spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஎஜாஸ் அஹமத்- கையெழுத்தால் தலையெழுத்தை மாற்றும் எழுத்துச் சிற்பி!

எஜாஸ் அஹமத்- கையெழுத்தால் தலையெழுத்தை மாற்றும் எழுத்துச் சிற்பி!

- Advertisement -

ajaj ahmed hyderabad 3

கல்வி அறிவும் சுறுசுறுப்பும் எவ்வளவு இருந்தாலும் அழகான கையெழுத்து அமையாவிடில் அம்மாணவன் தேர்வில் வெற்றி பெறுவது கடினம். இது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவர் வாழ்விலும் கண்ட அனுபவமே.

அழகான கையெழுத்து இருந்தால் ஆசிரியரைக் கவர்வது எளிது. கையெழுத்து அழகாக அமைந்தால் தன்னம்பிக்கை கூடுகிறது. கையெழுத்து முத்துப் போல் அழகாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்குமே உண்டு.

பிரம்மா எழுதிய தலை எழுத்தை மாற்ற முடியாது என்பார்கள். ஆனால் கோணல் மாணலான மாணவர்களின் கையெழுத்தை மாற்றி அமைத்து அவர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களின் தலையெழுத்தையே மாற்றி வருகிறார் தெலங்காணா மாநிலம் சித்திப்பேட்டையைச் சேர்ந்த ஆசிரியர் எஜாஸ் அஹமத்.

தானறிந்த அறிவை தனக்கு மட்டும் என்று மூடி வைத்துக் கொள்ளாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் பண்பு எளிதில் அமைந்து விடாது. ‘ஸஜாதோ யேன ஜாதேன ஜீவந்தி பஹவோ ஜனா’ – ‘யாருடைய பிறப்பால் பிறர் பலரும் நல்வாழ்வு வாழ இயலுமோ அவரே உண்மையான மனிதர்’ என்பதற்கேற்ப வாழ்கிறார் எஜாஸ் அஹமத்!

மாணவர்களே உயிராக, கல்வி போதிப்பதே செல்வமாக, கல்விக் கூடமே ஆலயமாக  ஓய்வின்றி உழைக்கிறார்… அடக்கம் பணிவு என்ற சிறந்த குணங்களால் தானும் உயர்ந்து தன் மாணவர்களையும் சிறந்த குடிமக்களாகத் திகழ, அவர்களைச் செதுக்குவதில் முனைந்து ஈடுபட்டு வரும் குருவாக விளங்குகிறார் எஜாஸ் அஹமத்!

ajaj ahmed hyderabad 21965ல் ஹைதராபாதில் கடவுளின் கருணையால் பிறந்த எஜாஸ் அஹமத்தின் தந்தை அயூப் அலீ; தாயார் பேகம்! ஆனால் மூன்று மாதக் குழந்தையாக இருந்த போதே குழந்தைகள் இல்லாமல் ஏங்கிய வேறொரு தம்பதிக்கு வளர்ப்பு மகனாக அளிக்கப் பட்டார்.

இவர் வந்த வேளை அவர்களுக்கும் பிள்ளைப்பேறு வாய்த்தது. பின் தன் தாத்தா பாட்டி வீட்டில் வளரலானார். அவ்விதம் ஒருவர் வயிற்றில் பிறந்து ஒருவர் மடியில் தவழ்ந்து இன்னொருவர் கருணையால் வளர்ந்து ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவித்தார் என்றாலும், படிப்பை சிறிதும் அலட்சியம் செய்யவில்லை.

பின்னாளில், தன் சொந்த வீட்டுக்கே அழைத்து வரப்பட்டு தந்தையோடு சேர்ந்து காலையில் செய்தித்தாள் போடுவது மாலையில் ஆட்டோ ஓட்டுவது என்று உழைத்தபடியே ராமச்சந்திரா கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்தார். இடையறாத உழைப்பின் இடையேயும் நாராயணகுடாவில் நியூ சயின்ஸ் கல்லூரியில் சேர்ந்து படித்து பி.எஸ்ஸி இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

மேற்கொண்டு படிக்க வசதியில்லை. தந்தை ஆட்டோ ஓட்டும்படி வற்புறுத்தினார். என்ன செய்வது என்று தெரியாமல், ஹைதராபாதிலிருந்து நூறு கி மீ. தொலைவில் உள்ள சித்திப்பேட்டையில் தன் சிற்றப்பா அப்துல் காதர் வீட்டிற்கு வந்தார்.

சிறிது நாட்கள் சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். வேலை வாய்ப்பு தேடி அலைந்து 1986ல் ஸ்ரீவித்யாரண்ய குருகுலத்தில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியராக வேலையில் சேர்ந்தார். மத, இன வேறுபாடு இன்றி சமத்துவ பாவனையில் கல்வி கற்பித்து குழந்தைகளின் கலையார்வத்தை வளர்த்தார். கடந்த கால வாழ்க்கை அவருக்கு பலவற்றைக் கற்றுத் தந்திருந்தது. ஆசிரியர் வாழ்வில், தன் தனி முத்திரையைப் பதித்தார்.

பின்னர், கடியால மதுசூதன ராவ் நடத்திய ஆதித்யன் என்ற உயர்நிலைப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்து நல்லாசிரியர் விருதும் பெற்றார். அப்பள்ளியின் தலைமையாசிரியர் மதுசூதன ராவ் அழகாக எழுதும்படி தன் மாணவர்களை ஊக்குவித்து வருவதை எஜாஸ் அஹமத் கவனித்து வந்தார். அவரையே தன் குருவாகக் கொண்டு அவர் மூலம் தன் கையெழுத்தை அழகாக மாற்றிக் கொண்டதுடன், எளிய முறையில் அழகாக எழுதுவது எப்படி என்று சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்.

அந்த அனுபவத்தால் ‘அழகான கையெழுத்து அனைவருக்கும் சாத்தியமே!’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அறுபது பக்கங்கள் கொண்ட இந்த நூலில், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மூன்று மொழிகளுக்குமான நான்கு அத்தியாயங்களைப் பிரித்துள்ளார். இதில் ஒவ்வொரு எழுத்தையும் எவ்வாறு எழுதுவது என்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் குறிப்பு உள்ளது. அடுத்து சில நுணுக்கங்களையும் அதில் கற்றுத் தந்துள்ளார்.

பின்னர் 1994ல் ஸ்ரீனிவாச சர்மா, கத்துல பாபுரெட்டி கனகய்யா என்ற நண்பர்களுடன் சேர்ந்து ‘சுபோதயா வித்யாலயம்’ என்ற கல்விக்கூடத்தை நிறுவினார். அது தற்போதைய முதலமைச்சர்  கே சந்திரசேகர ராவ் கரங்களால் தொடங்கப்பட்டது!

கரெஸ்பாண்டென்ட், தலைமை ஆசிரியர், ஹிந்தி ஆசிரியர் என்று அனைத்துப் பொறுப்புகளையும் தான் ஒருவராகவே சுமந்தார்.  இவர் பெயர் சிறிது காலத்துக்குள் ‘சுபோதயா அஹமத்’ என்று அழைக்கப்படும் அளவு வெளி உலகம் அறிந்து கொண்டது.

பள்ளி மாணவர்களின் கையெழுத்தில் கவனம் செலுத்தினார்! ஒரு மாணவனின் கையெழுத்தைப் பார்த்தே அவன் எஜாஸ் அஹமதின் மாணவன் என்று கண்டு பிடித்துவிட முடியும். மெதக் ஜில்லாவில் மாணவர்களின் அழகான கையெழுத்து என்ற ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்!

தனது புத்தகத்தின் மூலம்,  அனைவரின் கையெழுத்தும் மேன்மை அடைந்தது கண்டு உற்சாகம் பெற்றவர், சித்திப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற அரசுப் பள்ளிகளில் அழகான கையெழுத்து வகுப்புகளை இலவசமாக அளிக்கத் தொடங்கினார்.

இந்நூலை 80 ஆயிரம் பிரதிகள் அச்சடித்து மாணவர்களுக்கு விநியோகித்தார். இந்நூல் வயது வேறுபாடின்றி அனைவருக்கும் பயனளிப்பதாகத் திகழ்கிறது. அழகான கையெழுத்துக்கு முகவரி ஆகிவிட்டார் எஜாஸ் அஹ்மத்.

ஹைதராபாத் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் 700 மானவர்களுக்கு ‘அழகான கையெழுத்தில் எழுவது எப்படி?’ என்ற வகுப்புகளை நடத்தியுள்ளார்! தெலுங்கு டிடி சப்தகிரி சேனலில் இவர் நிகழ்த்திய ‘அழகாக எழுதுவது எப்படி?’ என்ற தொடர் பத்து பகுதிகள் ஒளிபரப்பானது!

