23/09/2019 7:27 PM

கிரேசி மோகன் என்ற ‘லிட்டில்’ கிருஷ்ணா !
ஏப்ரல்,24 -2008 அன்று மதியம் மூன்று மணிக்கு எனது ‘அடடே’ பாக்கெட் கார்ட்டூன் களின் 6- புத்தக தொகுப்புகள் வெளியிடப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டிருந்தது. மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் 6- புத்தக தொகுப்புகளையும் வெளியிடுகிறார்.

ஒவ்வொரு புத்தகத்தையும் வெவ்வேறு துறையில் உள்ள பெரும் சாதனையாளர்கள் 6 பேர் பெறுவது உசிதமாக இருக்கும் என்று நானும் கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி அவர்களும் முடிவெடுத்து இருந்தோம். யாரெல்லாம் அந்த 6 பேர் என்று ஒரு குழு ஆலோசனை செய்து கொண்டிருந்த நேரம்.

முதல் தொகுப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த துறவி ஒருவர் தான் பெற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதற்கு இலங்கை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக பல்லாண்டுகள் இருந்த சுவாமி ஆத்மகனானந்தஜி மகராஜ் ஒத்துக் கொண்டது இறையருள். மீதி ஐந்து பேர் யார் யாரெல்லாம்? எழுத்தாளர் ஜெயகாந்தன் சார்… பத்திரிகையாளர் கல்கி ராஜேந்திரன் சார்… பேச்சாளர் சாலமன் பாப்பையா சார்… ஆச்சி மனோரமா… என்று முடிவெடுத்தோம்.

6-வது நபர் நபர் யார்? இவரை தேர்ந்தெடுப்பதில் தான் குழப்பம் இருந்தது. ஏனெனில் எங்கள் மனதில் இன்னும் நாலைந்து பேர் இருந்தனர். ஆனாலும் நானும் பத்ரியும் ஒரு விஷயத்தில் திடமாக இருந்தோம். 6-புத்தகங்களையும் பெறுபவர்கள் பெரும் சாதனையாளர்களாக இருந்தால் மட்டும் போதாது. மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தேர்வானவர் தான் நாடகத்துறை துறையில் பெரும் சாதனை புரிந்த கிரேசி மோகன் சார்! ‘புரிந்த’ என்பது இறந்தகாலத்தை சேர்ந்த சொல் ( Past tense) இப்படி சொல்வதற்கு இதயம் வலிக்கிறது…நேற்று அவர் காலமாகிவிட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்

நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் மனிதர்கள் தங்களது சாதனைகளை தங்களால் முடிந்த அளவுக்கு பிரசாரம் செய்து கொள்ளும் ரகம்தான் ! ஆனால் எனது அதிர்ஷ்டம் இந்த 6 பேரும் அந்த ரகம் அல்ல! கிரேசி மோகன் சாரின் நகைச்சுவை உணர்வுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். நகைச்சுவை நாடகங்களிலும் நடிப்பிலும் ‘டைமிங்’ மிக முக்கியம்.

நகைச்சுவை என்பது அதுவாக மிக இயல்பாக, தானாக வெளிப்பட வேண்டும். அது கிரேசி மோகன் சாருக்கு சர்வ சாதாரணமாக மிக இயற்கையாகவே அமைந்திருந்தது! அற்புதமான வசனகர்த்தா! நாடகத் துறையிலும் திரைத் துறையிலும் அவர் பதித்த முத்திரைகள் என்றும் வாழும்!

அவரது நாடகங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. திரைக்கதைக்கு வசனம் எழுதும் அவரிடமிருந்த அபரிதமான திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டவர் நடிகர் கமலஹாசன் தான்.அவைகளுள் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் K சம்பந்தம், வசூல்ராஜா, MBBS ஆகிய திரைப்படங்களை அதற்கு முன் எத்தனை தடவை நான் பார்த்திருந்தாலும்

மீண்டும் ஒருமுறை டி.வி.யில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் பார்க்கத் தவறுவதில்லை.

கமலஹாசனின் நடிப்பு ஆற்றலுக்கு முழு தீனி போட்டவை கிரேசி மோகனின் வசன வரிகள். ஆனால் இத்தகைய படங்களில் கமலஹாசனுக்கு கிடைத்த புகழ் கிரேசி மோகனுக்கு கிடைத்திருக்குமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்திய சினிமாவின் துரதிர்ஷ்டம் இதுதான்.

மேற்கத்திய நாடுகளில் இத்தகைய படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, பாராட்டு, புகழ்… அத்தனையும் அதன் வசனகர்த்தா விற்கும் கிடைத் திருக்கும்! அதனால்தான் சொல்கிறேன் அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய புகழில் 25 சதவிகிதம் கிடைத்திருக்குமா என்பது எனது சந்தேகம்!

