spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்திருமங்கலம் அடையில் இருந்து... கின்னஸ் சாதனை வாக்களிப்பு இயந்திரம் வரை..!

திருமங்கலம் அடையில் இருந்து… கின்னஸ் சாதனை வாக்களிப்பு இயந்திரம் வரை..!

- Advertisement -

என்னுடைய குடும்பம் தேசபக்தி மிகுந்த குடும்பம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் பல தெரியாத விஷயங்கள் இருப்பதனால் இக்கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்குக் காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலாகக் கூட இருக்கலாம். இது என்ன புதுக்கதை? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதிலும் என் குடும்பத்தின் பங்களிப்பு இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

அதற்கு முன்பாக என் குடும்பப் பெரியவர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகளைச் சொல்ல விழைகிறேன்.

என்னுடைய தகப்பனாரின் தகப்பனார் திருமங்கலம் சுப்பையர் என்று அழைக்கப் படுபவர். இவருடைய முழு நாமகரணம் கீழாம்பூர் ச.சங்கர சுப்பிரமணிய அய்யர் என்பதுதான். திருமங்கலத்தில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக இவரும், இவருடைய சகோதரியின் கணவரும் இணைந்து காப்பி ஹோட்டலை நடத்தி வந்தார்கள். திருமங்கலத்தில் இவர் இருந்த காரணத்தினாலும் இவரைச் செல்லமாக சுப்பையா என்று அழைத்த காரணத்தினாலும் இவர் திருமங்கலம் சுப்பையர் ஆனார்.

மிக அருமையாக சரக்குப் போடுவதில் (பலகாரங்கள்) இவர் கெட்டிக்காரர். ஜிலேபி பிழிந்தால் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என் பாட்டியும், என் அத்தையும் சொல்லி நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.

என்னுடைய தாத்தா திருமங்கலம் காப்பி ஹோட்டலில் தயார் செய்த திருமங்கலம் அடை என்பது ரொம்ப பிரசித்தி பெற்றது. திருமங்கலம் அடையை பிரசித்திப் பெற செய்தவரும் என்னுடைய தாத்தாதான். இன்று சென்னையில் பல ஹோட்டல்களில் திருமங்கலம் அடை என்று விற்பனை செய்யப்படுகிறது.

மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு கடைக்கு நானும் என் மாமாவின் மகன் திரு.கௌசிக் ராஜாவும் சென்று அது என்ன திருமங்கலம் அடை? என்று கேட்டோம். அதன் ரகசியத்தை அந்த ஹோட்டல் முதலாளி சொன்னபோது நான் அசந்து போனேன்.

திருமங்கலத்தில் சுப்பையர் என்று ஒரு மனிதர் அந்தக் காலத்தில் இருந்தாராம். அவர் அடை செய்வதில் ரொம்பப் பிரபலமானவர். அடை தயாரிப்பில் சரியான விகிதத்தில் மாவுகளைக் கலந்து, சின்னச் சின்ன துண்டுகளாகத் தேங்காயை அதற்குள் நறுக்கிப் போட்டு அதிகமாக கறிவேப்பிலை, கொத்தமல்லி இரண்டும் அடையில் இருக்கும்படிச் செய்வாராம்.

அதோடு மட்டுமல்லாமல் அப்பத்தின் நடுவில் குழியிடுவதைப் போன்று அடையிலும் இவர் குழி இடுவார். அந்தக் குழிக்குள் வெல்லத்தையும், வெண்ணையையும் வைத்து இவர் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார். தனித் தட்டில் கொத்தமல்லி சட்னியும், அவியலும் தரப்படும்.

இப்படி அடை தயார் செய்து இலையில் பரிமாறுவதை திருமங்கலம் அடை என்று சொல்வார்கள். இதை உருவாக்கியவர் திருமங்கலம் சுப்பையர் என்று அவர் சொன்ன பொழுது 100 கோடி ரோஜாப் பூக்கள் என் மீது வந்து விழுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. திருமங்கலம் அடைக்கு காப்பி ரைட் இன்று எங்கள் குடும்பத்திற்குதான் கொடுக்கப்பட வேண்டும்.

திருமங்கலம் சுப்பையர் தன்னுடைய கடையை திருமங்கலத்தில் வேறு ஒருவருக்குக் கொடுத்துவிட்டு விவசாயம் செய்வதற்காக கீழாம்பூரை நோக்கி 1930களில் வந்து சேர்ந்தார். காந்திய எண்ணம் அவரிடமும் தலைகாட்டியது. நேரிடையாக சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஈடுபடாவிட்டாலும் காந்திய கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

அதன் காரணமாகத் தன் வீட்டின் மாடியில் கதர் நெய்வதற்காகத் தனியாக தறி ஒன்றை அமைத்தார். அதில் ஓடத்தை வைத்துக் கொண்டு அவரே நெய்து அத்துணியை அம்பாசமுத்திரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று கதர் விற்பனைக்காக ஏற்பாடும் செய்தார்.

அதோடு மட்டுமல்லாமல் அவரே தனக்குரிய வேஷ்டியையும் நெய்து கொண்டார் என்பதுதான் கூடுதல் தகவல் ஆகும். தன் கையே தனக்கு உதவி என்று இருந்தவர் என் தாத்தா திருமங்கலம் சுப்பையர்.

அதே போன்று கீழாம்பூருக்கு மேற்கே உள்ள மேலாம்பூரில் உள்ள தோட்டத்தில் காசி விஸ்வநாத அய்யர் (திருமங்கலம் சுப்பையரின் மனைவி பொன்னம்மாளின் சித்தப்பா) அவர்களுடன் இணைந்து தறிச் சாலையை உருவாக்கினார். இவருடைய தறியில் இருந்து நெய்யப்பட்ட ஆடைகளை கோமதி சங்கர தீட்சிதர், சொக்கலிங்கம் போன்றவர்கள் வாங்கி தேச பக்தர்களுக்கு வழங்கினார்கள் என்பது தனிக்கதை.

என்னுடைய இன்னொரு தாத்தாவின் பெயர் திரு.ஏ.என்.சிவராமன். ஊர் உலகம் அறிந்தவர். தினமணியின் முன்னாள் ஆசிரியராக இருந்தவர். என்னுடைய பாட்டி பொன்னம்மாளின் ஒன்றுவிட்ட சகோதரர். என்னுடைய அரசியல் குருநாதர். என்னுடைய மனைவி சரளாவின் தாத்தாவின் சொந்த சகோதரர்.

இத்தனை பீடிகை ஏன் என்றால் சிவராமன் அவர்களுடைய அரசியல் பங்களிப்பும் சுதந்திரப் போராட்ட பங்களிப்பும் எழுத்துலகப் பங்களிப்பும் இந்த ஊர் உலகம் அறிந்ததுதான் என்பதை நினைவுபடுத்துவதற்காகத்தான்.

அவர் மூலமாகத்தான் எழுத்துத் துறைக்கும் நான் அடியெடுத்து வைத்தேன். இன்று உ.வே.சா., கி.வா.ஜ. போன்றவர்கள் ஆசிரியராக இருந்த நாற்காலியில் நான் அமர்ந்து இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு முழுக்க முழுக்கக் காரணம் என் தாத்தா ஏ.என்.சிவராமன் அவர்கள்தான்.

என்னைச் செதுக்கி சர்வதேச அரசியலில் இருந்து சரித்திர பூகோளங்கள் வரை எல்லாவற்றையும் நேர்பட கற்பித்தவர் இவர்தான். என்னுடைய உறவினர் என்று சொல்வதைவிட இவரை என் குருநாதர் என்று சொல்லலாம். இவருடைய தினமணி தலையங்கத்தின் மூலம் மத்திய மாநில அரசாங்கங்கள் பல சட்டத்திருத்தங்களைக் கூடக் கொண்டு வந்திருக்கின்றன. இந்திய அரசியலில் இவர் ஒரு மிகப் பெரிய ஆளுமை என்று சொல்ல வேண்டும். இவருடைய தேசபக்தி அளவிட முடியாத ஒன்று.

