ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்த
தஞ்சை நாயக்கன் விஜய ரகுநாதன்
குறிப்பு: கும்பகோணம் ராமஸ்வாமி கோயில் கட்டப்பட்ட பின்னணியைக் காட்டும்… சரித்திரக் கதை || 2010ம் வருட தினமணி தீபாவளி மலரில் இந்தச் சரித்திரக் கதையை எழுதினேன்…
– செங்கோட்டை ஸ்ரீராம்
பகுதி – 1
ஓயாத உளிச்சத்தம். அவன் காதுகளில் சந்தம் இசைத்துக் கொண்டிருந்தது. கலையில் வல்லவன், இசையில் சிறந்தவன், தமிழிசை பாடும் தஞ்சைத் தரணியின் புகழை உச்சத்தில் உயர்த்திவன், ஓவியக் கலையில் பெருவிருப்பம் கொண்டவன்… இதோ இன்று ஓர் ஆலயம் பிரமாண்டமாய் மேலெழுவதை இமை கொட்டாது பார்த்து ரசிக்கின்றான்.
மன்னா தேவியுடன் தாங்கள் இருக்கும் இந்தச் சிலையையும்…
ஏதோ யோசனையில் திளைத்திருந்தவன் சிற்பியின் இந்தக் குரலால் நினைவுலகில் இருந்து நனவுலகுக்கு வந்தான். இந்தத் தமிழ் மண்ணில் இதுவரை ஆண்ட மன்னர்கள் எல்லோரும் அரண்மனைகளைக் காட்டிலும் ஆலயங்களையே கட்டினார்கள். தனக்கென ஓர் இடம் எடுக்காமல், இறைவனின் பெயரால் ஆண்ட தமிழ் மரபை ஒட்டி ஆலயம் அமைத்தார்கள். அது மக்களின் புகலிடம். அரண்மனை என்றால் அதை வேறொருவன் அழித்தொழிப்பான். ஆலயம் என்றால் கட்டியவன் நினைவு காலத்துக்கும் இருக்கும். தமிழ் மண்ணின் மைந்தன் அதனைச் சிதைக்கமாட்டான்…
அமைச்சன் அன்று சொன்னது அவன் காதில் ரீங்காரமிட்டது. ஆலயங்கள் எல்லாம் வெற்றியின் சின்னங்களா? பாண்டியனும், சோழனும் இந்த தஞ்சைத் தரணியிலே எத்தனை ஆலயங்களை எடுப்பித்தார்கள்?! போரில் மாற்றானை மாய்த்ததால், அந்தப் பாவம் கழுவ ஆலயத்தைக் கட்டினார்களோ?! கேள்வி அவன் உள்ளத்தே எழத்தான் செய்தது. நாமும் அந்த வழியில்தான் செல்கிறோமோ? இதை எண்ணியபோதே அவன் மனம் கலங்கியது.
அடுத்த நொடி… இல்லை இல்லை! இது அறப்போர். அறம் வெல்லத் துணை நின்ற அந்த அயோத்தி ராமன் அல்லவா இங்கே பட்டாபிஷேகக் கோலம் கொண்டு அரியணை தாங்கி நிற்கிறான்! அவனுக்காக அன்றோ இங்கே நாம் ஆலயம் எழுப்புகிறோம்.
ராமாயணத்தை ஒவ்வொரு கணமும் படித்துப் படித்து அதில் கரைந்துபோனவன் இந்த ரகுநாதன்…
யார் இந்த ரகுநாதன்?
தஞ்சைத் தரணியிலே பிற்கால நாயக்கர்களில் புகழ்பெற்ற மாவீரன். அச்சுதப்ப நாயக்கனின் வாரிசு! அச்சுத தேவராயன் தஞ்சைத் தரணியில் கோயில்கள் பல எடுத்தவன். அறிவிற் சிறந்த கோவிந்த தீட்சிதரை அமைச்சராகப் பெற்றவன். யாழ்ப்பாணத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்ட போர்த்துகீசியரை யாழ் மன்னனின் வேண்டுகோளுக்கு ஏற்ப போர் புரிந்து ஓட ஓட விரட்டியவன்.
அவனின் மைந்தன் ரகுநாதனோ தந்தையைக் காட்டிலும் தர்ம வீரனாகப் பேரெடுத்தான்! கி.பி. 1634 வரை தஞ்சையை ஆட்சி செய்தவன்.