ஒரே ஒரு உதாரணம் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் “டேய், குள்ளா ரெண்டு அடி உயரத்திலிருந்து கொண்டு யாரை மிரட்டுகிறாய்?” என்று டெல்லி கணேஷ் கமலஹாசனை பார்த்து கேட்பார்! பதிலுக்கு குள்ள கமலஹாசனும் “திருக்குறளும்தான் 2 அடி. ரொம்ப சின்னது! எவ்வளவு பவர்ஃபுல்?” என்பார்.

அந்த இடத்தில் கமலஹாசன் பிரமாதமாக நடித்தார். ஆனால் பேசியது கிரேசி மோகனின் வசனம்தான்! நம்மில் எத்தனை பேர் இதை உணர்ந்து இருக்கிறோம்? அதற்கான அங்கீகாரம் கொடுத்து இருக்கிறோம்? இன்றும் ஹீரோக்களை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்!

ஹீரோக்களை ஹீரோவாக்கியவர்களை நாம் எண்ணிப் பார்ப்பதே இல்லை. அடுத்த தலைமுறையினராவது இதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

அன்று நடந்த ‘அடடே’ புத்தகங்கள் 6-தொகுப்புகள் வெளியீட்டு விழாவில் என்னையும் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்திரியையும் தவிர்த்து மேடையில் இருந்தவர்கள் கலாம் சார் உட்பட 9 பேர். அந்த 9 பேரையும் வரவேற்கும் விதமாக 9 பேருக்கும் மலர் கொத்துக்களை ஒன்பது குழந்தைகளை வைத்து கொடுப்பதாக முடிவெடுத்திருந்தேன்!

அதில் எனது மகனும் பத்ரியின் மகளும் இடம்பெற்றிருந்தனர். “பத்ரி, கலாம் சாருக்கு உங்கள் மகள் பூங்கொத்து கொடுக்கட்டும்” என்றேன்.

பதிலுக்கு அவர், “இல்லை மதி, கலாம் சாருக்கு உங்கள் பையன் கொடுப்பது தானே சரியாக இருக்கும்” என்றார்.

இது அவருடைய பெருந்தன்மை. நான் கூறினேன், ” எனது குடும்பம் சார்பாக ஒரு நினைவுப் பரிசு கலாம் சாருக்கு கொடுப்பதாக இருக்கிறேன். ஆதலால் எனது பையன் அதில் இருப்பான்.

நீங்கள்தானே Publisher ,உங்கள் மகள் கொடுக்கட்டும்.” என்றேன். அவ்வாறே விழா நாள் அன்றும் நடந்தது. மற்றபடி ஒன்பது குழந்தைகளில் 8 பேர் பெண் குழந்தைகள். ஒரே ஒருவன்தான் பையன்!

அந்தப் பையனும் எனது மகன்! அதேபோல் மேடையில் அமர்ந்திருந்த ஒன்பது பேர்களில் ஒரே ஒருவர்தான் பெண்மணி.

அவர் ஆச்சி மனோரமா. எனவே ஆச்சிக்கு எனது பையன் பூங்கொத்து கொடுப்பதாக முடிவு செய்தோம்! அத்தனையும் குழந்தைகள் ஆதலால் காலையில் ஒரு மணி நேரம் ‘ரிகர்சல்’ வேறு நடந்தது!

ஆனாலும் நிகழ்ச்சி நடக்கும் பொழுது எதிர்பாராத விதமாக நடந்த குழப்பத்தில் இந்த வரிசை மாறி விட்டது. இதில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக கிரேசி மோகன் சாருக்கு பூங்கொத்து கொடுத்தது எனது பையன்! காண்க புகைப்படம்!

விழா முடிந்ததும் எனது மகனை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து, “சார் உங்களுக்கு பூங்கொத்து கொடுத்தவன் இவன் தான்” என்று பெருமைப் பட்டேன்!

ரொம்ப தேங்க்ஸ் சார். ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு சொல்ற மாதிரி ஒரே மேடையில் எனக்கு என்ன எல்லாம் கொடுத்துட்டீங்க? கலாம் சாரை சந்திக்கும் வாய்ப்பு… ஒரு புத்தகம்… மேலும் உங்கள் பையனை வைத்து எனக்கு ஒரு பூங்கொத்து… அதுபோக ஒரு நினைவுப் பரிசு என்று கூறினார்! எவ்வளவு பெரிய நிகழ்ச்சியானாலும் ஒரு சாதாரண டி-ஷர்ட்டில் தான் அவர் வருவதை பார்த்திருக்கிறேன். எனது நிகழ்ச்சிக்கும் அப்படித்தான் வந்தார் !

ஆனால் அன்றைய அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் எனக்கும் கிரேசி மோகன் சாருக்கும் ஒரு விஷயம் தெரியவந்தது, நாங்கள் இருவருமே சிறுவயதில் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் துறவியாக சேர்வதற்கு முயற்சி செய்தவர்கள்!

