வண்ணத்துப் பூச்சி.. நாக்பூரில் எடுத்த படம்..

இயற்கையின் படைப்பில் மிக அருமையான உயிரினம் அது. துருதுருவென பறந்தாலும் பறவையாய் நாம் அதை நினைப்பதில்லை. ஒருபோதும் அடுத்த உயிரினத்திற்கு துன்பம் இழைக்காத இனமாம் அது. சாதுவான இனம். பல வண்ணங்களிலும், பலவிதமான வடிவமைப்பும் கொண்ட இனம்.

நாம் அதை பின் தொடர முயன்றாலும் நம்மால் அதனருகில் நெருங்க முடியாது. அதனைப் பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு புத்துணர்வு உண்டாகும்.ஆம்! படிப்பவர்கள் சரியாக யூகித்தீர்கள். பட்டாம்பூச்சி என்கிற வண்ணத்துப் பூச்சியே அந்த இனம்!!

வர்தாவில் என் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் பூக்களின் விருந்தாளிகளாக வரும் வண்ணத்துப்பூச்சிகளினால் மனம் மகிழும். ஒருநாள் ஊஞ்சலில் உட்கார்ந்து இயற்கயை ரசித்து கொண்டிருந்த போது, ஒரு பட்டாம்பூச்சி மூலிகைச் செடியில் உட்கார்ந்தது. அதன் வடிவமைப்பு ( Design) என்னை வெகுவாக கவர்ந்தது. உடனே, அவசர அவசரமாக என் கேமராவில் அதை கைது செய்தேன்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் போட்டோவை பார்த்த நான் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன். வண்ணத்துப்பூச்சியின் புகைப்படம் தெளிவாக இல்லை. மனம் ஒப்பவில்லை. முயன்றேன், முயன்றேன், அதனை தொடர என்னால் இயலவில்லை. எப்பொழுது வண்ணத்துப்பூச்சி பூக்களில் ஓய்வு எடுக்குமோ, அப்பொழுது என் கேமரா என் வசம் இருக்காது.

எப்பொழுதெல்லாம் அந்த ஒருவகை வண்ணத்துப்பூச்சியை காணும்போது மனதில் ஒரு அலையோசை தோன்றும். மனக்கனவாகவே இருந்தது.

நாட்கள் கடந்தன. வர்தாவில் இருந்து நாக்பூருக்கு குடி பெயர்ந்தோம். நாங்கள் இருக்கும் வீட்டின் பின்புறம் ஒருநாள் துணி உலர்த்த போன போது, சிமெண்ட் தரையில் அதே வடிவமைப்பை கொண்ட பட்டாம்பூச்சி. மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தது. இம்முறை வாய்ப்பை நழுவ விட மனமில்லை. உடனே ஓடிச்சென்று என் கைப்பேசியில் படமெடுத்தேன்.

என்ன ஆச்சரியம். பலமுறை எனக்கு போக்குக்காட்டிய அதே வகை வண்ணத்துப்பூச்சி தற்போது இளம் நடிகை மாதிரி அழகாக எனக்கே எனக்காக போஸ் கொடுத்தது(!).

வண்ணத்துப்பூச்சி.. வார்தாவில் எடுத்த படம்

என்ன கொள்ளை அழகு!. வண்ணக் கலவையை சொல்வதா(!)(?), வண்ண வடிவமைப்பை சொல்வதா(!)(?). கருப்பு வெள்ளை வண்ணத்தில் கொஞ்சம் நீலமும், ஆரஞ்சுமாக கவர்ந்திழுக்கும் வண்ணக் கலவை. வடிவமைப்போ பெண்ணின் கருப்பையில் உருவான கருவைப்(Initial Stage) போன்றது. பல நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருந்த அதே பட்டாம்பூச்சியானது எனக்கு ஒர் அருமையான வாய்ப்பை வழங்கியதால் மகிழ்ச்சியுற்றேன்.

இந்த நிகழ்வினால் நான் அறிந்து கொண்ட விஷயங்கள்::

👉 நினைப்பதே நடக்கும்;
👉 ஆதலால் நல்லதையே நினைக்க வேண்டும்.
👉 காலம் தம் பங்கினை செய்யும் வரை காத்திருக்க வேண்டும்.
👉 வண்ணத்துப்பூச்சியைப் போல வாழ்வின் அனுதினமும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
👉 அவ்வாறு மனதில் கொண்டால் நம் வாழ்விலும் பல அற்புத வண்ணமயமான நிகழ்வுகளும், எதிர்மறை நிகழ்வுகளிலும் தைரியமாக இருக்க முடியும்.

அனுபவக் கட்டுரை: – ஜெயஸ்ரீ.எம்.சாரி, நாக்பூர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...