ராமாயண காவியத்தில் ஆழங்கால் பட்ட ரகுநாதன், சீதாராமனாக சிலை வடிக்க எண்ணினான். சீதையுடன் கூடிய ராமபிரானின் கருணை உள்ளம் அவனைக் கவர்ந்தது. ராமபிரான் சீதையுடன் கூடி இருந்த நாட்களில் அவன் யாரையும் வதம் செய்யவில்லை! ராமனின் சீற்றம் எல்லாம் சீதை உடன் இல்லாத நிலையில் வெளிப்பட்டது. தர்ம வீரனாக ராமபிரானின் வழியில் போர்களை நடத்தினான் என்றாலும், அமைதியை எண்ணி எண்ணி ஏங்கியது விஜய ரகுநாதன் மனம்! அதற்குக் காரணம் ஒரு போர்!
நினைவலைகள் பின்னோக்கிச் செல்ல அந்தப் போரின் ஆரம்ப முடிச்சு அவன் கண்ணில் தெரிந்தது!
பகுதி – 2
ஆழ்ந்த சிந்தனையில் அங்கும் இங்குமாக நடைபோட்டான் விஜய ரகுநாதன். அவன் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் அலைபாயும் அவன் மனத்தின் எண்ண அலைகளை வெளிப்படுத்தியது.
அப்போது என்ன நடந்தது…? மனத்தில் அசை போட்டான்..!
வேங்கடபதி தேவராயர் பெரும் இக்கட்டில் தவித்தார். அவர் தன் இறுதிக்காலத்தில் இருப்பதை உணர்ந்திருந்தாரோ என்னவோ! படபடப்பு இருந்தாலும் அதையும் மீறி அவர் முகத்தில் ஓர் அமைதி தெரிந்தது.
அவர் அருகே நின்றிருந்தான் ஜக்கராயன். தன் எண்ணப்படியே மன்னர் நடந்துகொள்வார் என்று மனத்திலே கணக்கிட்டான். எப்படியும் தன் தங்கை ஒபய்யம்மாவின் அழகும் வனப்பும் மன்னர் வேங்கடபதியை தன் எண்ணப்படி நடக்க வைக்கும் என்பதில் உறுதியாயிருந்தான் ஜக்கராயன். அவள் அழகு, வேங்கட ராயரை அப்படி கிறங்க வைத்திருந்தது. அவள் பேச்சும் சிரிப்பும் அவரை மயக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. அவள் அருகே இருந்தால் போதும், வேறெதுவும் தேவையிராது அவருக்கு!
ராணிகள் பலர் இருந்தாலும், வாரிசு இல்லை வேங்கடபதி தேவராயருக்கு! அதை வைத்தே… ஜக்கராயன் ஒரு சூழ்ச்சி செய்தான். தன் தங்கைக்கும் மன்னனுக்கும் பிறந்ததாக ஒரு குழந்தையை அரண்மனைக்குள் கொண்டு வந்தான். அந்தக் குழந்தைக்கே மன்னன் பட்டம்சூட்ட வேண்டும் என்று தங்கை ஒபய்யம்மாவிடமும் தெளிவாகக் கூறியிருந்தான். அதன் மூலம், தானே அரசை ஆள திட்டம் போட்டான் ஜக்கராயன்.
ஒபய்யம்மாவும், தன் அண்ணன் சொல்படி அந்தக் குழந்தையை தனக்கும் மன்னனுக்கும் பிறந்த குழந்தைதான் என்பதை வேங்கடபதி தேவராயரிடம் சொல்லி, அவனே பட்டத்துக்குரியவன் என்று அறிவிக்குமாறும் வற்புறுத்தினாள்.
வேங்கடபதியின் நிலையோ, கைகேயி வற்புறுத்தலுக்கு இணங்கிய தசரதனின் கதை ஆயிற்று! அந்த நிலையில் தன் ஆவி போகுமோ என்றும் நினைத்தார் வேங்கடபதி தேவராயர்.
அங்கே இறுக்கமான நிசப்தம்! மௌனத்தின் மடிப்பில் ஜக்கராயன்! படுக்கையில் கிடந்த மன்னரின் தோளை உரசியபடி ஒபய்யம்மா! கையிலே குழந்தை. அந்த நிலையில், ஜக்கராயனின் எண்ணப்படியே மன்னர் நடந்துகொள்வார் என்பது உறுதியாகத் தெரிந்தது.
வேங்கடபதியோ அமைச்சர்களையும் ஸ்ரீரங்கனையும் அழைத்துவர ஆணையிட்டார். எல்லோரும் சூழ்ந்திருக்க, அருகே நின்ற ஒபய்யம்மாவை அன்போடு தடவியபடியே மன்னர் நடுங்கும் குரலில் ஸ்ரீரங்கனை அழைத்தார். அவர் மனத்துக்குள் இன்பத்துக்கும் அறத்துக்கும் இடையே பெரும்போர். தவித்தார் மன்னர். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராக, நொடிப் பொழுதில் ராஜ மணிமகுடத்தை ஸ்ரீரங்கனின் தலையில் சூட்டினார்.
அடுத்த நொடி… ஜக்கராயன் கண்களில் நெருப்பைக் கக்கியபடி கர்ஜித்தான். தன் திட்டமெல்லாம் நொடிப்பொழுதில் கானல் நீரானதே என்ற இயலாமையும் ஆத்திரமும் புயலாய் எழுந்தன. தங்கையின் கைகளைப் பற்றினான். குழந்தையை மறு கையில் பற்றினான். அங்கிருந்தோரிடம் கர்ஜித்து, விறுவிறுவென வெளியே இழுத்துச் சென்றான்.
வேங்கடபதி மன்னர் அறவழியில் செயல்பட்டதை எண்ணி எண்ணி மக்களும் மந்திரிகளும் மெய் சிலிர்த்தார்கள். ஆனால்… மறுநொடியே, வேங்கடபதி தேவராயன் இவ்வுலகை நீத்தார். அறத்தின் வழியில் உதித்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் பரம்பரையை மெய்ப்பித்த அதே திருப்தியில் அவர் ஆவி பிரிந்தது.
பகுதி – 3
ஜக்கராயன் மனத்தில் விஷக்கனல் கனன்று கொண்டிருந்தது. அவன் சூழ்ச்சி வேறு விதமாய் பயணித்தது. மந்திரி பிரதானிகள் சிலரைக் கைக்குள் போட்டுக் கொண்டான். திடீரென ஒருநாள் அரண்மனையில் புகுந்து, ஸ்ரீரங்கனையும் அவனது தேவியர்களையும் சிறைப் பிடித்தான். ஸ்ரீரங்கனின் வாரிசுகளையும் சிறை எடுத்தான். அனைவரையும் காவல் மிகுந்த வேலூர் கோட்டை சிறையில் அடைத்தான். தன் தங்கை குழந்தையை அரியணை அமர்த்தி, தானே ஆளத் தொடங்கினான். அவன் பக்கம் பலர் சேர்ந்தார்கள். சிலர் எதிர்த்தார்கள்.
ஜக்கராயனின் சூழ்ச்சிகளை அறிந்தவன், விஜயநகர சாம்ராஜ்யத்தின் தீவிர விசுவாசியாகத் திகழ்ந்த தளபதி யாசம நாயக்கன். அவனையும் தன் பக்கம் இழுக்க என்னென்னவோ செய்தான் ஜக்கராயன். ஆனால் எதுவும் பலிக்கவில்லை.
ஜக்கராயனுக்கு ஒரு செய்தி வந்தது. அது, வேலூர் சிறையில் இருந்து ஸ்ரீரங்கன் தப்பித்துச் செல்ல முயற்சி செய்கிறான் என்று! அத்திரமடைந்த ஜக்கராயன், காவலை பலப்படுத்தினான். சிறைக் கதவுகள் வலுவாகப் பூட்டப் பட்டன. உணவு, தண்ணீர் எடுத்துச் செல்வோர், துணி வெளுப்போர் தவிர வேறு எவரும் காவலை மீறிச் செல்ல இயலாது. அவர்களும் உடல் வலு இல்லாத வயதானவர்களாகவே நியமிக்கப்பட்டார்கள். எதிர்த்துச் சண்டையிடவோ, ஸ்ரீரங்கராயனுக்கு உதவவோ இயலாத நபர்களாக அவர்கள் இருந்தார்கள்!
ஒரு நாள், கோபக் கனல் கக்கும் கண்களுடன் கைகளில் உருவிய வாளுடன் சிறை வாசலில் நின்றான் ஜக்கராயன். அவன் கோலம் கண்ட பாதுகாவலர்கள் பயத்தால் நடுநடுங்கினார்கள்.
