குண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்!

தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்த நிலையில், “மயிரிழையில் உயிர் தப்பினோம்” என்று,  இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளார்.

தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்த நிலையில், “மயிரிழையில் உயிர் தப்பினோம்” என்று,  இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளார்.

தொடர் குண்டு வெடிப்பின்போது இலங்கையில் சிக்கி உயிர் தப்பினார் திருப்பூர் தி.மு.க. பிரமுகர் செல்வராஜ்! இவர் இலங்கையில் இருந்து திருப்பூர் திரும்பிய நிலையில், தாம் மயிரிழையில் உயிர் தப்பியதாகக் கூறினார்.

தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர்  இலங்கைக்குச் சென்றிருந்தனர். குண்டுவெடிப்பு நிகழ்வுகளின் போது, அங்கிருந்தவர்கள், உயிர் தப்பிய நிலையில் ஊர் திரும்பினர்.   குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த செல்வராஜ் தனது திகில் அனுபவங்களை செய்தியாளர்களிடம் கூறிய போது…

இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்லலாம் என்று கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் கூறினார்கள்.  நான் வெளிநாடு எதுவும் சென்றதில்லை. இதனால் முதல் முறையாகச் செல்வதால், அருகில் உள்ள இலங்கைக்கு செல்வோமே என்று அனைவரும் முடிவு செய்தோம்.

தேர்தல் முடிந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி மாலை 3 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டோம். அன்று இரவே இலங்கை போய்ச் சேர்ந்தோம்.

என்னுடன் கட்சியின்  வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், வடக்கு மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் ராஜ்மோகன்குமார், மாநகர பொருளாளர் செந்தூர் முத்து, 6-வது வார்டு செயலாளர் மணி, ஓட்டல் அதிபர் முருகானந்தம் என நண்பர்களும் உடன் வந்தனர்.   நாங்கள் கொழும்பு நகரில் கிங்ஸ்பரி நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம்.

என்னுடன் மேலும் இருவர் ஹோட்டலின் 7-வது மாடியிலும், மீதமுள்ள 3 பேர் 6-வது மாடியிலும் தங்கியிருந்தோம். 21-ஆம் தேதி காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு காலை டிபன் சாப்பிடலாம் என ஓட்டலின் கீழ்த் தளத்துக்கு செல்ல தயாராக இருந்தோம். அந்த நேரம்..  காலை 8.45 மணி … ஹோட்டலின் கீழ்த்தளத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.

அந்த ஹோட்டல் கட்டடமே குலுங்கியது. ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீர் பல அடி உயரத்துக்கு மேலே எழும்பியது.

இதைப் பார்த்து பயந்த நாங்கள், முதலில் ஏதோ சுனாமி வந்து விட்டதோ என்று திகிலடைந்தோம். பின்னர் கீழ்த்தளத்தில் மக்கள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் எங்கள் அறைக்கு விரைந்து வந்து எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்துச் சென்றனர்.

ஹோட்டல் கீழ்த் தளத்தில் எங்கும் மரண ஓலம்! ரத்தம் எல்லா இடங்களிலும் சிதறியிருந்தது. முதலில் ஏதோ கேஸ் சிலிண்டர்தான் வெடித்தது என்று கூறினார்கள். அதன் பிறகே வெடிகுண்டு வெடித்தது தெரிய வந்தது.

உணவு உண்பதற்காக சரியாக நாங்கள் கீழ்த்தளம் செல்ல இருந்த நேரத்தில்தான் இந்த குண்டு வெடிப்பும் நடந்துள்ளது. மயிரிழையில் நாங்கள் உயிர் தப்பினோம். எங்கு செல்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை.

பின்னர் எங்கள் ஆறு பேரையும் கிங்ஸ்பரி ஓட்டலில் இருந்து வேறோர் இடத்தில் தங்க வைத்தனர். பாஸ்போர்ட்டை மட்டும் நாங்கள் கையில் வைத்திருந்தோம். உடமைகள் அனைத்தும் கிங்ஸ்பரி ஓட்டல் அறையில் இருந்தன. பின்னர் உடமைகளை எடுத்துக் கொண்டு தாஜ் ஹோட்டலில் எடுத்துச் சென்று தங்க வைத்தனர்.

வெளியில் என்ன நடக்கிறது என்று அறிய முடியவில்லை.  குடும்பத்தினரும் நண்பர்களும் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை தெரிவித்தோம். ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் வெளியே செல்ல முடியாத நிலை. ஆனால், நேரத்துக்கு சரியாக சாப்பாடு மட்டும் வந்து சேர்ந்தது.

எனக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட  அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே தமிழ் பேசும் செவிலியர்கள் கூறியதைக் கேட்ட பின் தான் தொடர் குண்டு வெடிப்பில் மிகப் பெரும் அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

நாங்கள் 23ஆம் தேதி இந்தியா திரும்ப ஏற்கெனவே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால், காலை  இலங்கையில் இருந்து கிளம்பி மதியம் 2.45க்கு கோவை விமான நிலையம் வந்து சேர்ந்தோம். கோவை மண்ணை மிதித்த பின்னரே எனக்கு உயிர் வந்தது…. என்றார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...