கோடுகளுக்கிடையில் உருண்டையாக இவர் எழுதும் உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. ஆங்கில அட்சரங்களைச் சேர்த்து எழுதுவது எப்படி என்ற இவருடைய வீடியோவும் யு டியூப்களும் உலகம் முழுவதும் பரவி இவருக்குப் பெருமை சேர்த்துள்ளன.

“அழகான வெள்ளைப் பசு
வயிறார பால் கொடுக்கும்
கொல்லாதே அதனை
அதன் பாதத்தைப் பணி!”

போன்ற உயர்ந்த கருத்துக்களை அழகான சிறு சிறு கவிதைகளாக குழந்தைகளுக்காக தெலுங்கில் இயற்றிப் பாடி, பாட வைத்து, நடித்து, நடிக்க வைத்து தானும் ஒளி பெற்று, நம் பாரத நாட்டு கலாசாரத்தையும் ஒளிர்விக்கிறார் எஜாஸ் அஹமத்.

ஆடல் பாடலோடு கல்வியை சின்னஞ்சிறாருக்கு மனப் பூர்வமாக அளிக்கிறார். மாணவர்களின் கலைத் திறனையும் கற்பனைத் திறனையும் வெளிக் கொணர்ந்து குழந்தைக் கலைஞர்களை செதுக்குகிறார்.

“பகத் சிங், ஆஜாத், சுக்தேவ்
இவர்கள் நம் வீரர்கள்
தேசம் போற்றும் சூரர்கள்”
போன்ற தேச பக்தி கீதங்களை குழந்தைகள் மனதில் விதைத்து அவர்களிடம் உற்சாகத்தை ஊட்டுகிறார்.

இவர், மதத்தால் இஸ்லாமியர்; உணர்வால் இந்தியர்! எனவேதான், தெலுங்குப் பண்டிகைகளிலும் இந்திய கலாசாரத்திலும் கொண்ட அளவற்ற அன்பாலும் மதிப்பாலும் அவற்றைப் போற்றி பல சின்னச் சின்ன நாடங்களும் கவிதைகளும் இயற்றி பள்ளி மாணவர்களைக் கொண்டு கலை நிகழ்சிகளையும் நடத்தி பொதுமக்களின் பேராதரவைப் பெற்றும் வருகிறார்.

அவற்றோடு தேசபக்தி, நாட்டுப் பாடல்கள், நீதிப் பாடல்கள், கவிதை நாடகங்கள் எழுதி புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். பள்ளியின் விழாக்களிலும், தேசீய விழாக்களிலும் ஹிந்து, முஸ்லீம் பண்டிகைகளிலும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாணவர்களைக் கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழாக்களுக்கு மெருகு சேர்க்கிறார்.

ajaj ahmed hyderabad 1தெலங்காணா பாடல்களுகான கோலாட்டம், யோகா வகுப்புகளுக்கான நடனப் பயிற்சி போன்றவற்றைத் தயாரித்து மாணவர்களுக்கு சம கால பிரச்னைகள் குறித்ஹ்ட விழிப்பு உணர்வையும் ஏற்படுத்துகிறார்.

பல இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று நூற்றுக்கணக்கில் கலை நிகழ்சிகளை தயாரித்து நடத்தியுள்ளார். மெல்லிசை, தேசபக்தி கீதங்கள், அன்னமாசார்ய கீர்த்தனைகள், மற்றும் தெலுங்கு, ஹிந்தி பாடல்களால் பார்வையாளர்களைக் கட்டி போட்டு விடுகிறார்.

கோடை விடுமுறை முகாம்களையும் நடத்தி குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் கலை ஆர்வத்தைத் தூண்டுகிறார். மாநிலத்தில் பரவலாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி முகாம்களை அமைத்து, பயிற்சிகளும் அளிக்கிறார்.

கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கையின் வழிநடக்கும் எஜாஸ் அஹமத், லிங்காஷ்டகம், சரஸ்வதி ஸ்தோத்ரம், ஹனுமான் சாலீஸா, பைபிள் பாடல்களும் பாடுகிறார். இவர் எழுதி இசையமைத்த ஐம்பதுக்கு மேற்பட்ட தேசபக்தி கீதங்கள் சுபோதயா கீதங்களாக வெளிவந்துள்ளன.

ஹிந்தி மொழித் துறையின் கல்விப் பாடங்களுக்கு தனக்கேயுரிய பாணியில் ஆசிரியர்களுக்கு உற்சாகத்தோடு பாடம் நடத்த உதவுகிறார். அதோடு சித்திப்பேட்டை சிட்டி சேனல் டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகிறார். சுத்தமான தெலுங்கு உச்சரிப்போடும் அழகான புன்சிரிப்போடும் செய்தி வாசிப்பது இவரது தனிச் சிறப்பு.