எவ்வாறு நடந்தது இது? – கர்ஜித்தான் ஜக்கராயன்.
என்ன நடந்தது மன்னா! எதுவும் நடக்கவில்லையே! – பயத்தால் வெடவெடத்து நின்றார்கள் காவலர்கள்.
முட்டாள்களே! நேற்று வண்ணான் ஒருவன் துணிமூட்டையைச் சுமந்து பாரம் தாங்காமல் குனிந்து சென்றானே! அப்போது என்ன செய்தீர்கள்?
வழக்கம்போல்தானே என்று இருந்துவிட்டோம்!
அந்த ஸ்ரீரங்கனின் வாரிசு ராமனை துணி மூட்டையில் கட்டி வண்ணான் கடத்திச் சென்றுவிட்டானடா! அந்த யாசம நாயக்கன் சதிக்கு நீங்கள் இடம் கொடுத்துவிட்டீர்களே மடையர்களே!
அவ்வளவுதான்… அங்கே பாதுகாவலர்களின் தலை மண்ணில் உருண்டோடியது. அதே ரத்த வாடை வீசும் வாளோடு சிறைச்சாலை புகுந்தான் ஜக்கராயன். அடுத்த நிமிடம் அங்கே கூக்குரலும் பேரிரைச்சலும் கேட்டு அடங்கியது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி ஸ்ரீரங்கராயர், சிறைச்சாலையில் துண்டுதுண்டாக வெட்டுண்டு ரத்த வெள்ளத்தில் மாண்டு போனார். குடும்பமே ஜக்கராயனின் வாளுக்கு இரையாகி சிதறிப் போனது!
அந்த ஒரு சிறுவன் ராமனால் என்ன ஆகிவிடும் என்று நான் பார்க்கிறேன்! – எக்காளச் சிரிப்போடு வெளியேறினான் ஜக்கராயன்.
பகுதி – 4
பெரும் யோசனையில் ஆழ்ந்திருந்தான் யாசம நாயக்கன். ஜக்கராயனுடன் பெரும்பாலான தளபதிகள், மந்திரி பிரதானிகள் சேர்ந்துவிட்டார்கள். அவன் படைபலம் இப்போது அதிகரித்துவிட்டது. எத்தனையோ அரசியல் கொலைகளை இந்த மண் பார்த்திருக்கிறது. ஆனால்… விஜயநகர சாம்ராஜ்யத்தில் முறையாகப் பட்டம் சூடிய ஸ்ரீரங்கராயருக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி எண்ணி யாசம நாயக்கன் உள்ளம் புழுங்கினான். செஞ்சி நாயக்கனும் மதுரை நாயக்கனும் ஜக்கராயனுடன் சேர்ந்து படை கூட்டி நிற்கிறார்கள். எப்படியாவது இந்த ராமராயனைக் காக்க வேண்டும்! விஜயநகர வம்சம் தொடர்ந்து ஆள வேண்டும்… கவலையில் ஆழ்ந்திருந்த யாசம நாயக்கனுக்கு தெற்கே ஓர் ஒளிக்கீற்று தென்பட்டது!
அது, தஞ்சை ரகுநாத நாயக்கனின் பெயரை அவன் மனத்தில் ஒலிக்கச் செய்தது. மாவீரன் ரகுநாதனை யாசமன் நன்கு அறிவான். அறத்தின் வழி நிற்கும் ரகுநாதன் நிச்சயம் உதவுவான் என்று எண்ணினான். ரகுநாதனுக்கு ஓலை அனுப்ப ஏற்பாடு செய்தான்.
விஜயநகர சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசு என ராமராயனை அறிவித்தான் யாசம நாயக்கன். சிறு படை திரட்டினான். முரசு கொட்டினான். போர் தொடங்கியது.
***
இளம் பாலகன் ராமராயனின் முகம் விஜயரகுநாதனின் நெஞ்சிலே அலைமோதிக் கொண்டிருந்தது. யாசமனுக்கு எப்படி உதவுவது? யோசனையில் அங்குமிங்கும் நடைபோட்டான் ரகுநாதன்.
தூதன் ஓடி வந்தான். வந்த வேகம் ஏதோ அசம்பாவிதத்தை எடுத்துச் சொல்வதாய்த் தோன்றியது ரகுநாதனுக்கு. அவன் நினைத்ததும் சரிதான்! “மன்னா… சோழகன் நம் நாட்டில் புகுந்து கொள்ளையிட்டுக் கொண்டிருக்கிறான்…” தூதன் சொல்லி முடிக்கவும், ரகுநாதனுக்கு கோபம் எல்லை மீறியது.
தூதன் மேலும் தொடர்ந்தான்… மன்னா.. நம் மக்களை அவன் கடத்திச் செல்கிறான். அவர்களை சாக்குகளில் கட்டி, கற்களால் அடித்து குற்றுயிராக்கி அவன் வளர்க்கும் முதலைகளுக்கு இரையாக்குகின்றான்… – சொல்லி முடிக்கும் முன்பே ரகுநாதன் கிளம்பிவிட்டான் போர்க்கோலம் பூண்டபடி..!
படைத்தலைவர்களும் வீரர்களும் ரகுநாதனின் குதிரைக்குப் பின்னே விரைந்தார்கள். போர்க் களத்தில் சோழகனுடன் போர்த்துக்கீசியர்களும் தென்பட்டார்கள்.
வணிகர்களாகப் புகுந்தவர்கள். கடல் வாணிபத்தில் பாதுகாப்புக்காக சிறு படையைக் கொண்டிருந்தவர்கள். இன்று சோழகனுக்கு உதவுகிறார்கள். இந்த உதவிக்கு என்ன விலை கொடுக்கப்போகிறானோ அந்த சோழகன்!
மனத்தில் கடுங்கோபம் ஆக்கிரமிக்க, உக்கிரப் போர் புரிந்தான் ரகுநாதன். அவன் வாள்வீச்சில் சோழகன் படை சிதறுண்டு போனது. சோழகன் பிடிபட்டான். அவனைச் சிறையில் தள்ளினான் ரகுநாதன். சோழகனின் தேவிக்கோட்டை ரகுநாதன் வசம் வந்தது. போர்த்துக்கீசியர்களோ புறமுதுகிட்டு ஓடினார்கள். கடல் வழியே தங்கள் கலங்களில் இலங்கைத் தீவுக்குத் தப்பிச் சென்றார்கள். வெற்றிக் களிப்பில் இருந்தான் விஜய ரகுநாதன். அவன் பெற்ற மாபெரும் வெற்றியாயிற்றே!
பகுதி – 5
தர்மத்தை நோக்கிய யாசம நாயக்கனின் போர் முரசு ஜக்கராயனைக் கலங்கடித்தது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னனை ரத்தவெள்ளத்தில் பல கூறுகளாக்கிக் கொன்று போட்ட ஜக்கராயனை பழிவாங்குவது என்ற வெறியுடன் வாள் சுழற்றிய யாசம நாயக்கனின் முன்னால், ஜக்கராயனின் படைகள் ஈடுகொடுக்க முடியவில்லை.
போர்க் களத்தில் பாலகன் ராமராயனுக்கு பயிற்சி கொடுத்தான் யாசமன். வேறு வழியின்றி ஜக்கராயன் பின்வாங்கினான். தெற்கு நோக்கி விரைந்தன அவனது குதிரைகள். மதுரை நாயக்கனும் செஞ்சி நாயக்கனும் ஜக்கராயனுக்குத் துணை நின்றார்கள். பெரும்படை திரண்டது. திருச்சிராப்பள்ளி மண் நூற்றாண்டு சில கடந்து பெரும் படையைக் கண்டது.
யாசம நாயக்கனும் இதை அறிந்தான். இருப்பினும் தர்மமே வெல்லும் என்ற இந்த மண்ணின் தன்மை அவனுக்குத் தெம்பு ஊட்டியது. ராமராயனை அழைத்துக் கொண்டு தென்னகம் நோக்கி முன்னேறினான் யாசமன். அவனுக்கு இருந்த ஒரே நம்பிக்கை தஞ்சை ரகுநாதன். தர்மத்தைக் கடைப்பிடிப்பவன், இசையிலும் கலையிலும் போர்களிலும் வல்லவன். தனக்கு உறுதுணையாக இருப்பான் என்ற நம்பிக்கையில் தஞ்சை நோக்கி முன்னேறினான்.
***
ராமராயனை விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைவன் ஆக்குவது என்ற முடிவுடன் யாசமனுக்கு எவ்வாறு உதவுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் ரகுநாதன். அதே நேரம், தூதன் ஒரு செய்தி கொண்டுவந்தான். இலங்கைக்கு தப்பியோடிய போர்த்துக்கீசியர்கள் கடல் வழியாக வந்து தஞ்சை மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கும் அவர்களை அடக்குவது ஒன்றே அமைதிக்கு வழி என்றான்.