இருவருமே குடும்பத்தினரின் எதிர்ப்பால் மடத்தில் சேர முடியாமல் போனவர்கள்! எனக்காவது பரவாயில்லை, அதற்குப் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து தான் திருமணம். அவருக்கோ உடனேயே கல்யாணம் செய்து வைத்து செய்து விட்டார்கள் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்!

இதில் எனக்கு ஒரு சந்தோஷம் 6 புத்தக தொகுப்புகளில் முதல் புத்தகத்தை பெற்றவர் ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த துறவி, கடைசி புத்தகத்தை பெற்றவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர். இதில் எனக்கு ஓர் ஆத்ம திருப்தி கிடைத்தது!

இதன் பின்னர் அவருடன் தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம் எங்கள் இருவருக்கும் இடையேயான பேச்சு பெரும்பாலும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தாகத்தான் இருந்தது. குறிப்பாக குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்! ஆனால் ஒவ்வொரு தடவை பேசும் பொழுதும் “மதி சார்… நன்னா இருக்கீங்களா?.

உங்க கார்ட்டூனை தினம் தினம் ரசிச்சுண்டு இருக்கேன். பிரமாதம்! எனக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணிட்டீங்க! கலாம் சாரோட உங்க புத்தகத்தை கையில் வைச்சுண்டு நிற்கர போட்டோவை தான் நான் இன்னிக்கும் DP – பிக்ச்சரா வெச்சிருக்கேன் என்பார்! எனக்குத் தெரிஞ்சவா சிலர் கேப்பா எப்ப சார் அப்துல் கலாமை பார்த்தீங்கன்னு? ‘THIS PICTURE IS SPONSORED BY MATHI SIR’-ன்னு சொல்லிடுவேன்.

அவருடைய தகுதியும் அவருடைய திறமையும் அவருடைய ஆளுமையும் தான் எங்களை அவரை தேர்ந்தெடுக்கச் செய்தது. மேடைக்கு அழைத்தது. இவை அத்தனைக்கும் மேல் நான் அவரது ரசிகன். ஆனால் இந்தப் பெருமைகளை அவர் நினைவில் கொள்ளாமல் எனக்கு அந்த பெருமையை சூட்டுவது அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை தான் நமக்கு காட்டுகிறது! எத்தனை பேருக்கு இந்த மனோபாவம் ஒரு வரும்?

ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பற்றி பேசினால் அவருக்கு உற்சாகம் பீறிட்டு கொண்டு வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்! சென்ற மாதம் அவரை அலைபேசியில் அழைத்தபோது, “சார் நம்ம ரெண்டு பேருக்குள்ளும் என்ன ஒரு Connection பாருங்க? இன்று வியாழக்கிழமை… குருவுக்கு உகந்த நாள்… நாம் இருவரும் குருதேவரின் பக்தர்கள்… எப்படி இன்னிக்கு நம்ம ரெண்டு பேரையும் குருதேவர் பேச வச்சுட்டார் பார்த்தீர்களா ?”என்றார்.

நாங்கள் இருவரும் அடிக்கடி பேசிக் கொள் பவர்கள் அல்ல! ஆனாலும் நீண்ட இடைவெளியில் பேசினாலும் விட்ட இடத்திலிருந்து அப்படியே தொடர்ந்தது போல் இருக்கும் ! எனது தொடர்பில் இருக்கும் பெரும்பாலான ஆளுமைகள் இப்படித்தான் வெகு காலம் கழித்து தொடர்பு கொண்டாலும் நேற்றுதான் பேசியது போல அந்த உரையாடல் தொடரும்.

இறையருளால் மட்டுமே இத்தகைய புரிதல்கள் உடைய பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கக்கூடும்! இந்த கலியுகத்திலும் இறைவன் எனது கண்களுக்கு காட்டிய மனிதர்களில் நல்லவர்கள் தான் என்னைப் பொறுத்த வரையில் அதிகம்!

பலருக்கு அவரை ரமண மகரிஷியின் பக்தர் ஆகத்தான் தெரியும். ஆனால் அது மட்டுமல்ல உண்மை. ஸ்ரீராமகிருஷ்ணர் மீது கொண்டிருந்த பக்தியை போல் ஸ்ரீ அரவிந்த அன்னையையும் வழிபட்டு வந்தார்.

ஏனென்றால் தேனாம்பேட்டையில் இருந்த ஸ்ரீ அரவிந்த அன்னை தியான மையம் ஒன்றுக்கு தியானம் செய்ய அடிக்கடி நான் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும் போது பலமுறை அவரை அங்கு சந்தித்திருக்கிறேன்.

அவரும் தியானத்தில் இருப்பார். பூக்களிலிருந்து தேனை எடுத்துக் கொள்ள வரும் தேனீயை போல் எங்கெல்லாம் இறை சக்தியை அவர் கண்டாரோ அங்கெல்லாம் அவர் சென்றார் என்பது நானறிந்த கிரேசி மோகன் சார் .

சென்ற மாதம் அவருடன் பேசி கொண்டிருந்த போது தனக்கு உடல் நலம் சரியில்லை. முதுகுவலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன்.

அதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியவர் ‘சார், உங்க உடல்நலனையும் பார்த்துக்கோங்க. வாழ்நாள் முழுவதும் கார்ட்டூன் போட்டுண்டே இருக்கிறீங்க முதுகு வலி பிரச்சனை சுலபமாக உங்களைப் போன்றவர்களுக்கு வந்துடும். கவனமாக இருங்க சார் என்றார்.

தனக்கு வந்த கஷ்டம் பிறருக்கும் வந்துவிடக் கூடாது என்ற கவலை இன்று எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? இதை எழுதும் பொழுது கண் கலங்குகிறது.

எனது கார்ட்டூன் சம்பந்தமாக ஒரு புத்தகம் கிரேசி மோகன் சாருக்கும் அவரது பால்ய நண்பர் ஓவியர் மணியம் செல்வன் அவர்களுக்கும் அனுப்பியிருந்தேன். இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள்! ஒருவரை ஒருவர் அவன் இவன் என்று தான் அழைத்துக் கொள்வார்கள்! அனுப்பிய நாளே அதை அவர்களிடம் கூறி விட்டேன்.

மறுநாள் காலை11 மணிக்கு கிரேசி மோகன் சாரிடமிருந்து அழைப்பு, மதி சார், இன்னும் புத்தகம் வரலையே? “சார், கூரியர் மதியம் 2 – 3 மணிக்குக்கூட வரும் சார்” என்றேன்.

மீண்டும் ஐந்து மணிக்கு அவரிடமிருந்து அழைப்பு, சார், மணி 5 ஆயிடுச்சு… இன்னும் எனக்கு புத்தகம் வரலையே… அந்த POD நம்பர் ஏதாவது வச்சிருக்கீங்களா? என்றார். நான் ஓவியர் மணியம் செல்வன் அவர்களை அழைத்து அவருக்கு புத்தகம் வந்து விட்டதா என்று விசாரித்து மீண்டும் கிரேசி மோகன் அவர்களை அழைத்து சார் மணியம் செல்வன் சாருக்கு புத்தகம் கிடைத்துவிட்டது என்றேன்.

அதெப்படி என் வீட்டிற்கு பக்கத்து வீடு தானே அவன். கூரியர் பாய் எனக்குத் தராமல் போயிட்டானே என்றார். “சார் கவலைப்படாதீங்க, நாளையே இன்னொரு புத்தகம் அனுப்பி வைக்கிறேன்” என்றேன்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு அவரிடமிருந்து மீண்டும் அழைப்பு ‘மதி சார், புத்தகம் நேத்தே வந்துடுச்சு. என் Wife வாங்கி கீழ் ரூமில் வெச்சிட்டு என்கிட்ட சொல்லாம வெளியே போயிட்டா. நல்ல வேலை கிடைச்சுடுச்சு சார்’ என்றார்.

புத்தகம் என்னை பற்றியது. நானா அனுப்பச் சொன்னேன் ? புத்தகம் கேட்டேன்? அவர்தானே அனுப்பினார். கிடைச்சா கிடைக்கட்டும்… கிடைச்சா படிக்கிறேன்… இல்லாட்டி எனக்கு என்ன நஷ்டம் என்றுதான் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் பிரபலங்கள் நினைக்கக்கூடும்.

ஆனால் கிரேசி சார் வேறு! எவ்வளவு சாதனைகள் புரிந்த பிறகும் ஒரு குழந்தையின் மன நிலையிலேயே இருந்தார். தூய இதயம்… உயர்ந்த மனோநிலையில் இருப்பவர்கள் (High state of mind)…

மேதைகள் பலர் எவ்வளவு வயதானாலும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் எனது அனுபவத்தில் சென்ற மாதம் வரை அவர் ஒரு 66 வயது குழந்தை.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது பழமொழி! கிரேசி மோகனாக வாழ்ந்தவர்… சாக்லேட் கிருஷ்ணாவாக நடித்தவர்… எனது நினைவலைகளில் ‘லிட்டில்’ கிருஷ்ணாவாகவே என்றும் இருப்பார்.

  • மதி

(@mathicartoon)Recent Articles

4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு! முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.

3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.!

லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்!

இந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

பட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்! தூத்துக்குடியில் பயங்கரம்!

அப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.

மோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’! இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்!

இன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.

Related Stories