spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்தெருப்பாடகன்

தெருப்பாடகன்

                தெருப் பாடகன்                                     (மீ.விசுவநாதன்)       சங்கீதமும் பாட்டும் ஒன்று தானா? அது எப்படி ஒன்றாகும்? 

தன்னுடைய நாபிக்கமலத் திலிருந்து மெல்ல மெல்லக் குரலுக்காகத் தவம் இருந்து, ஒரு ராகத்தின் மொத்த அழகையும் தானே தன்னை இழந்து அனுபவித்துக் கண்ணீர் மல்கித் தன்னுடைய தொண்டையை நன்கு திறந்து வாயின் மூலமாக ஒரு உன்னத ஒலியைக் காற்றோடு கலக்க விடும் பொழுது அது கேட்ப்பவரை மெய்மறக்கச் செய்கின்றதே, அது சங்கீதம். பாட்டும் அப்படித் தானே? அப்படி ஒரு தோற்றத்தை அது கொடுக்கும். சங்கீதத்திற்கு வார்த்தைகள் பெற்றோர். ராகங்கள் குரு. அந்த ராகம் என்ற குரு மூலம் கேட்பவர் அனைவரையும் தெய்வ நிலைக்குக் கொண்டு செல்லவதுதான் நல்ல சங்கீதம். நல்ல சங்கீதத்தில் கொஞ்சம் மெல்லிசை சேர்ந்தால் அது பாட்டு. அதுவும் மனதை மயக்கத்தான் செய்யும்.

  காலை ஐந்து மணிக்கு எழுந்து தன்னுடைய காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரைக்குச் சென்று, தனது வேட்டியை அந்த அகன்ற பாறையின் மீது வைத்து நன்றாகச் சோப்புப் போட்டுத் துவைத்த பின், தனது அந்த அலுமினியத் தூக்கைக் கொஞ்சம் புளியையும், ஆற்று மணலையும் வைத்துத் தன்னுடைய இரண்டு கைகளாலும் அழுத்தித் தேய்த்து, நீரில் முக்கி நன்றாகக் கழுவித் தன் கண்களை அகலவிரித்து அந்த அலுமினியத் தூக்கு "வெள்ளி"யைப் போல மின்னுவதைப் பார்த்து மகிழ்ச்சியில் "என் மனம் வெள்ளுக்க வழி இல்லையே தேசமுத்து மாரி" என்று மெல்லிய குரலில் பாடிய படியே 

தண்ணீருள் தன்னுடைய முகத்தைப் பார்த்தார் தெருப் பாடகர் சட்டநாதன்.