நாட்டிற்கு இவர் செய்த சேவைகளும் அளவிட முடியாதது. இவருடைய வாழ்க்கை வரலாற்றை தேசத்தின் குரல் என்னும் தலைப்பில் நான் நூலாக்கிக் கொண்டிருக் கிறேன். இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். தமிழ் கூறும் நல்உலகில் யாருக்குமே கிடைக்காத ஓர் அற்புதமான பதவியில்தான் அதாவது கலைமகள் ஆசிரியர் பொறுப்பில் நான் அமர்ந்திருக்கிறேன் என்று சொன்னாலும் எங்களுடைய முன்னோர்கள் அமர்ந்த நாற்காலியில் நான் அமர்வதில்லை. எங்கள் கலைமகள் அலுவலகத்திற்கு வந்து பார்த்தால் அது புரியும்!

கி.வா.ஜ. அவர்களுடைய நாற்காலியைத் தொட்டுக் கும்பிடத்தான் என்னால் முடியுமே தவிர அதில் அமர்ந்து கொண்டு கோலோச்ச முடியாது. கி.வா.ஜ. அவர்களுடைய நாற்காலியை பூஜைப் பொருளாக என் அலுவலகத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

இப்பொழுது மறுபடியும் முதல் பாராவின் விஷயத்திற்கு வருகிறேன். இந்த தேர்தலில் என் குடும்பத்தின் பங்களிப்பை சொல்வதற்காகத்தான் மேலே உள்ள புராணங்கள். தெலுங்கானாவில் நிஜாமாபாத் தொகுதி 185 வேட்பாளர்களுடன் திணறியது. நோட்டோவுடன் சேர்ந்து 186 சின்னங்கள் கொண்ட ஈவிஎம் மிஷின் வாக்குப் பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குப் பெட்டிகளை இரவு பகல் பாராமல் 575 பொறியாளர்கள் உருவாக்கினார்கள்.

இது ஒரு கின்னஸ் சாதனையாகும். பெங்களூரில் உள்ள இசிஐஎல், பிஇஎல் நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள்தான் இந்த மெகா வாக்குப் பெட்டிகளை உருவாக்கியவர்கள். இதற்கு தலைமையேற்று நடத்திய பொறியாளராக திருமங்கலம் சுப்பையரின் பேரனும், என்னுடைய சித்தப்பா எஸ்.ராமசுப்ரமணியம் என்கிற ஐயாசாமியின் மகனுமான ஆர்.சங்கர சுப்பிரமணியன் (பொதுமேலாளர் பிஇஎல்) இருந்தார் என்பது எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்தப் பெருமையாகும். என் பெயரும் சங்கர சுப்பிரமணியன்.

என் தம்பியின் பெயரும் சங்கர சுப்பிரமணியன்.  திருமங்கலம் சுப்பையரின் முழு பெயரான சங்கரசுப்பிரமணியன் தான் எனக்கும் பெயரானது. என் சித்தப்பாவின் மகனுக்கும் பெயரானது.

ஏதோ ஒரு விதத்தில் பல காலமாக எங்களுடைய குடும்பம் இந்தத் தேசத்திற்காகப் பணியாற்றிக் கொண்டு வருவதை எண்ணி நான் மகிழ்ந்து போகிறேன். பாரத அன்னைக்குச் சேவை செய்வதற்கும் இனி வருங்காலங்களிலும் அச்சேவை தொடர்வதற்கும் எங்களுடைய குலதெய்வமான ஸ்ரீசிவசைல நாதரும் ஸ்ரீபரமகல்யாணியும் அருள்புரிய வேண்டும்

– கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (ஆசிரியர், கலைமகள் இதழ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe