பள்ளிக்கூடங்களில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து உள்ள நிலையில், உங்கள் குழந்தைகளின் நேரத்தை எப்படி பயனுள்ளாதாக மாற்றுவது என்பது பெற்றோர்கள் திட்டமிடுவது வழக்கம்.
இந்த கோடை விடுமுறை மாணவர்களுக்குப் பொழுதுபோக்காகவும் அதேநேரத்தில் பயனுள்ள வகையிலும் இருக்க வேண்டும் என்று திட்டமிடும்போது, அதில் புத்தக வாசிப்பும் ஒரு பகுதியாக இருப்பது நல்லதாக இருக்கும்.
கோடை விடுமுறை என்பது மாணவர்கள் தங்களது படிப்பில் இருந்து விலகி, மீண்டும் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான கால இடைவெளி. அந்த ஓய்வுக் காலத்திலும், அவர்களை படிக்க சொல்லி கட்டாயப்படுத்திவிட கூடாது.
சில தனியார்ப் பள்ளிகள், கோடை விடுமுறைக் காலத்தில் அடுத்தக் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தைப் படிக்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன. மாணவர்கள் உற்சாகத்தோடு படிக்க வேண்டிய பாடங்களை, கட்டாயத்தின் பெயரில் படிக்கச் செய்வது கல்வியின்மீது இயல்பாக இருக்கும் ஆர்வத்தைச் சிதைத்துவிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஆண்டு முழுவதும் பள்ளிக்கூடம் சென்று படித்துவந்த மாணவர்கள், கோடை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், வீட்டில் உள்ள மூத்தவர்களோடு உரையாடவும் வாய்ப்பளிக்க வேண்டும்.
நவீன வாழ்க்கையில் தலைமுறைகளுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்களும் அனுபவப் பகிர்தல்களும் தடைப்பட்டு நிற்கின்றன.
கோடை விடுமுறைக் காலத்திலாவது, பெரியவர்களோடு குழந்தைகள் பேசவும் பழகவும் வாய்ப்புகளை உருவாக்கலாமே….