”ஆயிரம் காலத்துப்பயிர்”, இருமனம் ஒருமித்து காணும் திருமணம் ! திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது, திருமணங்களில் இசை பிடிமானம் உண்டு, கோயில் மாலை உண்டு, ஜாதகப்பரிவர்த்தனை உண்டு, மந்திரங்கள் ஓத ஐயர் உண்டு, யாகமும் உண்டு, வேதமும் உண்டு, பெரியோர்களின் நல்வாழ்த்தும் உண்டு. இவற்றிற்கெல்லாம் முன்னால் ஏழெட்டுப் பொருத்தம் என்ற சான்றிதழும் உண்டு. சில நூறு பேர் கூடி, தடபுடலான விருந்துடன் நடக்கும் திருமணங்கள் அண்மைக்காலமாக சில சதவிகித திருமணங்கள் மணமுறிவாகி, இயல்பாக நடக்கும் திருமண வரன் தேடல் போல, மணமுறவு வரம் தேடலும் நம் இதழ்களில் பெருகி வருகிறதே என்ன காரணம். உறவுகளை மதித்து பலரோடும் பழகி, கலகலப்பு இல்லாமல் தனித்து வாழ்வது காரணமா ? இதற்கு பெண்கள் மட்டுமே காரணமா ? இல்லை பெற்றோர்கள் காரணமா ? அவசர அவசியமாக சிந்திக்க வேண்டிய செய்தி இது. இந்த கேள்விக்கு பதில் பெரும்பாலான மனமுறிவுகளில் பெற்றோர்களே காரணமாகிறார்கள். ஒருவரை ஒருவர் ஒரு குடும்பத்தை மற்றொரு குடும்பம் முழுவதுமாக புரிந்து கொள்ளாமலும், கலந்து பேசி, சரி செய்யாமலும், எடுத்தேன் கவிழ்த்தேன் என சில, சில கருத்து மாற்றங்களை கூட விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாமல் எந்த குடும்பம் பெரிய குடும்பம் என்ற ஈகோ -வும் யார் சொல்வதை, யார் கேட்பது என்ற ஈகோ –வும் குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி எடுக்காத முடிவும் குழந்தைகளை அறிவுரை சொல்லி நெறிப்படுத்தாமல் பெற்றோர்கள் அவர்கள் கருத்துக்கு துணை நிற்பதும். சில வீடுகளில் பெண்ணின் சம்பாதியத்தை வைத்து பெற்றோரும் வாழ்க்கையை ஓட்டுகிற நிலையும், தொலைநோக்கோடு எதிர்காலத்தை சிந்திக்காமல் பெற்றோர்களுக்கு பின் அந்த குழந்தையின் வாழ்க்கையை பற்றி கவலை படாமல், மனமுறிவுக்கு துணை நிற்பது சரியா ? என்பதை சிந்திக்க வேண்டும், பாலூட்டி, சீராட்டி பத்து மாத காலம் கருவில் சுமந்து பெற்றெடுத்து வளர்த்த பையனின் பெற்றோருக்கு உதவி வாழ்வதும், அவர்களோடு சேர்ந்து வாழ்வதும் கூடத்தவறு என இதையே ஒரு பிரச்சினையாக்கி பணமே பிரதானம் என்று பணத்தை வைத்தே வாழ்ந்து விடலாம் என்பது எவ்வளவு குருட்டுத்தனமானது. பணம் மட்டுமே வாழ்க்கையை, வாழ்க்கையில் மகிழ்ச்சியை, நிறைவை தருமா ? என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி என்கிறார் வள்ளுவர். மாற்றம் என்பது மானிடத்தத்துவம் வாழ்க்கையின் எந்த நிலைப்பாடும் நிலைத்ததல்ல, இதுவும் கடந்து போம் என்பது தான் மிகச்சிறந்த முன்னோட்டமாகும். இல்லெதன் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை பெருமைதரும் குணங்கள் இல்லத்தரசியாகிய மனைவியிடம் அமையுமேயானால் வேறு எதுவும் இல்லாவிட்டாலும் அந்த வீட்டில் இல்லாதது ஒன்றும் இல்லை என்று பேசப்படும். அக்குணம், இல்லையென்றால் எவ்வளவு பிற செல்வங்கள் இருந்தாலும் ஒன்றும் இல்லாதது போலத்தான் என்கிறது வள்ளுவம். எனவே, பெற்றோர்கள் பதறி, சினங்கொண்டு, இளம் சிட்டுக்களின் வாழ்க்கையை தாங்களும் துணைபுரிந்து சிதறடிக்க விடாமல், இளம் தம்பதியினரை நெறிப்படுத்தி, சிறகடிக்கச் செய்வோமே, கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், தாத்தா, பாட்டியின் அறிவுரையும், அருகிப் போனதும் இவைகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது. எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அவர்களுடைய மனோ நிலையை செம்மைப் படுத்தி மனமுறிவு எனும் நோயை வேரொடு, வேரடி மண்ணொடு கலைவோமாக
- மேலை-பழநியப்பன் – கரூர்