காஞ்சியில் ஒரு கொடையாளியாய் வாழ்ந்த குஜராத்தி கங்காபாய்!

காஞ்சியில் சாலைத்தெருவில் இரு நூற்றாண்டுகள் பழைமையான ஒரு சத்திரம் இருக்கிறது. அதன் பெயர் கங்காபாய் சத்திரம்.

யார் இந்த கங்காபாய்? இவர் எப்படி காஞ்சிக்கு வந்தார்?! காஞ்சிக்கு வந்தவர் என்ன செய்தார்? எல்லாம் ஆச்சரியமானவை!

முந்தைய காலத்தில், இருக்கும் செல்வத்தை கோயில்களை மையமாக வைத்து, அவற்றின் வழியே ஏழைகளுக்குக் கொடுத்த செல்வந்தர்கள் பலர். அப்படி ஒருவர் கங்காபாய்.

குஜராத்தில் மிகப்பெரிய நகை வியாபாரியின் முதல் மனைவி கங்காபாய். இவர்களுக்கு வாரிசு எதுவும் இல்லை. இதனால் இறைத் தொண்டு ஆற்ற விரும்பி அதிலேயே ஈடுபட்டார் கங்காபாய். பின்னாளில் தன் கணவர் மறைவுக்குப் பிறகு தன் பங்கு செல்வத்தை எடுத்துக் கொண்டு, தெற்கே வந்தார்.

அறநெறியும் ஆலயங்களும் தர்மமும் தழைத்த தெற்குப் பக்கம் பெரும் செல்வ வளத்துடன் வந்தார். வரும் வழியில் மைசூரில் தங்க எண்ணினார். ஆனால் அப்போது திப்பு சுல்தானின் கடைசிப் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. எனவே அங்கிருந்தும் நகர்ந்து காஞ்சிபுரத்தின் பக்கம் வந்தார்.

அவருக்கு ஆற்காட்டில் 3000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. சென்னையிலும் இன்றைய சத்யமூர்த்தி பவன் இருக்கும் இடமும்கூட இந்த அம்மையாரின் இடம்தான் என்பார்கள்!

பின்னர் காஞ்சியில் அறப்பணிகள் பல செய்தார். காஞ்சியில் இந்த சத்திரத்தையும் அருகே சிற்பிகளைக் கொண்டு இரு கல்மண்டபங்களையும் எடுப்பித்தார்.

அந்த நாளில் கச்சி ஏகம்பத்திற்கும் வரதராசப் பெருமானுக்கும் மூன்று லட்சம் ரூபாய் கொடையளித்ததால் பிரம்மோத்ஸவத்தில் ஐந்தாம் நாள் இருவரும் மண்டபங்களில் எழுந்தருள வகை செய்தாள். இது இன்றும் நிகழ்கிறது.

பிரம்மோத்ஸவத்தில் அனைவருக்கும் உணவளித்தாள். ஐம்பதாண்டுகள் முன்பு வரை முழங்கை நெய் வழிய உணவு இட்ட செயலை ஊரார் இன்றும் கூறக் கேட்கலாம்.
இன்று…

அறநெறி பாழ்பட்ட தமிழ் மண்ணில் அனாதையாய் நிற்கிறது இந்தச் சத்திரம். அறம் நிலையாத் துறையின் கவனமின்மையாலும், அற நெறிகளில் எள்ளளவும் எண்ணமில்லா மக்களாலும் வைக்கோல் சுமந்து, சாணி அடித்து, குப்பைக் கிடங்காகி… பொலிவிழந்து கிடக்கின்றன இந்த மண்டபங்கள்!

அறநெறி உந்தித்தள்ள அனைத்தையும் அளித்த கங்காபாயி அம்மையின் பளிங்குக்கல் வடிவம் unveiled by lord varadaraja என்ற தகவலுடன் ஏதோ… இன்னமும் நின்றுகொண்டிருக்கிறது.

– ஜி.சங்கரநாராயணன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...