தொடர்ந்து 7 மணி நேர திருக்குறள் சொற்பொழிவு சாதனை

தொடர்ந்து 7 மணி நேரம் திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்தி கலைமகள் இதழாசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆக்கபூர்வமான கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார் என நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி அரங்கில் தொடர்ந்து 7 மணி நேரம் திருக்குறள் சொற்பொழிவாற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.4) நடைபெற்றது. இந்தச் சாதனையை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் நிகழ்த்தினார்.

இதன் நிறைவு விழாவில், நீதிபதி ராமநாதன், தினமணி நாளிதழ் ஆசிரியர் கி.வைத்தியநாதன், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விஜயராகவன், சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் சேயோன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, இந்த நிகழ்ச்சியை தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர்.

விழாவில் நீதிபதி ராமநாதன் பேசியதாவது: கின்னஸ், லிம்கா சாதனை என அனைத்தும் வாழ்க்கைக்குப் பயன்படாத சாதனையாக சிலர் நிகழ்த்தியுள்ளனர். ஆனால், ஆக்கபூர்வமான முயற்சியாக திருக்குறள் குறித்து கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பேசியுள்ளார். இதன் மூலம் கின்னஸ் சாதனை நிகழ்த்தியற்கு பாராட்டியே ஆகவேண்டும். பொருள் சுவை மாறுபடாமல் ரசிக்கும்படி, அழகிய தமிழில் பல்வேறு திருக்குறள் கருத்துகளை அவர் எடுத்துரைத்தார் என்றார் நீதிபதி ராமநாதன்.

விழாவில் கோ.விஜயராகவன் பேசியதாவது: மனித குலம் தொடர்ந்து வள்ளுவத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்கிணங்க கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த கருத்துகளை கேட்பதற்கு பேறு பெற்றிருக்க வேண்டும். பலரும் பல தலைப்புகளில் உரை நிகழ்த்துகின்றனர். ஆனால், தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், இவர் பேசிய உரையில் சொன்னதை சொல்லாமல், பல உண்மைக் கருத்துகளை சான்றோர் முன்னிலையில் எடுத்துரைத்துள்ளார். இது பாராட்டுக்குரியது.

இந்த விழாவில், அமால்கமேஷன் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, சிவாலயா மோகன், பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவச் சங்க தலைவர் முருகானந்தம், கலைமகள் மாத இதழ் பதிப்பாளர் ஆர்.நாராயணசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நிறைவு விழாவில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது: திருக்குறளை வைத்துக்கொண்டு 7 மணி நேரம் அல்ல, 70 மணி நேரம் வரைகூட பேசலாம். இன்றுவரை அதிகமாக உரை எழுதப்படும் நூல் திருக்குறள் மட்டுமே. ஒவ்வொருவரின் பார்வையில், வேறுபட்ட கோணத்தில் உரை எழுத இன்றும் திருக்குறள் உள்ளது. சிந்திக்கப்படுகிறது.

தினமணி தலையங்கத்திற்குக் கீழே நாளும் ஒரு திருக்குறள் எழுதப்படுகிறது. அதற்கு, முதல் காரணம். எதைப் பற்றி எழுதினாலும் அதைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவன் பேராசான் சிந்தித்திருக்கிறார் என்பது. இரண்டாவதாக, நாள்தோறும் குறளின் விளக்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும், அதைப் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் படித்துப் பொருளறிந்து மனனம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

இதன் மூலம் தமிழ் காக்கப்படும். குழந்தைகளின் வருங்காலம் காக்கப்படும். எனவே, வள்ளுவத்தினால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்.
மக்கள் நல்வண்ணம் வாழ்வதற்கும், உலகம் உய்வித்து வாழ்வதற்கும் திருக்குறள் உதவும். கீழம்பூர் சங்கரசுப்பிரமணியன் நிகழ்த்திய இந்த கின்னஸ் சாதனை மூலம் வள்ளுவத்தையும், திருக்குறளும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டுள்ளது என்றார் கி.வைத்தியநாதன்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.