இவரது காலைப் பொழுது குர்ஆன் ஓதுவதில் துவங்குகிறது. இவரது மனைவி கமர்ஜஹாவும் கணவரோடு சேர்ந்து பள்ளியின் முன்னேற்றத்திகு உதவுகிறார். இவர்களுக்கு வஸியா என்ற மகளும் அப்ரார் அஹமத் என்ற மகனும் உள்ளனர்.

எஜாஸ் அஹமத் தனக்கு வழிகாட்டிகளாகத் திகழ்ந்த தன் ஆசிரியர்களான தடகமட்ல ஈஸ்வரய்யா, கடியால மதுசூதன ராவ் ஆகியவர்களை என்றும் மறக்காமல் பள்ளிக்கு அழைத்து குரு பூஜை செய்து மகிழ்கிறார்.

சமுதாயம், கலை, இலக்கியம் என்ற அனைத்துத் தடங்களிலும் தனி முத்திரையைப் பதித்து வரும் இவர் அரசு விழாக்களிலும் தனியார் நிகழ்ச்சிகளிலும் இதுவரை நூற்றுக்கு மேல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வர்ணனை நிகழ்த்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர்களான வை. எஸ். ராஜசேகர ரெட்டி, ரோசையா, கிரண்குமார் ரெட்டி மற்றும் தற்போதைய முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போன்றோர் பங்கு பெற்ற நிகழ்ச்சிகளில் வர்ணனையாளராக விளங்கிய பெருமை இவருக்குண்டு.

பாடகர், எழுத்தாளர், தொகுப்பாளர், நடன ஆசிரியர், அழகிய கையெழுத்துக் கற்றுத் தருபவர் என்று பல்முனைத் திறமை கொண்டிருக்கிறார் எஜாஸ் அஹமத். ஆயிரக் கணக்கில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கலைப் பயணத்தில் சேர்த்து நடத்திச் செல்லும் இவர் ‘சாதாரணமானவர்களில் அசாதாரணமானவர்’ என்ற விருதினையும் அட்சர சிற்பி என்ற விருதினையும் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசத்திடம் இருந்து பெற்றுள்ளார்.

உத்தம அறிவிப்பாளர் விருது, தெலுங்கு பல்கலைக் கழகத்தின் உத்தம சேவா புரஸ்கார், மகாராஷ்டிரத்தின் சைல்ட் ஆர்ட் கலா பாரதி புரஸ்காரம், அமெரிக்காவின் சிலிகான் ஆந்திர புரஸ்காரம் போன்ற எத்தனையோ விருதுகளும் பாராட்டுகளும் இவரைத் தேடி வந்து பெருமை சேர்த்துள்ளன.

தமிழகத்தில் நாம் ஏதோ ஜிலேபி போலும் ஜாங்கிரி போலும் இருப்பதாக, சினிமாவில் நாலைந்து காட்சிகளைக் கண்டுவிட்டு கேலி செய்து கொண்டிருக்கும் ஒரு மொழியில் எழுத்து வடிவத்தை எழுதிப் படிப்பது எவ்வளவு அசாத்தியமானது, கடினமானது, ஆனால் எவ்வளவு முக்கியமானது என்பதை எஜாஸ் அஹமத் போன்றவர்களால் தமிழர்கள் உணரவேண்டியது கட்டாயம்!

தமிழே படிக்க எழுதத் தெரியாத தலைமுறையை நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்நேரத்தில், எஜாஸ் அஹமத் போன்றவர்களால் ஊக்கம் பெறும் யாரேனும் நல்லுள்ளம் கொண்ட தமிழர்கள் இது போல், தமிழில் கையெழுத்துப் பயிற்சி, மாணவர்களுக்கு தமிழ்ப் பயிற்சி, படிக்க எழுத பயிற்சி அளித்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால் வருங்காலத் தமிழகம் சிறக்கும்!

அதற்கு, நம் நாட்டின் பன்முகத் தன்மைக்கான அடையாளங்களாக எஜாஸ் அஹமத் போன்றவர்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

(Ajaz Ahmed, Correspondent in Subhodaya Vidyalayam, H.No-20-105/F, Naseer nagar, Siddipet Dist, Medak, Telangana – 502103 Mobile- 9440494466)

– கட்டுரை: ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe