் இப்பெண்கள் தலையைப் பின்னி பூ வைத்துக் கொள்ளும் பண்பாட்டை மட்டும் ஏன் மறந்தார்கள்? இதில் பெரிய இடத்துப் பெண்கள், மற்றவர்கள் என்ற வித்தியாசமில்லாமல் எங்கு பார்த்தாலும் இதே கதைதான்.

  கோவில்களுக்குச் சென்று கியூவில் நிற்கும் போது இப்பெண்கள் கழுத்தை அங்கும் இங்கும் திருப்புகையில் இவர்களின் விரித்த கூந்தல் அடுத்தவர் மேல் பட்டு அவர்களுக்குத் தேவையற்ற எரிச்சலை ஏற்படுத்துவதையும் பார்க்க நேருகிறது. புனிதமான கோயில்களுக்கு கூட தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வரலாமா?

  கூட்டத்தில் தலையை விரித்து போட்டுக் கொண்டு சில பெண்கள் நகருகையில் அவர்கள் முடி அருகிலிருக்கும் ஆண்கள் முகத்தின் மீது கூட படும் போது எத்தனை அசிங்கமாக அவர்கள் உணர்வார்கள் என்பது புரியாதா?

  hiar style 1 - 4

  திருமணமான சுமங்கலிப் பெண்கள் தலையை விரித்துப் போட்டுக் கொள்ளக் கூடாது என்பது நம் பாரத நாட்டுப் பண்பாடு. திருமணமான பெண்களுக்கு தலைமுடியை வகிடு எடுக்கும் இடத்தில் குங்குமப் பொட்டு இருப்பது சம்பிரதாயம். அது லட்சுமி ஸ்தானம். கணவனின் ஆயுளைப் பாதுகாக்கும் பவித்திரமான புள்ளி அது. குடும்பத்தின் ஐஸ்வர்யத்தின் இடமும் அதுவே.

  சிலர் நீர் நிலைகளில் குளித்து விட்டு தலையை வீசி உதறுவார்கள். அது மிகவும் தவறு. மற்றவர் மேல் தலை முடியின் நீர் தெறிக்கக் கூடாது. தலைமுடி நுனிலியிலிருந்து நீர் சொட்டும்படி விடக்கூடாது.

  தலையைப் பின்னாமல் விடுவதால் உதிரும் குணம் கொண்ட மெல்லியதான முடி, தரையில் விழக் கூடும். எத்தனை தான் பெருக்கித் துடைத்தாலும் அவை எளிதில் பறந்து மீண்டும் தரையிலோ வேறு பொருட்கள் மீதோ படியக் கூடும்.

  சாப்பிடும் அன்னத்தில் முடி காணப்பட்டால் அந்த உணவைத் தவிர்த்து விட வேண்டும் என்று கூறப்படுகிறது.

  இலை போட்டோ தட்டு வைத்தோ தரையில் அமர்ந்து உணவு உண்கையில் கண்ணுக்குத் தென்படாமல் கீழே கிடக்கும் மெல்லிய முடிகள் காற்றில் பறந்து உணவில் விழும் அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட உணவை ‘அன்ன துஷ்டம்’ என்பார்கள். அதாவது அது துஷ்ட உணவு, தீய உணவு என்றாகிறது. முடியை எடுத்து எறிந்து விட்டு மீண்டும் அதே உணவை உண்ணுவது தவறு என்பது பெரியோர்களின் நிர்ணயம். அந்த இலையை விட்டு எழுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறது சாஸ்திரம். அவ்விதம் பரிமாறப்பபட்ட உணவில் முடி கிடப்பது என்பது அவ்வீட்டாருக்கு எத்தனை அவமானம்?

  ஏதோ வயிறெரிந்து சாபம் கொடுக்கும் போதோ, வீட்டில் பெரிய துக்கம், மரணம் போன்றவை சம்பவிக்கும் போதோ பெண்கள் தலையை விரித்துக் கொண்டு அழுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கண்ணகி அவ்விதம் தலை விரி கோலமாய் பாண்டிய மன்னனை சபித்தாள். திரௌபதி துகில் உரியப்பட்ட போது சபதம் எடுக்கிறாள். தன் தலை முடியைப் பற்றி இழுத்து வந்த துச்சாதனனின் மார்பை பீமன் கிழித்து அந்த ரத்தத்தை தடவினால்தான் மீண்டும் தலை முடிவேன் என்கிறாள். ஆனால் இன்று எல்லோர் வீட்டிலும் சிரித்து மகிழும் போதும் பெண்களை இந்நிலையில் பார்க்கையில் இது என்ன கலி காலம் என்று தோன்றுகிறது.

  தலையை விரித்துக் கிடப்பது பெண்களின் கவலை துன்பம், துக்கம் இவற்றைச் சுட்டி காட்டும் என சம்ஸ்கிருத நாடகங்கள் தெரிவிக்கின்றன. கைகேயி ராமனை வனத்திற்கு அனுப்ப வேண்டும் என்று வரம் கேட்பதற்காக தலையை விரித்துப் போட்டுக் கொண்டு சோக கிருகத்தில் படுத்துக் கிடந்தாள். துக்கத்திற்கு அடையாளமான இதெல்லாம் கூட தற்போது ஒரு பேஷனாகி விட்டது ஆச்சர்யம்தான்.

  ஒரு வேளை தலையை எண்ணெய் தடவி வாரி வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொண்டால் தாம் அழகாக இருக்க மாட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை தான் காரணமா? தலை முடியைப் முடியாமலும் பின்னாமலும் விரித்துப் போட்டால் அதிகம் வளரும் என்று அறிவியல் கூறவில்லையே!

  தாயைப் பார்த்து பெண் குழந்தைகளும் அதையே பின்பற்றுகிறார்கள். தற்காலப் பெண்களால் ஏற்படும் இத்தகைய கலாச்சார சீரழிவிற்கு காரணம்தான் என்ன? புரியவில்லையே…! இதுதான் பேஷன் என்கிற காட்டேரிப் பேய் படுத்தும் பாடா?

  தாலியையே கழற்றி ஆணியில் மாட்டி விடும் இக்காலப் பெண்கள் தலை பின்னிக் கொள் என்று சொன்னால் கேட்பார்களா? இதனைத் தடுக்க இயலாத இயலாமையையே பெரியவர்கள் உணர்கிறார்கள்.

  பெண் தெய்வங்கள் தலையை விரித்துப் போட்டிருப்பதாக ஓவியங்களிலும் திரைப்படத்திலும் சித்தரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் தெய்வங்கள் கொண்டையிட்டிருந்தார்கள் என்றும் அடர்த்தியான அவர்களின் கூந்தல் அழகைப் பற்றியும் புராணங்கள் விவரிக்கின்றன.

  சீதா தேவி தலை பின்னிக் கொண்டுதான் இருந்தாள். சுந்தர காண்டத்தில் சீதையின் நீண்ட பின்னலைப் பற்றிய குறிப்பு உள்ளது.

  லலிதா சஹஸ்ர நாமத்தில் ‘பந்துராலக அல்லது பர்பராலகா என்ற நாமம் உள்ளது. அடர்த்தியான வங்கியாக சுருள் சுருளான தலை முடி கொண்ட லலிதா தேவி என்பது இதன் பொருள். அவரைக்காய் போல் மேடு, பள்ளம் கொண்டது அதாவது நெளி நெளியானது என்று பொருள்.

  ‘சம்பகா சோக புன்னாக சௌகந்திக லசத் கசா…’ என்பது லலிதா சகஸ்ரநாமம். சம்பகம், அசோகம், புன்னாகம், சௌகந்திகம் என்ற புஷ்பங்களைக் கூந்தலில் அணிந்து விளங்குபவள் லலிதா தேவி என்பது இதன் பொருள். ‘ஸ்ருதி சீமந்த சிந்தூரீ க்ருத பாதாப்ஜ தூளிகா…’ -வேதமாதாவின் வகிட்டில் அப்பிய சிந்தூரமாக எந்த குங்குமம் இருக்கிறதோ அதையே தன் பாத தூளியாகக் கொண்டவள்’ என்பது இதன் பொருள்.

  நாம் தொலைகாட்சியில் சமையல் நிகழ்ச்சிகளில் பார்க்கிறோம். தொகுப்பாளரான பெண் தலை முடியை விரித்து முன் பக்கம் போட்டுக் கொண்டு கையால் அதனை கோதி வருடி விட்டபடியே இருப்பாள். பார்ப்பவருக்கு எத்தனை முடிகள் அந்த சமையல் பதார்த்தத்தில் விழுந்தனவோ என்று அருவருப்பாக இருக்கும். கண்றாவி! நீண்ட முடியை விரித்துப் போட்டு சமைப்பது, விளக்கேற்றுவது போன்ற செயல்களால் தீப்பிடிக்கும் அபாயமும் உள்ளது.

  தலைமுடி தூசி, புழுதி, கிருமிகள், பேன், ஈறு போன்றவை சேரும் இயல்பு கொண்டது. அதனை எப்போதும் விரித்து போட்டுக் கொண்டும் கைகளால் கோதிக் கொண்டும் இருப்பது அலட்சுமியை அதாவது பீடையை வீட்டிற்கு வரவேற்கும் செயலாகும்.

  தற்காலத்தில் மழலைகளுக்குப் பாலூட்டும் பெண்கள் தலையை முடிந்து கொள்ளாமலும் பின்னிக் கொள்ளாமலும் இருப்பதைப் பார்க்கையில் வருத்தம் ஏற்படுகிறது. சிறு குழந்தைகளின் உள்ளங்கையில் தாயின் முடிக் கற்றைகள் சிக்கிக் கொண்டு பிஞ்சு விரல்களிலிருந்து பிரித்து எடுப்பது சிரமத்தை அளிக்கிறது. குழந்தைகளின் வாயிலும் சென்று தொண்டையில் சிக்கும் ஆபாயமுள்ளது என்பதை மெத்தப் படித்த இன்றைய மகளிர் அறியாரா? அவர்களுக்கு அதையெல்லாம் கவனிக்க ஏது நேரம்? முன்பெல்லாம் குழந்தைகளுக்கு நகம் வெட்டுவது, காதில் அழுக்கெடுப்பது போன்றவற்றை எளிதாக குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்கள் செய்து விடுவார்கள். தற்போது பிள்ளைக்குப் பாலூட்டும் போதும் மொபைலில் முக நூலைப் பார்க்கும் பெண்களே அதிகம். சொன்னால் கோபம் மட்டும் பொத்துக் கொண்டு வரும்.

  காலையில் தூங்கி எழுந்ததும் முன்னுச்சி மயிரை வாரி தலையை முடிந்து கொண்டு பல் விளக்க வேண்டும். குளிக்கும் முன்னோ பின்னோ ஒரு முறை எண்ணெய் தடவி சீராக வாரி சீப்பில் சேரும் முடியை வீட்டில் தரையில் விழாமல் கையால் சேர்த்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

  சிலர் தம் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பார்கள் ஆனால் வெளியிடங்களுக்குச் செல்கையில் தங்குமிடங்களான அறைகளில் அங்கங்கே தலை முடியை போடுவதைக் காண முடிகிறது. சுருட்டி சுருட்டிக் கிடக்கும் முடியைப் பார்க்கும் எவருக்கும் அருவருப்பு ஏற்படுவது இயல்புதானே! அது அங்கே அலட்சியமாகப் போடுபவரை சூட்சுமமாக பாதிக்கவே செய்யும்.

  ‘தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை ‘ என்று திருவள்ளுவர் கூட அதன் இழிந்த தன்மையை விளக்கியுள்ளார்.

  வெளிநாட்டு மோகம் நம் பெண்களை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு குட்டை உடையும் கட்டை முடியும் அடையாளங்களாக உள்ளன.

  கார்பொரேட் செக்டர்களில் பணி புரியும் பெண்கள் வெஸ்டர்ன் கல்ச்சரைக் கடைபிடிக்கிறார்கள். இது தான் இப்போது டிரெண்ட், பேஷன் என்கிறார்கள். வீட்டிலிருந்து கிளிப் போட்டுச் செல்லும் சில பெண்கள் கூட ஆபீஸ் போனதும் கிளிப்பை எடுத்து விட்டு தலையை உதறி விரித்துப் போட்டுக் கொள்கிறார்கள்.

  கரிசலாங்கண்ணியும் கையாந்தரையும் போட்டுக் காய்ச்சி தலையில் தடவி தள தளவென்று சாட்டை போல் பாட்டிகளும் அம்மாக்களும் வளர்த்துத் தந்த முடியை வாழை மரம் சீவுவது போல் ஒரே வெட்டில் வெட்டிச் சாய்க்கும் இப்போதைய பெண்களின் போக்கைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

  நீண்ட முடியைப் பராமரிக்க இயலவில்லை என்ற காரணத்தை ஓரளவு தான் ஏற்க முடியும். ஏதோ தலையை முடிவதற்கோ பின்னல் போடுவதற்கோ நேரமில்லாதது போல் நடந்து கொள்ளும் இவர்கள்தான் பியூட்டி பார்லர்களில் மணிக்கணக்காக செலவிடுகிறார்கள்.

  தாங்கள் அணியும் மேல் நாட்டு உடைக்கு தலைப் பின்னல் பொருத்தமாக இருக்காது என்ற காரணமும் கூறப்படுகிறது. பொட்டு கூட வைத்துக் கொள்வதில்லை. பேண்ட், டீ ஷர்ட்க்கு பொட்டும் பின்னலும் பொருந்தாது என்ற நினைப்பு உள்ளது.

  நாற்பது, ஐம்பது வயதுக்காரர்கள் கூட தற்போது பேஷனாக தலையை சின்னதாக வெட்டிக் கொள்கிறார்கள். கேட்டால் வெட்டினால் அடர்த்தியாக வளரும் என்று கூறுகிறார்கள்.

  நாற்பது வயதைத் தாண்டியவர்கள் நிறைய பேருக்கு பின்னல் பின்னிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் ஏனோ தற்போது முடி துரும்பு போல் இளைத்து காணப்படுகிறது. ஒரு ரப்பர் பாண்டு போட்டு இறுக்கிக் கட்டுவதைத் தவிர எதுவும் செய்ய இயலாமல் உள்ளது.

  தற்காலத்தில் பெண்கள் ஸ்டைலாக தலை முடியை விரித்துக் கொண்டு அலைவது துரதிருஷ்ட தேவதையைத் தம் உடலுக்குள் விரைந்து அழைப்பதற்கு சமம் என்பது சம்பிரதாயம் அறிந்த பெரியோர்களின் வருத்தம்.

  சமைக்கும் போதோ முகம் கழுவும் போதோ பெண்கள் தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தால் மிக விரைவில் அவர்களின் உடலுக்குள் தீய சக்திகள் பிரவேசிக்கும் என்று ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளதை கவனிக்க வேண்டும். இதனால் அதிர்ஷ்டம் ஓடிப் போகும். செல்வம் நிலைக்காது.

  பழைய துணிகளுக்குப் பாத்திரம் வாங்கலையோ? என்று இது வரை தெருவில் தலை மேல் கூடையில் பாத்திரங்களோடு பெண்கள் கூவிச் செல்வதை பார்த்திருக்கிறோம். தற்போது விசித்திரமாக தலை மயிருக்கு பாத்திரம் தருவதாக சிறிய தராசோடு பெண்களும் ஆண்களும் தெருவில் கூவிச் செல்வதைக் காண நேர்கிறது.

  குறைந்த பட்சம் வீட்டில் இருக்கும் போதாவது பின்னிக் கொள்ளலாமே என்பது தான் பெரியவர்களின் ஆதங்கம். செழிப்பான கூந்தல் குறைந்து விட்டது. அவற்றை வெட்டும் பியூட்டி பார்லர்கள் பெருகின விட்டன.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  14 − 6 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »