spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?லூஸ்ஸூ மோகன்னா? கிரேஸி மோகனா?

லூஸ்ஸூ மோகன்னா? கிரேஸி மோகனா?

- Advertisement -

சினிமா உலகத்தைப் பற்றிய எனது ஆர்வம் குறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய தகவலுக்காகவும் ஆய்வுக்காகவும் மட்டுமே சில விஷயங்களை இன்றைய தலைமுறையிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது வழக்கமாகிவிட்டது. மாதத்திற்கு ஒரு படம் கூடப் பார்ப்பதில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இதற்கெல்லாம் சம்பந்தமில்லாமல் எனக்கும் மோகனுக்கும் உள்ள நல்லுறவு முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டது. அதிகம் எழுத முடியாதபடி உடல் சோர்விலும் மனச் சோர்விலும் பாதிக்கப்பட்டிருக்கும் நான் ஒரு சில விஷயங்களை மட்டும் சொல்கிறேன்.

முதல் சந்திப்பு. 1985ஆக இருக்கலாம். அடையாறு பஸ் வருவதற்காக மந்தைவெளி பஸ் ஸ்டாண்டில் நான் நிற்கிறேன். அப்போது என்னுடைய நண்பன். சு.ரவி ஒரு ஸ்கூட்டரில் வந்து அங்கே இறங்கினான். ஸ்கூட்டரை யாரோ ஒருவர் ஓட்டி வந்தார்.

அந்த வாரக் குமுதத்தில் நடிகர் கிரேசி மோகனின் பேட்டி இருந்தது. அந்தப் பேட்டி சு.ரவியை சிலாகித்து இருந்தது. அந்த ஞாபகத்தில் நான் சு.ரவியிடம் கேட்டேன்.

“என்னடா, உன் பிரண்டு லூசு மோகன் உன்னப் பத்தி நல்லபடியா சொல்லிருக்கானே. நடிகனா இருந்தாலும் உண்மையைப் பேசறானே.” என்று சொல்லும்போதே இரண்டு குறிக்கீடுகள்.

ஒன்று, சு.ரவி என் கையை இறுக்கப் பிடித்து இழுத்தான். சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தவர், அவர் தான் சு.ரவியை ஸ்கூட்டரில் அழைத்து வந்தவர், “சார்” என்று அழைத்தார்.

அழைத்து “சார், லூசு மோகன் இல்லை, கிரேசி மோகன்” என்றார்.

எனக்கு, ஏதோ தப்பு செய்துவிட்டோம் என்று தோன்றியது, இருந்தாலும் வீம்புக்காக “ஏதோ கொஞ்சம் முன்ன பின்ன, இதுல எப்படி இருந்தா என்ன” என்று சொல்லி முடித்தேன்.

அந்த நபர் “நான் தான் அந்த கிரேசி மோகன்” என்று சொல்லி கையை நீட்டினார்.

“இல்லீங்க. நான் சொன்னது…” என்று இழுத்தேன்.

அவர் அசரவில்லை. சிரித்துக்கொண்டே “அதான் சொல்லிடீங்களே அப்புறம் என்ன. வேற என்ன சொல்லணும்” என்று வம்புக்கிழுத்தார்.

எனக்குப் பேச வாய் வரவில்லை .தவிர, எந்த நேரமும் சு.ரவியால் தாக்கப்படலாம் என்ற அபாயம் தென்பட்டதால் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி தப்பித்துவிட்டேன்.

இது நடந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் எங்களுக்குள் தொடர்ந்து நல்லுறவு இருந்தாலும் மோகன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் “சுப்பு, நான் லூசு மோகன் இல்லை , கிரேசி மோகன்” என்பான். அங்கே இருப்பவர்களெல்லாம் என்னை இளக்காரமாகப் பார்ப்பார்கள். பிறகு ஒரு கட்டத்தில் எனக்கு கோபம் வந்துவிட இப்படிச் சொல்வதை நிறுத்திவிட்டான்…

இன்று பகலில் ஏதோ ஒரு உடல் உபாதையில் நான் துவண்டிருந்த நேரம் வாட்ஸப்பில் ‘கிிரேசி மோகன் மறைந்தார் ‘என்ற செய்தி வந்தது. மோகனுடைய விட்டிற்கு அடுத்த தெருவில் தான் இசைக்கவி ரமணன் வீடு. ரமணனை அழைத்தேன். அவனுக்கும் சரியாக விவரம் தெரியவில்லை.

இதற்குள் அவசரப்பட்டு சிலர் முகநூலில் அஞ்சலி செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். அதைத் தடுக்கும் விதமாக ஒரு பதிவு போட்டுவிட்டு செல்போன் மூலம் ஒவ்வொருவராகத் துரத்திக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் தொலைக்காட்சி செய்திச் சேனல்களில் மோகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு காவேரி மருத்துவமனையிலிருந்து ‘மோகன் நம்மைவிட்டுப் போய்விட்டான்’ என்கிற செய்தியை ரமணன் அனுப்பினான். சிறிது நேரத்தில் எல்லா தொலைக்காட்சிகளும் இதை வெளியிட்டன.

என்ன செய்வது. எதைச் சொல்வது.