ஒரு போர் முடிந்த கையோடு அடுத்த போரா? மக்களின் பாதுகாப்புக்கு சத்தியம் செய்துவிட்டு, மன்னன் ஓய்வெடுப்பதா? அடுத்த போர் முரசு ஒலித்தது. தேவிக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி ரகுநாதனின் கப்பல்கள் விரைந்தன.
கடற்போரில் போர்த்துக்கீசியர்கள் வல்லவர்கள்தான்! அவர்களின் கப்பல் கட்டும் திறனும், வணிகத்துக்காகவே வெகுதொலைவு வந்து நாடுபிடித்தலில் இறங்கிவிட்ட அவர்களுக்கு, ரகுநாதன் வெகு சாதாரணம்தான்! ஆனால், ரகுநாதனின் நெஞ்சுரமும், வீரமும் அறிவுத் திறனும் போர்த்துக்கீசியர்களை அடிபணிய வைத்தது. யாழ்ப்பாணத்தில் ரகுநாதனின் வெற்றி முரசு ஒலித்தது. அதே வெற்றிச் செய்தியுடன் யாசமனுக்குக் கைகொடுக்கும் உந்துதலில் தஞ்சை திரும்பிக் கொண்டிருந்தான் விஜய ரகுநாதன்.
பகுதி – 6
திருச்சிராப்பள்ளி முகாம் அல்லோலகல்லோலப் பட்டது. எப்படி தடுத்து நிறுத்துவது? ஜக்கராயன் ஆழ்ந்த யோசனையில் சூழ்ச்சிகளைச் செய்ய ஆயத்தமானான். யாசமனுக்கு ரகுநாதன் ஆதரவு கொடுக்கப் போகிறான். இரு பெரும் வீரர்கள் சேர்ந்துவிட்டால் தன் கனவு எல்லாம் பொடிப்பொடியாகிவிடுமே! சூழ்ச்சியில் வல்ல ஜக்கராயனுக்கு இருவரையும் சேர விடாமல் தடுப்பது, அல்லது ரகுநாதனை தஞ்சையைத் தாண்டி இங்கே வரவிடாமல் செய்வது என்ற யோசனை உதயமானது.
கல்லணை… அதுதான் இப்போது ஜக்கராயன் மனத்திலே குடிகொண்டது. கல்லணையைத் தகர்த்துவிட்டால்..? காவிரி வெள்ளம் தஞ்சையை மூழ்கடிக்கும். ரகுநாதன் அதில் ஈடுபடுவான். யாசமனுக்கு உதவ முடியாமல் போகும்!
நினைத்த மாத்திரத்தில் உடனே செயல்படுத்த ஆணையிட்டான் ஜக்கராயன்.
சோழர்களின் கட்டடக் கலையை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்த கல்லணை அவ்வளவு எளிதில் உடைபடவில்லை. காலம் கடந்து நின்ற அந்தக் கல்லணையின் ஒரு பகுதியையே அவர்களால் பெயர்க்க முடிந்தது. கரிகாலனின் கணக்குக்கு அதுவரை கட்டுண்டு கிடந்த காவிரி, சீற்றம் கொண்டு புறப்பட்டாள். தஞ்சை மண்ணில் சிறுகச் சிறுகப் பாய்ந்து பயிர்களுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்த காவிரி, மக்களின் மரண ஓலத்தைக் கேட்கும்படி ஆனது.
பகுதி – 7
யாழ்ப்பாணத்து வெற்றியைக் கொண்டாட வழி இல்லாமல் போனது ரகுநாதனுக்கு! சூது செய்து கல்லணையை உடைத்த கயமைத்தனம் ரகுநாதன் காதுக்கு எட்டியது. காவிரி வெள்ளம் கட்டுக்கடங்காது போனதுபோல், ரகுநாதனின் கோபம் எல்லை தாண்டியது. வெறும் வாய்ப்பந்தல் போட்டு வணங்கிக் கிடப்பவனோ அவன்?! செயல்வீரனாயிற்றே! “உடைபட்ட அணையை உடைத்தவன் தலைகொண்டு அடைப்பேன்…!” சூளுரைத்தான் ரகுநாதன்…!
விஜயரகுநாதனின் வரவுக்காக யாசமன் தஞ்சையில் காத்திருந்தான்! யாசமனையும் ராமராயனையும் ஆரத் தழுவினான் ரகுநாதன். தஞ்சை மண்ணைச் சொல்லி சபதம் செய்தான்.. “விஜயநகர சாம்ராஜ்யத்தின் வாரிசு ராமராயனே! அவனுக்கு முடிசூட்டு விழா நடத்தாமல் ஓயமாட்டேன்!”
சூளுரையை மெய்யாக்க முயன்றான் ரகுநாதன். யாசமனின் படையும் போர்க் களம் பல கண்ட ரகுநாதனின் படைகளும் ஒன்றாகி நின்றன. தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருக்காட்டுப்பள்ளி வழியாக சிராப்பள்ளியை நோக்கி முன்னேறின.
யாசமனும் ரகுநாதனும் திரண்டு வருவது கேட்டு, ஜக்கராயனும் திருச்சிராப்பள்ளியை விட்டு தஞ்சையை நோக்கிச் சென்றான். அவனுக்கு உறுதுணையாக சேரனும், மதுரை நாயக்கன், செஞ்சி நாயக்கனின் படைகளும் உடன் சென்றன.
திருச்சிராப்பள்ளியை அடுத்த தொப்பூரில் இருதரப்பும் ஆக்ரோஷமாக மோதின. தென்னகம் கண்டிராத பெரும்போர் அது. ஆயிரக்கணக்கில் இரு தரப்பிலும் வீரர்கள் மாண்டு போனார்கள். நன்னீர்க் காவிரியை அணை உடைத்து பெருகச் செய்த ஜக்கராயன் படைகளை செந்நீரால் கழுவினான் ரகுநாதன். மதுரை, செஞ்சி நாயக்கர்கள் கதி கலங்கிப் போனார்கள். சதி பல செய்த ஜக்கராயன் முன் காலனைப் போல் நின்று கர்ஜித்தான் விஜய ரகுநாதன். அவன் மனக் கண்ணில் விஜயநகர சாம்ராஜ்யத்தில் முறையாகப் பட்டம் சூட்டப்பட்ட ஸ்ரீரங்கனைத் தன் வாளால் வஞ்சகத்தில் சிதைத்த ஜக்கராயனின் கொடூரச் செயல்கள் நிழலாடின..! அதை நினைத்த மாத்திரத்திலேயே ரகுநாதனின் புஜங்கள் துடித்தன..! அடுத்த நொடி… ஜக்கராயனின் சிரத்தை அறுத்து மண்ணில் உருண்டோடச் செய்தான் விஜய ரகுநாதன்.
மதுரை நாயக்கனும் செஞ்சி நாயக்கனும் திரும்பிப் பாராமல் ஓட்டம் எடுத்தார்கள். அறம் வென்றது. விஜய ரகுநாதன் தஞ்சைத் தரணிக்கு மீண்டும் புகழ் சேர்த்தான்.
பகுதி-8
கங்கையிற் புனிதமான காவிரிக் கரையில், அதுவும் தன் தஞ்சைத் தரணியில்… விஜயநகர சாம்ராஜ்யத்தின் வாரிசாக ராமராயனுக்கு முடிசூட்ட எண்ணினான் விஜய ரகுநாதன். அன்று ராமபிரான் சுக்ரீவனுக்கும், விபீஷணனுக்கும் எப்படி முடிசூட்டி மகிழ்ந்தானோ அதுபோல், இன்று பதிலுதவியாக இந்த ராமராயனுக்கு தான் முடிசூட்டுவதாக எண்ணினான் ரகுநாதன். குடந்தை நகரில் அனைவரும் குழுமினார்கள். சாரங்கபாணியும் சக்ரபாணியும் அருளாட்சி நடத்தும் குடந்தையில் ராமராயன் விஜயநகர சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டான். 15 வயது பாலகன் மன்னனாக முடிசூட்டினாலும், யாசமனும் ரகுநாதனும் விஜயநகர சாம்ராஜ்யத்தின் விசுவாசிகளாக இருப்பதாக உறுதி பூண்டார்கள். மீண்டும் அங்கே அறம் தழைத்தது. மறம் மடிந்தது..!
விஜய ரகுநாதன், ராமாயணத்தில் தோய்ந்தவன். ராமனின் பண்பு நலனில் விரும்பித் திளைத்தவன். ராமகாதை எனும் அமுதத்தைக் காதால் கேட்பதில் பெரு விருப்பம் கொண்டவன். கலை பல சிறக்க தஞ்சைத் தரணியை இசையாலும் கலைச் சிறப்பாலும் உயர்த்திப் பிடித்தவன்.
ராமராயனின் பட்டாபிஷேகக் கோலம் உள்ளத்தே அலைமோத, சக்ரவர்த்தித் திருமகன் ராமனையே தன் மனக்கண்ணில் கண்டான்… அனுமனாகத் தன்னை நினைத்துக் கொண்டான்..! ராமபிரானின் பட்டாபிஷேகம் ஏன் இந்தக் குடந்தை மண்ணிலே நிகழ்ந்திருக்கக் கூடாது?! அதையும் தம் கரங்களால் ஏன் நிகழ்த்தியிருக்கக் கூடாது?! எண்ணம் அலைமோத, எங்கும் இல்லாத ராமனின் கோலத்தை சிலையாக வடித்தான் விஜய ரகுநாதன்.
ஒரே பீடம். ராமனும் சீதையும் அதில் அமர்ந்து ஒட்டி உறவாடினார்கள். தம்பி லட்சுமணன், பரத சத்ருக்னர்கள் சாமரம் வீச… அங்கே பட்டாபிஷேகக் கோலம் கண்டான் ஸ்ரீராமன்.
ஆலயத்தில் ஓவியக் கலை ஆர்த்தெழுந்தது. ராமாயண நிகழ்வுகள் எல்லாம் ஓவியமாய்க் காண்போர் உள்ளத்தே கருக்கொண்டன. பரதனும் சத்ருக்னனும்தான் வெண்கொற்றக் குடை பிடித்து அயோத்தி ராமனுக்கு சேவகம் செய்ய வேண்டுமா என்ன? இதோ அடியேனும் இருக்கிறேன் என்று ரகுநாதன் உள்ளம் ராமனில் கரைந்தது.
சீதா ராமனாக முடிசூட்டி, சகோதரர் புடைசூழக் காட்சி தந்த அந்தக் கோலத்தை என்றென்றும் தரிசிக்க பெருவிருப்பம் கொண்ட விஜய ரகுநாதன், தன் தேவியுடன் தானும் சேவகம் செய்யக் காத்து நிற்கும்வண்ணம், அங்கே ஓர் தூணில் தன்னையே சிற்பமாக எழுப்பிக் கொண்டான்.
காலம் மாறியது. தஞ்சை நாயக்கர் வம்சம் அடுத்த இரு தலைமுறையுடன் ஓய்ந்து போனது. ஆனால்… இன்றும் விஜய ரகுநாதன், கூப்பிய கரங்களுடன் பட்டாபிஷேக ராமனை தரிசித்தபடி, தன் ஆட்சிக் கால சாதனைகளை இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உணர்த்திக் கொண்டு… இந்தக் கோயிலிலே உறைந்திருக்கிறான்!
***
பின் குறிப்பு: விஜயநகர மன்னர்கள் : தகவல் விக்கிபீடியா
https://en.wikipedia.org/wiki/Vijayanagara_Empire
Aravidu dynasty (1542 – 1646 CE)[edit]
Main article: Aravidu dynasty
- Aliya Rama Raya (1542–1565 CE), first ruler
- Tirumala Deva Raya (1565–1572 CE)
- Sriranga Deva Raya (1572–1586 CE)
- Venkatapati Deva Raya (1586–1614 CE)
- Sriranga II (1614–1617 CE)
- Rama Deva Raya (1617–1632 CE)
- Peda Venkata Raya (1632–1642 CE)
- Sriranga III (1642–1646/1652 CE), last ruler of dynasty and empire
இதில் வரும் மன்னர் வேங்கடபதி தேவராயர் – 1586-1614
ஸ்ரீரங்கன் 2 – 1614-1617 (அவனைத்தான் ஜக்கராயன் சிறையில் சிரச்சேதம் செய்தான்)
ராமதேவராயன் 1617-1632 (இவனுக்குத்தான் தஞ்சை நாயக்கன் விஜய ரகுநாதன் தஞ்சையில் வைத்து, விஜயநகர சாம்ராஜ்யத்தின் வாரிசாக பட்டாபிஷேகம் செய்வித்தான்)