ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற “காசு பிரம்ம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா” வில் இனி நடைபயிற்சி மட்டுமே செய்யலாம். ஜாகிங், ரன்னிங் போன்றவற்றிற்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவை பிறப்பித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதன்படி பார்க்கில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தினமும் காலை 3000 பேருக்கு மேலும் மாலை ஆயிரத்துஐநூறு பேருக்கு மேலும் வாக்கரகள் பார்க்கில் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் சிலர் பிரைவேட் பயிற்சியாளர்களை ஏற்படுத்திக்கொண்டு பார்க்கில் ஜாகிங் ரன்னிங் செய்ய ஆரம்பித்தனர். அதனால் ஏற்கனவே குறுகலாக உள்ள வாக்கிங் டிராக் சந்தடியாக மாறி பிரச்சனைகளை ஏற்படுத்தியது.

அதனால் மூத்த குடிமக்கள் அவ்வப்போது புகார் செய்து வந்தனர். சில சமயங்களில் ஓடுபவர்கள் தெரியாமல் இடித்து விடுவதால் நடைபயிற்சி செய்யும் முதியவர்கள் கீழே விழ நேர்ந்துள்ளது. சீனியர் சிட்டிசன்கள் ஒன்று சேர்ந்து அளித்த புகாரின் பேரில் பூங்காவில் ஓடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பார்க்கைச் சுற்றி வெளியில் உள்ள நடைப்பயிற்சி மேடையில் ஜாகிங், ரன்னிங் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. அதிகாரிகளிடம் சீனியர்கள் அளித்த புகாரை ஏற்றுக் கொண்டு தெலுங்கானா வனத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கேபிஆர் தேசிய பூங்கா என்பது இங்குள்ள உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கும் நடைப் பிரியர்களுக்கும் விருப்பமான இயற்கை அழகு மிக்க காற்றோட்டமான பொழுது போக்கிடம்.

“நடைப் பயற்சி செய்யும் முதியோர்கள் தம்மைச் சுற்றி ஓடுபவர்களால் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு ரன்னர் தம்மை நெருங்குவதைக் காணும் போது அவர்கள் அஞ்சுகிறார்கள். ஓடுபவர்கள் தெரியாமல் தம்மை இடித்து விடுவார்களோ என்று பயந்து கொண்டே நடக்க வேண்டியிருக்கிறதாகக் கூறுகிறார்கள்.

அதனால் மேற்கொண்டு வேறு ஏற்பாடு செய்யும் வரை உள்ளே ஓடுவதும் ஜாகிங் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது” என்று மாவட்ட வனத் துறை அதிகாரி பி.வெங்கடேஸ்வரலு ஹைதராபாதில் தெரிவித்தார்.

கேபிஆர் வாக்கர்ஸ் அசோசியேஷன் அங்கத்தினர்கள் அதிகாரிகளை சந்தித்து தங்களின் பயம் குறித்து புகார் அளித்ததின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“மக்கள் ஒரு கும்பலாக ஓடி வருகையில் நடப்பவர்களுக்கு இடம் இருப்பதில்லை. தனி ஒருவராக ஓடி வருபவர்களைப் பற்றி எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று கேபிஆர் வாக்கர்ஸ் கிளப் தலைவர் என்.ஜே.ரெட்டி தெரிவித்தார். மேலும் இந்த பார்க் நடைபயிற்சிக்காக மட்டுமே உருவானது என்றும் ஆனால் ஓடுபவர்களும் ஜாகிங் செய்பவர்களும் இந்த பூங்காவை உபயோகிக்கத் தொடங்கியபின் நடப்பவர்களுக்கு இடமிருப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த அறிவிப்பால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாகர்களும் ரன்னர்களும் பாதிக்கப்படுவார்கள்” என்று ரன்னர் கிளப்ப தெரிவித்துள்ளது. அதனால் இவ்விரு பிரிவுகளுக்குமிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

1940 இல் கட்டப்பட்ட இந்த பூங்கா சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இளவரசர் முக்காராம் ஜாஹ்வுக்கு அவர் தந்தை இளவரசர் ஆசாம் ஜாஹ் 1967ல் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த வளாகத்தில் ஒரு அரண்மனையையும் அதன் அருகில் மலைமேல் மோர் பங்களா, கார் பங்களா, யானை லாயங்கள் , குதிரை கொட்டடிகள், மற்றும் கால்நடைகளுக்கான கொட்டில்கள், கார்கள் நிறுத்துவதற்கான மோட்டார் கானா, கனரக இயந்திரங்களுக்கான தொழிற்சாலை, பெட்ரோல் பம்ப், பல அவுட் ஹவுஸ்கள், இரண்டு கிணறுகள், சில குளங்கள் எல்லாம் உள்ளன.

600 வகை மரங்களும், 140 வகை பறவைகளும், 30 வகை வண்ணத்துப் பூச்சிகளும், மற்றும் ஊர்வனவும் இந்த தேசிய பூங்காவில் உள்ளன.

கருங்கல் காட்டின் நடுவில் பசும்புல் காடு என்று புகழப்படும் இந்த பூங்காவில் மயில்கள் சிறப்பாகப் பேணி வளர்க்கப்படுகின்றன.

1998ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசாங்கம் இதனை தேசிய பூங்காவாக அறிவித்தது.

-ராஜி ரகுநாதன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...