   அவருடைய முகம் தெளிவாக்க அந்த நீரில் தெரிந்தது. மீன்கள் அவருடைய கால்களில் உள்ள அழுக்குகளைக் கொத்திக் கொத்தித் தின்னுவதைப் பார்த்து,"ஊரெல்லாம் பிச்சை எடுத்து உடம்ப வளக்கறேன்...நீ என் ஒடம்பு அழுக்கெல்லாம் பிச்சு எடுத்து உடம்ப வளக்கரே..." என்று சொல்லிக் கொண்டே இடுப்பளவு நீரில் நின்ற படியே வாய்விட்டு ஒரு மணிநேரம் பாடிய பின்பு, கரைக்கு வந்து தலையைத் துவட்டிக் கொண்டு, நெற்றியிலும் உடம்பிலும் நிறையப் "பளீர்" என்று விபூதியைப் பூசி, தனது காய்ந்த வெள்ளை வெளேர் வேட்டியை "வள்ளலார் சுவாமிகள்" பாணியில் கட்டிக் கொண்டு கிழக்கு திசையைப் பார்த்து, "ஓம் நமச்சிவாய..தென்னாடுடைய சிவனே போற்றி..என்னாட் டவர்க்கும் இறைவா போற்றி.." என்று மனதில் சொல்லிக் கொண்டு, கழுத்தில் ஒரு ருத்ராக்ஷ மாலையை அணிந்து, பாறையில் பிழிந்து வைத்திருந்த வேட்டியை எடுத்து ஒரு துணிப்பையில் வைத்து இடது கையில் தொங்க விட்டுக்கொண்டு, ஒரு ஜோல்னாப் பையில் வைத்துள்ள டேபிள் டென்னிஸ் மட்டைகளைப் போன்று மரத்தினால் செய்யப்பட்ட "கையிடுக்கி" என்ற இசைக் கருவியை எடுத்து வலது கையிலும், அலுமினியத் தூக்கினை அந்த ஜோல்னாப் பைக்குள் வைத்துத் தன்னுடைய இடது தோள்பட்டையிலும் மாட்டிக் கொண்டு, "மரக்கட்டை"யினால் செய்த செருப்புகளைக் காலில் மாட்டிகொண்டு புறப்படும் நேரம் அனேகமாகக் காலை மணி ஏழரைக்குக் குறையாது.   அப்படியே புறப்பட்டு சிவன் கோவில் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய அரசமரத்தை மூன்று முறை சுற்றிவிட்டுக் கீழே இறங்கி வலது புறம் உள்ள சிவன் கோவிலுக்குள் நுழைந்துதரிசனம் செய்த பின்புதான் சட்டநாதன், அக்ரஹாரத்துக்குள் நுழைவான். அவனது கரகரத்த கம்பீரமான குரல் அந்த கிராமத்தின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களில் சிலசிறுவர்கள் அவனுடனேயே அந்தத் தெருவின் கடேசிவரைச் செல்வதும் அதற்காக அக்குழந்தைகள் அவர்களுடைய அம்மாவிடம் வசவு வாங்குவதும் வாடிக்கைதான். சில சிறுவர்கள் அவனிடம்" அழகென்ற சொல்லுக்கு முருகா"வைப் பாடச் சொல்லும். அவனும் ரசித்துப் பாடுவான். பாடும் பொழுது தன்னுடைய இரண்டு கைகளாலும் "கையிடுக்கி" யினால்த் தாளம் போட்ட படியேதான் பாடுவான். அப்போது அவனுடைய கண்களின் ஒரத்தில்வழியும் கண்ணீரைப் பார்த்து,"ஏன் மாமா அழறேள்" என்று கேட்கும் சிறுவர்களும் இருந்தனர்.  அவனுடைய கம்பீரமான, நளினமான, அழகான தமிழ் உச்சரிப்பில் அவனது தொண்டையில் இருந்து வெளியில் வரும் அத்தனை பாடல்களும் அதிலும் முக்கியமாக அந்தமுருகன் பாடல்கள் அத்தனையும் அந்தச் சிறுவர்களை மெய்மறக்கச் செய்யும். ஒவ்வொரு வீட்டின் முன்பும் அவன் நின்று பாடுவான். அந்த வீட்டுச் சிறுவர்கள்தான் அவர்களுடைய தாயாரிடம் கேட்டு அவனுக்கு ஒரு சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் அரிசியைக் கொண்டு தருவார்கள். அதை அவன் தனது அலுமினியத் தூக்கில் குனிந்து வாங்கி கொள்வான். மதியம்ஒருமணிக் கெல்லாம் வடக்குத் தெருவுக்குப் பின்புறம் மிகத் தெளிவாக ஓடுகின்ற கன்னடியன்கால்வாயின் கரையில் உள்ள மண்டபத்தின் ஒரு மூலையில் அடுப்பு மூட்டிக் கொஞ்சம் அரிசிபோட்டு சோறு செய்து கொண்டு, அன்றைய தினம் யாரேனும் தந்திருந்த ஏதேனும் ஊறுகாயையோ, துவயலையோ சேர்த்துச் சாப்பிடுவான். அவன் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்களை ஒன்றும் சொல்லமாட்டான். சாப்பிட்டு முடித்தவுடன் அவனுக்குப் "பீடி" குடிக்க வேண்டும். அதை அச்சிறுவர்கள் பார்ப்பதை அவன் விரும்புவ தில்லை. "தம்பிகளா ....இனிமே நீங்க உங்க வீட்டுக்குப் போயிடனும்...நா கொஞ்சம் ஒய்வுஎடுக்கணும்" என்று சொல்லி அனுப்பி விடுவான்.   அன்றும் அப்படித் தான் அந்தத் தெருப் பாடகன் ஒரு பீடியைப் பற்ற வைத்து, வாய்க்கால் பாலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு,பாலத்தின் கீழே பாயும் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தான்.   அந்த நீரின் ஓசை அவனுக்கு அந்த கிராமத்தில் உள்ள ஒரு உன்னதமான சங்கீத மேதையை நினைவு படுத்தியது. அந்த மேதையின் குரலைக் கேட்டுக் கேட்டேதான் தனக்கு இந்தக் கொஞ்சம் இசை அறிவும் வந்தது என்று நினைத்த பொழுது அவனுக்குக் கண்ணீர் பெருகியது.  கோகுலாஷ்டமித் திருவிழாக்களில் அந்த மேதை பாடுவதைக் கேட்கப் பெரிய வித்வான்கள் எல்லாம் முன் வரிசையில் அமர்ந்திருந்து ரசித்த தெல்லாம் இப்பொழுது பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே.  அவர் குரலில் இருந்த ஈர்ப்பு சக்தியை ஏன் பராசக்தி திரும்ப எடுத்துக் கொண்டாள். அவரிடம், சங்கீதம் தவம் செய்தல்லவா அவரது நாபியில் குடிகொண்டது. தொண்டையில் சங்கீதம் தொலைந்ததில் அவருக்கு வருத்தம் இல்லை. அதைவிட அவருடனேயே இருந்து அவரை விட்டுப் போன சங்கீதம் போலவே அவரது கிராமத்துப் பெரிய மனிதர்களும் அவரைக்கவனிகாம லேயே இருந்ததுதான் மிகவும் வருத்தம் தந்தது. அந்த மேதையின் குரலில் கரகரப்பு வரத்துவங்கிய பொழுதே, அவர் தான் ஒதுக்கப் பட்டதை உணர்ந்து விட்டார். இனி கச்சேரிகள் இல்லை. தெருவில் பாட்டுக் கற்றுக் கொள்ள விரும்பும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்று ஆரம்பித்து, அதுவும் இப்போது ஒன்று இரண்டாகக் குறைந்துபோனது. ஒருநாள் காலையில் சட்டநாதன் அவர் வீட்டு வாசலில் நின்று,"குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா"  என்று தனது கரகரத்த குரலில் பாடியதை கேட்ட அந்த மேதை, தனது வீட்டு வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்து," அப்பா உன்பாட்டக் கேட்டு...என்ன இவன் சங்கீதத்தக் கரகரக் குரலாலேயே கொல்லரானே.... பராசக்தி உனக்கு ஞானம் இல்லையான்னு கேட்டேன்...அவள் எனக்கு பதில் சொல்லிட்டாப்பா... " என்று தழுதழுத்த குரலுடன் அந்தத் தெருப்பாடகன் சட்டநாதனின் அலுமினியத் தூக்கில் தன்னுடைய இரண்டு கைகளாலும் "அக்ஷதையை" அள்ளிப் போட்டு விட்டு இருகை கூப்பி வணங்கினார்.     "சாமி.. நீங்க..பெரிய மேதை ..." ஒங்க ஆசீர்வாதமும் அந்த முருகனும் தந்தது தான் சாமி என்னோட குரலு....தேவைக்கு மேல நான் பிச்சை எடுத்து அத கெடுத்துக்க விரும்பல சாமி.." 

