சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனத்தில் மகான் ஸ்ரீராமானுஜர் குறித்த தொலைக்காட்சி தொடர் ஒன்று தயாராகிறது. ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் இந்து மதத்திற்கு ஆற்றிய பங்களிப்பு உள்ளிட்டவற்றை சித்தரிக்கும் வகையில் இந்த தொடர் தயராகிறது. இதனை பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் குட்டி பத்மினி தயாரிக்கிறார். இத்தகவலை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதி, சமயத் துறவி ஒருவரின் வாழ்க்கை வரலாறு குறித்து தயாராகும் டிவி தொடருக்கு கதை வசனம் எழுதுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அதில், என்ன திடீரென்று “ராமானுஜர்” மீது பக்தி ஏற்பட்டு விட்டது ? என் கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை! ஆமாம், உண்மை தான்! “முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ் நாடுதன் அருந்தவப் பயனாய் இராமா னுசனை ஈன்றதன்றோ? இந்நாடு வடகலை ஏன்என எண்ணித் தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?” – என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, 1946ஆம் ஆண்டு திருச்சி வானொலிக் கவியரங்கில் ராமானுஜரைப் பாராட்டிப் பாடியுள்ளார். இதில் கொள்கை மாறுபாடு எதுவுமில்லை. ஒருவரைப் பாராட்டுவதாலேயே அவருடைய அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு விட்டதாகப் பொருள் கொள்ளக் கூடாது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரையும், கிருபானந்த வாரியாரையும், மதுரை ஆதினத்தையும் – அவர்கள் எல்லாம் சிறந்த ஆன்மீகவாதிகள் என்ற போதிலும், அவர்களின் தமிழுக்காகவும், சாதி மதப் புரட்சிகளுக்காகவும் நாம் ஆதரிக்கவே செய்தோம். குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராகவே நியமித்தோம். கிருபானந்த வாரியாரை எதிர்த்து திருவாரூர் கோயிலிலே கேள்வி கேட்ட நானே, அவருடைய திருவுருவச் சிலையை சேலத்தில் திறந்து வைத்தேன். எனவே “ராமானுஜரின்” வாழ்க்கை வரலாறு என்றதும் எதையெதையோ எண்ணி யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.