
எனது இதழியல் வாழ்வில் இருபத்தைந்தாம் ஆண்டில்…
திருச்சி பிசப்பு ஈபர் கல்லூரியில் கணிதமும், கணினி மொழியும், விளம்பரம் & சந்தைப்படுத்தல் பிரிவில் எம்.பி.ஏ.,வும் படித்துவிட்டு… பத்திரிகைத் துறையில் ஓர் அழைப்பின் பேரில் புகுந்து கொள்வது என்பது எதிர்பாராத ‘திடீர் திடீர்’ ரகம் தான்! 99ல் சுந்தரஜோதி ஜி அழைப்பின் மூலம் அப்படித்தான் விஜயபாரதம் மூலம் விஜயம் ஆனது எனக்கு!
அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான்! கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மெடிக்கல் ரெப் என திருச்சி, திருநெல்வேலியில் தலா இரண்டு வருடங்கள் பணியில் இருந்தேன். மார்க்கெடிங் துறையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஒரு குடும்ப நிகழ்வுக்காக சென்னைக்கு வந்த போது… சங்க கார்யாலயத்துக்குச் செல்ல வேண்டும், விஜயபாரதம் கார்யாலயத்துக்குச் சென்று அதன் ஆசிரியரைப் பார்த்துப் பேசி விட்டு வரவேண்டும் என்ற ஆவல். 99 இறுதியில் அப்படித்தான் சேத்துப்பட்டுக்குச் சென்றேன்.
முதலில் விஜயபாரதம் கார்யாலயம் சென்று, அதன் ஆசிரியராக இருந்த சுந்தர ஜோதி ஜியை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, சிறு வயதில் எழுதிவைத்த என் கையிலிருந்த ஒரு கவிதைத் தாளை அவரிடம் கொடுத்தேன். கவிதையின் கருவும், செங்கோட்டை ஊரும் ஜோதிஜிக்கு ரொம்பவே பிடித்து விட்டது. வாஞ்சி மண்ணாச்சே… பாரத மாதா சங்கம் இருந்த ஊரிலேர்ந்து வந்திருக்கே… என்றபடி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். நானும் ஊர்க்கதைகளை சொன்னேன்.
என்ன நினைத்தாரோ… திடீரென… சரிப்பா… நம்ம பத்திரிகைக்கு வேலையா வாயேன்…. இதுவும் ஒரு சங்கப்பணி தான்! நாம சங்கத்துக்காக ஏதாவது வகையில நம் உழைப்பைக் கொடுக்க வேண்டாமா?! உன் எழுத்து ஆர்வத்துக்கும் படிப்புக்கும் உனக்கிருக்கிற நாலேஜ்க்கும் எங்கெல்லாமோ வேலை கிடைக்கும், பெரிய போஸ்ட்க்கெல்லாம் போலாம்… ஆனா இந்த வேலைக்கு வந்தா நல்லா இருக்கும். சம்பளம் ரொம்ப குறைவுதான். ஆனா உனக்கு நல்ல ட்ரெய்னிங் கிடைக்கும். வந்தா குறைந்தது 2 வருசமாச்சும் தொடர்ந்து இருக்கணும். 6 மாசத்திலயே ஓடிடக் கூடாது… என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
நானோ… ஒரு வாரம் முன் தான் CALIDAஆவை திருப்பிப் போட்டால் வரும் ALIDAC ஃபார்மாவில் கும்பகோணம் பகுதியில் சேர்வதற்காக ஆர்டர் பெற்றிருந்தேன். இருந்த போதும், ஜோதிஜியின் வார்த்தையைத் தட்ட முடியாமல் உடனே நான் இங்க வரேன் ஜி என்று சொல்லிவிட்டேன். அதுதான் என் பத்திரிகை வாழ்வின் தொடக்கம். அதற்கு அழகான ஒளி ஏற்றி வைத்தவர் சுந்தர ஜோதி என்ற ஜோதிஜி. 1999-2002 கால கட்டத்தில் விஜயபாரதத்தில் பணி செய்தபடி, அப்போது நான் பெற்ற சம்பளம் ரூ.1,750 தொடங்கி ரூ.2,500 தான். ஆனால் நாமும் ஏதோ ஒரு வகையில் சங்கப்பணி செய்கிறோம் என்ற மன திருப்தி ஏற்பட்டது.
அன்று நான் ஜோதிஜியிடம் கொடுத்த கவிதை உருவான களம்… என் அந்த ஆர்.சி. பள்ளிக்கூட மைதானம்தான்!
1988இல் தென்காசி ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் (அப்போது) 8ம் வகுப்பு பயின்ற நாளில், பள்ளி மாணவர் தலைவராக இருந்து கொடியேற்றிய போது ஏற்பட்ட அனுபவம். அதைத் தொடர்ந்த சிந்தனை. அதை ஒரு கவிதையாக என் டைரியில் எழுதி வைத்திருந்தேன்.
கவிதையின் கரு இதுதான்…! ஓர் அரசியல்வாதி கொடியின் மூவர்ணத்தை இந்து – கிறிஸ்து – இஸ்லாம் என்று பேசிவிட்டுச் செல்கிறார். ஒரு தியாகி, அதை தியாகம்- அமைதி – செழுமை என்று சொல்லிவிட்டு நகர்கிறார். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சிறுவன், கீழே குனிந்து தன் சட்டைப் பையில் பார்க்கிறான். தேசியக் கொடி குண்டூசியால் வருடம் இருமுறை, இரண்டு குத்துப் பட்டு காட்சி அளிக்கிறது… அவன் சிந்தனை இவ்வாறாக விரிகிறது…
சுதந்திர தினக் கொடியேற்றம்…
கொடியின் நிறங்கள்…
பசுமை-செழுமை-இஸ்லாமாம்…
வெண்மை-அமைதி-கிறித்துவமாம்…
காவி-தியாகம்-இந்துவாம்…
குண்டூசிகளால் குத்துப் பட்டும்
சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு
சிரிக்கிது தேசியக் கொடி!
குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.
தேசியக் கொடியும்
அதனால்தானே
கீழே விழாமல் தாங்கி நிற்கிறது?!
குத்துப் பட்டுத்தான்
அந்தத் தியாக நிறமும்
மேலே ஓங்கி உயரப் பறக்கிறது!
தியாகம் மட்டும் இல்லை என்றால்
தேசியம் எங்கே நிலைக்கப் போகிறது!?
குத்துப் பட்டும் சிரிக்கும்
காவியைப்போலே…
வெட்டுப் பட்டும் வேதனைப் பட்டும்
தேசியத்தைத் தாங்கி நிற்பதும்…
இந்திய நாட்டின் இந்துக்களே!
தியாகிகளே!
இது எழுதப் பட்டு சுமார் பத்து வருடம் கழித்துத்தான் விஜயபாரதம் அலுவலகம் சென்ற போது, நேரில் ஜோதிஜியிடம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தேன். அந்தக் கவிதைதான் நான் 99ல் விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியராக பணி செய்யக் காரணமாகவும் இருந்தது.
சிறு வயதில் ஏராளமான கவிதைகள் எழுதி வைத்திருந்தேன். அது எதிலும் பிரசுரமானதில்லை. பத்திரிகைப் பணிக்கு வந்த பின், அந்தக் கவிதை வரிகளையே கட்டுரைகளில் பயன்படுத்தி சுவை கூட்டினேன்.
(இந்த நிகழ்வு குறித்து எழுத்தாளர் மதுமிதா அவர்கள் 2006ல் தொகுத்த ‘நான்காவது தூண்’ என்ற பத்திரிகை ஆசிரியர்கள் குறித்த தொகுப்பு நூலில் குறிப்பிட்டிருந்தார்.)
என்ற போதும்… பத்திரிகைப் பணிக்கு வந்த பின் நான் கவிதைகள் எழுதுவதையே விட்டுவிட்டேன். கட்டுரைகளிலும், பயணக் கட்டுரைகள், ஆலயங்கள், பேட்டிகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகளிலும் கவனம் சென்றதே ஒழிய கவிதைகள் பக்கம் கவனம் திரும்பவேயில்லை!
அதன் பின் இருபதாண்டுகளுக்கும் மேல் இதோ கழிந்துவிட்டது. இடையில் கலைமகள்-மஞ்சரி, விகடன் பிரசுரம்-சக்திவிகடன், தினமணி-இணையம், கல்கி-தீபம் என பெரும் பொறுப்புகளில் ஒரு சுற்று வந்தாயிற்று…!
இந்த நினைவுகளுடனே கடந்த வாரம் விஜயபாரதம் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். புரசைக்கு மாறிய பின் இப்போதுதான் முதல்முறையாகச் சென்றேன். நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஜோதிஜியைப் பார்க்க விரைந்தேன். பழைய நினைவுகளைப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது இருந்த குழு, பார்த்த பணிகள் இப்படி…
ஜோதிஜி பின்னரும்கூட என் வீட்டுக்கு சில முறை வந்திருக்கிறார். என் தாயாரின் கரங்களால் உணவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது நலம் விசாரிப்பார். என்னை இதழியல் துறைக்கு திசைதிருப்பி விட்டவர் என்ற வகையில் அவருக்கு ஒரு நமஸ்காரத்தைச் சொல்லி வந்தேன்.