சிறுகதை: மனக்குரல்
எழுதியவர்: ஜெயஸ்ரீ எம்.சாரி
பேச்சியம்மாள் தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தான் வேலை செய்யும் வீடுகளுக்கு புறப்படத் தயாரானாள். நான்காவது வகுப்பு படிக்கும் தன் மகன் பிரபுவையுன் தன்னுடன் அவள் அழைத்துச் சென்றாள்.
முதலில் ராணி டீச்சர் வீட்டிற்கு சென்று தன் வேலையை தொடர்ந்தாள். ஆன்லைனில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த டீச்சர், நாளை முதல் பள்ளியில் நேரடியாக வகுப்புகள் ஆரம்பிப்பதால் தன்னுடைய பள்ளியிலேயே படிக்கும் பிரபுவை தானே தினமும் அழைத்துச் செல்வதாய் கூறினார்.
அதனைக் கேட்ட பேச்சியம்மாள் “ரொம்ப சந்தோஷம்மா, நீங்க என்னோட சம்பளத்திலிருந்து பிடிச்சுக்கம்மா காசு,” என்றாள். ராணி டீச்சரோ “பேச்சி, அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். இப்போதைக்கு பசங்க ஸ்கூல் வருது தான் முக்கியம். நீ பைசா பற்றியெல்லாம் கவலை படாதே,” என்று ஆறுதலாய் கூறினார். பேச்சியம்மாள் அவருக்கு நன்றி கூறினாள்.
அடுத்ததாக இரண்டு, மூன்று வீடுகளில் வேலை செய்தபின் பிரபுவை தன் வீட்டில் விட்டுவிட்டு தன் சின்னப் பெண்ணான சுமியை அழைத்துக் கொண்டு மதிய வேளையில் செல்லும் வீடுகளை நோக்கி நடந்தாள், பேச்சி.
அந்த வீடுகளில் உள்ளவர்கள் எல்லாம் கேட்ட கேள்விகளுக் கெல்லாம் துணுக்காய் பதிலளித்த சுமியை பேச்சி பெருமையுடன் பார்த்தாள். “பேச்சி, உன் பொண்ணு ரொம்ப சமத்து. அவளை நல்லா படிக்க வை” என்றார் ஒரு வீட்டு எஜமானியம்மா.
“ஆமாம்மா, என் பசங்க மூணையும் நல்லா படிக்க வெச்சு, அதுங்க வளர்றத பாக்கணும். அது தானம்மா என் ஆசை ,” என்றாள். அங்கிருந்து கிளம்பிய பேச்சி, சுமியை வீட்டில் விட்டுவிட்டு தன் பெரிய பெண் சுஜிதாவுடன் பல வேலைளைச் செய்ய வேண்டிய வீடுகளுக்கு புறப்பட்டாள்.
அப்பொழுது ஒரு பெயர்பெற்ற சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பலர் சுஜிதாவையும் பேச்சியையும் பார்த்தனர்.
அவர்கள் பேச்சியம்மா விடம் “ஏம்மா, நீ கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கிட்டீயாம்மா?” என்று கேட்டனர் . “ஆமாங்க, ஒரு டோஸ் போட்டுட்டேன். இரண்டாவது டோஸ் பக்கி இருக்கு,” என்றாள்.
உடனே அச்சங்கத்தின் தலைவியானவர் “நாளைக்கு இந்த ஏரியாவில எங்களது கூட்டம் இருக்கு. அங்க நீங்க வர முடியுமா? உங்களுக்கு இலவசமா தடுப்பூசி போட்டு விடுவாங்க ,”என்றார். “அம்மா, எனக்கு ரொம்ப வேலை இருக்குமா. அதனால நான் பார்த்துக்கிறேன்,” – இது பேச்சியம்மாள்.
” நாளைக்கு நிறைய அரசு உதவிகள் கூட வழங்குகிறார்கள். மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்துள்ளனர். அதனால நீங்க கண்டிப்பா வாங்க ” என்றார் அவர்.
அவரின் பேச்சை மறுக்க இயலாதவளாய் பேச்சியும் சரி என்று ஒப்புக் கொண்டாள். பின்னர், தனது வேலைகளை முடித்து வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தவளக்கு இன்றைய தினம் நன்றாக போனது என்று மனதில் நினைத்துக் கொண்டே உறங்கினாள்.
மறுநாளும் தன் வேலைகளுக்கு முக்கியத்துவம் தந்தவளாய் அச்சங்கத்தின் நிகழ்ச்சியை மறந்தே போனார் பேச்சி. அப்போதும் சுஜிதா தான், ” அம்மா, நீ இரண்டாவது டோஸ் போட்டுட்டு வந்துடேன் ,” என்றாள்.
“அட, போதாயீ! நமக்கே ஆயிரம் ஜோலி இருக்கு. எல்லார் வீட்டுலையும் சொல்லவும் இல்லை,” என்றவளை “ஒரு எட்டு எட்டி பாத்துட்டு தான் வரலாம், வா போகலாம்,” என்றவள் பேச்சியின் கைய பிடிச்சு சுஜிதா அந்த நிகழ்ச்சிக்கு போனாள்.
மிகப்பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்டது டனும், அலங்காரத்துடனும் நிகழ்ச்சி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பேச்சியும், சுஜித்தாவும் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தனர். நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.
அந்தச் சங்கத்தின் பெண் தலைவர்கள் சமுதாயத்தில் நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்களுகளுடன் சேர்ந்து பல ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நடு நடுவே பெண் சுதந்திரம் என்று தேவையில்லாமல் அதற்கு சம்மந்தமே இல்லாமல் ஏதோதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
பொறுமை இழந்த சுஜிதா நேற்று இவர்களுடன் பேசியவரை மேடையில் கண்டவுடன் அவருக்கு தாங்கள் வந்துள்ளதை தெரிவிப்பதற்காக அவரை அணுக முயன்றாள். அப்போது அங்கு இருந்தவர்கள் சுஜிதாவை “இறங்குமா இங்கிருந்து,” என்று கோபித்துக் கொண்டனர்.
இதனைக் கேட்ட சுஜிதாவுக்கு அழுகையே வந்துவிட்டது. “எங்க அம்மா வேலைக்கு கூட போகாம இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்க வந்தாங்க. மூணு மணி நேரமா உட்கார்ந்து இருக்கோம். நீங்க என்னவோ ஆடிப்பாடிட்டு இருக்கீங்க.அரசு உதவியும் கிடைக்கும் சொன்னிங்க, அதான் நாங்க வந்தோம். எங்களை மாதிரி ஏழைகள் பற்றியும் கொஞ்சம் யோசிங்க நீங்க!! எங்க அம்மாக்கு அஞ்சு வயசுலேயே கல்யாணம் பண்ணிட்டாங்க. எங்க அப்பா ஒரு லாரி டிரைவர். தினமும் குடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவார்.எங்க அம்மாதான் வீட்டு வேலை செஞ்சு எங்களை காப்பாத்துது. அது மட்டுமல்லாமல் என் அம்மா மேல சந்தேகம் கூட படறாரு, எங்கப்பா. அதனால தான், எங்கம்மா என்னை, என் தம்பிய, தங்கைய அவங்க எங்கே போனாலும் அழைச்சுட்டு போறாங்க. எங்கம்மா வேலைய விட்டுட்டு தடுப்பூசி போட வந்தா, இங்க வந்தா இப்படி பண்றீங்க. உங்க சங்கத்து வழியா எங்கள மாதிரி ஏழைகளின் பிரச்சனையும் பேசுங்க. ஏழைங்களுக்கும் அதே 24 மணி நேரம் தான். பணக்காரங்களுக்கும், புகழ்பெற்றவர்களுக்கும் ஒவ்வொரு நிமிஷமும் எவ்வளவு முக்கியமோ, அதேப் போல தான் ஏழைகளுக்கு இரண்டு வேளை சாப்பாடுக்கு ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம். உங்க தடுப்பூசியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். வாம்மா, போகலாம்னு,” பேச்சியின் கையை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.
சின்னப் பெண்ணான சுஜிதாவின் மனக்குமுறலாய் ஒலித்த வார்த்தைகள் ஏழைகளின் மனக்குரலாகவே ஒலித்து நிகழ்ச்சியாளர்களின் மனங்களில் சரியான அடியாகவே விழுந்ததை அங்கு வந்த பார்வையாளர்களுக்கு காட்சியாகவே தெரிந்தது.
சுஜிதாவின் தைரியத்தை பாராட்டி மகிழ்ந்தனர். பேச்சியம்மாள் தன் மகள் என்னும் ஒரு தைரியலட்சுமியுடன் மிடுக்காய் நடந்தாள்.