என்று தெருப் பாடகன் அந்த இசை மேதையின் காலின் விழுந்தான். ” நீ சொன்னது ரொம்ப சரி…தேவைக்கு அதிகமா ஆசைப்பட்டுக் கச்சேரி கச்சேரி என்று சங்கீதத்த வைச்சுப் பிச்சை எடுத்ததுனால அந்த அம்பாளே என் குரலை எடுத்துட்டா…நீ பாடறது சங்கீதம்…உன்ன மறந்து நீ பாடற குரல் கரகரப்பா இருந்தாலும் ….அதுதான் அம்பாளுக்குக் “கரஹரப்ரியா”. நீ எடுக்கறது பிச்சை இல்லை…”பிக்ஷை” இதுதான் உஞ்சவிருத்தி….ஒனக்குத் தரது ரொம்பப் புண்ணியம்…” என்று கைகளைக் குவித்து அந்த மேதை விலகி நின்ற பொழுது தெருப்பாடகன் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்” என்று பாடிக்கொண்டே அடுத்த வீட்டின் வாசலுக்குப் போய் விட்டான்.

   தெருப்பாடகன் சட்டநாதன் கையில் இருந்த பீடியின் நெருப்பு அவன் கையைச் சுடும் முன்பே, எதோ ஒரு விழிப்புணர்வுடன் அந்தப் பீடித்துண்டை அந்தக் கன்னடியன் கால்வாய்த் தண்ணீரில் வீசி எறிந்தான்.  அது அந்தத் தண்ணீரின் சுழலில் சிக்கிக் கொண்டு உள்ளேயே போய் விட்டது. இனி பீடி குடிப்பது இல்லை என்றும், எடுப்பது பிச்சை இல்லை "பிக்ஷை" என்றும் அந்த வித்வான் சொன்னதை அவன் நினைத்த படியே அந்த கிராமத்திற்குள் தன்னுடைய கம்பீரக் குரலால் "ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும்" என்று யார் வீட்டின் முன்பும் நிற்காமல் பாடிக்கொண்டே மெல்ல நடந்தபடி தனது "உஞ்சவிருத்தி" யைத் துவங்கினான்.    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe