சிங்கப்பூரில் திருமுறை தமிழிசை இரு ஓதுவார்கள் பங்கேற்பு!

திருமுறை தமிழிசை இரு ஓதுவார்கள் பங்கேற்பு!

சிங்கப்பூரின் செண்பக விநாயகர், மாரியம்மன் எனும் இரு பெரும் கோயில்களில் பக்திப் பாடல் பணி புரியும் இரு ஓதுவார்கள் நேற்றிரவு இனிமையான திருமுறை இசை நிகழ்ச்சி ஒன்றை தமிழ்ச் சுவையோடு தந்தனர். தேன் தமிழாக இனிக்கும் திருமுறைப் பதிகங்களை தித்திக்கும் ராக, தாளக் கச்சிதங்களுடன் இரண்டரை மணி நேரம் மேடை ஏற்றினர். பக்க வாத்யங்களாக அனுபவக் கலைஞர்கள் கு.மணிகண்டனும் (வயலின்), எஸ்.தேவராஜனும் (மிருதங்கம்) நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்தனர்.சிங்கப்பூர் திருமுறைக் குழுவினரும், ஆலய நிர்வாகிகளும் இணைந்து படைத்த நிகழ்ச்சி இது.

அந்தக் காலத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்கும் தேரோடும் வீதியை நினைவு படுத்தும் நாட்டை ராகத்தில் விநாயகரை முன்னிறுத்திய இரு கலைஞர்களும், கிட்டத்தட்ட 20க்கு மேற்பட்ட ராகங்களின் பாவங்களை மேடையில் இறக்கினர். கௌரி மனோகரியில் ‘நம்கடம் பனைப் பெற்றவள்’, அமர்க்களமான ஆரபியில் ‘வீணையர்’, சிவக் கொழுந்தை சாராக்கித் தந்த பந்துவராளி ராகம், குந்தவராளியில் ‘வேதம் ஓதி’, ’வந்தவர்களுக்கெல்லாம் இன்பங்கள்’ தந்த அமிர்தவர்ஷிணி ராக பதிகம் போன்றவை இரு கலைஞர்களின் இசைத் திறனையும், தமிழ்த் திறனையும் வெளிப்படுத்தின. கரகரப்பிரியாவில் அவர்கள் தந்த ‘தேனைப் பொழிந்து’, இன்பப் பொழிவு. கர்நாடக தேவகாந்தாரியில் அமைந்த ‘என்னை எங்கே” ஒரு நல்ல தமிழ்ச் சுவை.

அரி காம்போதி , நிகழ்வின் முக்கிய ராகம். விருத்தத்துடன் பாடலும் அருமையாக அமைந்தது.இப் பதிகத்தில், பக்க வாத்ய மணிகண்டன், முக்கிய நாயகன் ஆனார். அரி காம்போதியிலும் அவர் அள்ளிக் கொட்டியதை அனைவரும் ரசித்தனர். திரு.வடிவேலு பல பதிகங்களை ராக சுவையுடன் தந்தார்.

அடாணா ராகத்த்திற்கு அத்தனை அழகா என வியந்து போனோம், ஒதுவார்கள் இருவரும் ‘மாதர் மடப் பிடியும்’ என்கிற யாழ்முறிப் பண்ணைப் பாடியபோது! சொல் நடை சிறக்கும் இப் பாடல் தர்மபுரித் தெய்வத்தைப் புகழ்கிறது.

சைவப் புகழ் பாடும் தெய்வீகத் தமிழ்ப் பாடல்களுக்குப் பொருத்தமான மெட்டமைத்து, இசைக் கட்டுடனான ராகங்களை நடமாடவிட்ட பாங்கை எப்படியும் பாராட்டலாம். கீரவானி, மதுவந்தி, ரீதி கௌலை, மோகனம்,ரேவதி ஆபேரி, சிவரஞ்சனி ஆகியவற்றுடன், நீலாம்பரி, காப்பி, சண்முகப் பிரியா, சிந்துபைரவி உள்ளிட்ட ராக மாலிகைகளும் சுவையில் ஒரு தனிச் சுவை!

திறன் படைத்த இந்த ஓதுவார்கள், காலை-மாலை நேரங்களில் கோயில் சன்னதிகளில் குறுகிய காலத்திற்கு மட்டும் பாடிக் கொண்டிராமல், தமிழ் மக்கள் அரங்கில் பாடும் வாய்ப்புகளை கோயில் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். தமிழும் வளரும் – இசையும் வளரும்!

-ஏபிஆர்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...