திராவிட மாயை – ஒரு பார்வை முதல் பகுதி புத்தகம் வெளிவந்தவுடன் என்னை வீட்டிற்கு அழைத்து பாராட்டியதைச் சொல்லவா. ஏதோ உபசார வார்த்தைகள் சொல்கிறான் என்று சந்தேகப்பட்டதும் பத்தி பத்தியாக ஒப்பித்துக் காட்டியதைச் சொல்லவா. எதைச் சொல்வது.

மோகன் எழுதிய கண்ணன் அந்தாதி நூலை க.ரவியின் முயற்சியால் புத்தகமாக வெளியிட்டோம். அப்போது அது விஷயமாக மோகன் வீட்டிற்கும் ஒரு பாடாவதி அச்சகத்திற்கும் இடையே நான் அலைந்தபோது என் செருப்பே தேய்ந்துவிட்டது என்று நான் சொல்ல அதையே மோகன் அந்தப் புத்தகததில் அச்சேற்றிவிட்டதை நினைத்துப் பார்க்கிறேன்.

இரண்டு முறைதான் நான் மோகனுடைய நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். சாக்லேட் கிருஷ்ணா நாடகம் நடந்த வாணிமகாலுக்குப் போனேன். என்னை மேடைக்கு அருகிலுள்ள வாசலுக்கு அழைத்த மோகன் அந்த கிருஷ்ணர் வேஷத்துடனேயே வெளியே வந்துவிட்டான். “நீ டிக்கெட் வாங்கக்கூடாதுன்னு தான் உன்னைக் கூப்பிட்டேன்” என்று சொல்லி என்னையும் என்னோடு வந்தவரையும் முன் வரிசையில் உட்கார வைத்தான். கூட வந்தவர் “உனக்கு கிரேசி மோகன் எல்லாம் தெரியுமா?” என்று கேட்டபிறகு தான் மோகனின் முக்கியத்துவமே எனக்குப் புரிந்தது.

ஒருமுறை நண்பர் வீட்டின் விசேஷத்தில் நானும் மோகனும் சந்தித்துக்கொண்டோம். அங்கே கூட்டம் அதிகம் . சாப்பிடும் இடத்தின் கொள்ளளவு குறைவு. “வா முதலில் போகலாம்” என்று சொல்லி மோகனை அவசரப்படுத்தினேன். இதை அவதானித்துக்கொண்டிருந்த ஒரு இலக்கிய அன்பர் “என்ன எல்லாம் ஒருமையில பேசிக்கறீங்க” என்றார்.

பதில் சொல்ல வந்த மோகனை தடுத்துவிட்டு , நான் “சார் , உங்களை மரியாதையா தானே கூப்பிடறோம். அது போதாதா?” என்றேன். சாப்பிடும்போது மோகன் “நானாவது ஏதாவது சமாளிச்சிருப்பேன். இப்படடிப் பேசிட்டியே.” என்றான். சில விஷயங்கள் நமக்கு லேட்டாகத் தான் புரிகிறது.

ஒருமுறை மோகன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம். “பாரம்பரியமுள்ள மடங்களுக்கு வருகிற கூட்டம் குறைவாக இருக்கிறதே. புது சாமியார்களிடம் கூட்டம் அதிகமாக வருகிறதே இது எப்படி” என்பது மோகனின் கேள்வி. இதற்கான பதிலைச் சொல்ல ஆரம்பித்து நான் நேரம் போவது தெரியாமல் விளக்கிக்கொண்டிருந்தேன்.

“பாரம்பரியமான மடங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு பெரும்பாலும் அது ஒத்துவராது. மூன்று நாட்கள் முகாம் என்று சொல்லி அதற்கு முப்பதாயிரம் ரூபாய் வசூல் செய்துகொண்டு முகாமில் புகையிலை, குடி, அசைவம் ஆகிய விஷயங்களுக்கு அனுமதியில்லை என்று அறிவித்துவிட்டு காப்பி, டீயை கண்படாமல் செய்துவிட்ட சூழலில் முதன்முறையாக ஒரு இளைஞன் இயற்கையான சுவாசத்தை, இயற்கையான விசர்ஜனத்தை அனுபவிக்கிறான்.

எல்லா மனிதனும் சாதாரணமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை விசேஷ கட்டணத்தை செலுத்தி விரும்பிக் கற்றுக்கொள்கிறான. அதை யோக சித்தி என்று வரித்துக்கொள்கிறான். அடுத்த கட்டத்தில் அவனே முகாமுக்கு ஆள் பிடித்து வருகிறான்” என்று நீட்டிக்கொண்டே போனேன்.

மோகன் கை உயர்த்தி “அது சித்தி இல்லடா. லத்தி என்றான்…”

“பெசன்ட் நகர் சிவன் கோவிலில் இருக்கும் அராளகேசி அமபாளை பார்க்க வேண்டும். என்னைக் கூட்டிப்போ” என்று சொல்லுவான் மோகன். இதை நான் செய்திருக்கலாம். பல்வேறு வேலைகளுக்கிடையே நான் மறந்துவிட்டேன். நான் அழைத்துப்போகவில்லை.

அவள் அழைத்துக்கொண்டாள்.

~ சுப்பு, பத்திரிகையாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe