
ஆலயங்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் என, நீதிமன்றத்தின் உத்தரவைத் திரித்து, தங்கள் நாத்திக எண்ணத்தைச் செயல்படுத்த, ஆத்திக வேடம் பூண்டுள்ளவர்களைக் குழுவினராக நியமித்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் முதல் கூட்டம், திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் மார்ச் 7ம் தேதி இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் கூச்சலும் குழப்பமும் நிலவியதால், ‘தமிழில் குடமுழுக்கு’ சர்ச்சை விஷயத்தில், அவரவர் கருத்துகளை பேப்பரில் கொடுக்கலாம், ஒருவர் பேசியதே போதும் என்று குழுவினர் கூறினர். எனவே, நமது கருத்தை கையெழுத்துடன் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்தோம்!
உள்ளே…
நமது எதிர்ப்புக் கடிதம்

செங்கோட்டை ஸ்ரீராம்
மூத்த பத்திரிகையாளர்
பெறுநர்
ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டுக் குழு
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, நுங்கம்பாக்கம், சென்னை (கூட்டம் – திருநெல்வேலி)
பொருள்: தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பதில் அளித்தல்
விவரம்: கூட்டுக் குழு கருத்துக் கேட்பு கூட்டம் 07/03/2023 பாளையங்கோட்டை, திருநெல்வேலி
வணக்கம்,
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான நான், தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஆன்மிகப் பத்திரிகைகளான சக்தி விகடன், தினமணி – வெள்ளிமணி, கல்கியின் தீபம் இதழ்களில் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்த படியும், கலைமகள், கோபுர தரிசனம், அம்மன் தரிசனம் உள்ளிட்ட ஆன்மிக இதழ்களிலும், சன் டிவியின் தெய்வதரிசனம் உள்ளிட்ட தொடர்களிலும் பல்வேறு ஆலயங்கள் குறித்தும், விழாக்கள், நம் மரபு சார்ந்த நம்பிக்கைகள் குறித்தும், ஆன்மிகத் தகவல்கள் குறித்தும் கட்டுரைகளை எழுதியுள்ளேன். இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் ‘திருக்கோயில்’ இதழின் ஆலோசகர் குழுவிலும் இருந்துள்ளேன்.
இந்த அனுபவத்தின் அடிப்படையிலும், தனிப்பட்ட வகையில் நம் ஆன்மிக மரபு சார்ந்து இயங்குபவன் என்ற வகையிலும் ‘தமிழில் குடமுழுக்கு’ என்ற சர்ச்சையான விஷயத்தில் எனது கருத்தைப் பதிவு செய்கிறேன்.
நான் தமிழகத்தில் பயணம் செய்து எழுதியுள்ள, பதிவு செய்துள்ள கோயில்கள் அனைத்துமே, ஏதோ ஒரு வேத ஆகமத்தின் அடிப்படையில் அமைந்தவையே! எங்குமே தமிழ் ஆகமம் என்ற ஒன்றையோ, அதன் அடிப்படையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிருறது என்ற சொல்லையோ நான் கேட்டதில்லை. சைவ, வைணவ ஆலயங்களில், கோயில்களின் அமைப்பு, சந்நிதிகளின் அமைப்பு, பூஜைகள் நடைபெறும் விதம், குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) மற்றும் புனித நன்னீர்த் தெளிப்பு (சம்ப்ரோக்ஷணம்) வைபவம் ஆகியவை குறித்து தெளிவாக, இன்னின்ன செய்ய வேண்டும் என்று முன்னோர் வகுத்து, எழுதியுள்ளனர். இவற்றில் சைவாகமம் இறைவன் சிவனே கொடுத்தது என்றும், வைகானச ஆகமம் விஷ்ணுவின் அம்சமான விகனசாச்சாரியார் அளித்தது என்றும், பாஞ்சராத்ர ஆகமம் ஐந்து இரவுகளில் முனிவர்க்கு விஷ்ணுவே அளித்தது என்றும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. நம்பிக்கையின் அடிப்படையில் முன்னோர் வழிவழியாகக் கடைப்பிடித்து வந்த மரபிலும், காதுகளில் கேட்டு வாய் மூலம் தகுந்த அனுஷ்டானங்களுடன் குரு சீட உறவு முறையில் உச்சரித்து உருப்போட்டு வந்த வேத மந்திரங்கள் அடிப்படையிலும் கோயில்களின் பூஜை நடைமுறைகள் அமைகின்றன. அவ்வாறே குடமுழுக்கு வைபவங்களில் யாக குண்டங்கள் அமைப்பது, எந்த தேவதைகளை எவ்வாறு அழைத்து திருப்தி செய்து கோயிலில் சாந்நித்யம் ஏற்படுத்துவது போன்றவைகளை ஆண்டாண்டு காலமாக தவம் செய்து இயற்கை சக்தியை தங்களுள் உள்வாங்கிக் கொண்ட ரிஷிகளும் முனிவர்களும் அமைத்துத் தந்து வழிகாட்டியுள்ளார்கள். எனவே இந்த மரபுகளை மீறி புதிதாக நடைமுறைகளை உருவாக்க இந்தக் காலத்தினராம நாம் எவரும் தவசீலரோ, அல்லது நெறியுடையோரோ, ஆன்மிக அறிவாளிகளோ அல்லர் என்பதால், அரசுத் துறையின் இந்த ‘தமிழாக்க’ முயற்சியை நிறுத்திக் கொண்டு, ஆக்கபூர்வமான வேறு தமிழ்ப் பணிகளில் கவனம் செலுத்தலாம்.
பக்தர்களுக்கு புரிய வேண்டும் என்ற மொழியில் நடத்தப்பட வேண்டும் என்றால், இப்போது கும்பாபிஷேகம், மற்றும் பூஜைகளின் போது எதற்காக இதைச் செய்கிறோம் என்ற தமிழ் மொழி விளக்கத்தை பக்தர்களுக்குப் புரியும் வகையில் சிவாசாரியார்களோ, பட்டாச்சாரியார்களோ ஒலிபெருக்கி மூலம் குடமுழுக்கு வைபவங்களில் கட்டாயம் சொல்ல வேண்டும் என்று விதிக்கலாம். கிரியைகள் மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. காலங்காலமாகக் கேட்டு உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ள மந்திரங்களை நாம் எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாது. இந்த நாட்டில் வேறு எந்த மொழியிலும் இவ்வாறு குடமுழுக்கு வைபவங்களை அவரவர் மொழியில் மொழிபெயர்க்குமாறு யாரும் கோரவில்லை. அது இயலாது என்பதால்..!
நோய்க்கு மருந்து நாடி மருத்துவரிடம் செல்பவன், பரிந்துரைக்கும் மருந்தை நம்பிக்கையின் படி பெற்று உண்பானே தவிர, மருந்தின் மூலக்கூறுகளை தனக்குப் புரியும் மொழியில் அக்குவேறு ஆணிவேறாக மருத்துவர் சொல்லி, அதில் தனக்கு நம்பிக்கை வந்தால் மட்டுமே உண்பேன் என்று அடம்பிடிக்க மாட்டான். எனவே ஆட்சியாளரின் ‘நாத்திக’ அரசியல் நடைமுறைப்படுத்தலை, ‘ஆத்திக’ பக்தர்களின் பேரைச் சொல்லி செயலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
படிவம் எதற்காக..? யாருக்காக..?
எனினும் இந்தக் கூட்டத்தில், கருத்துக் கேட்புக் குழுவினர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டு வந்ததுபோல, தமிழில் குடமுழுக்கு நடத்தப்படலாமா வேண்டாமா என்ற கருத்தை முதலில் கேட்காமல், தமிழில் குடமுழுக்கு நடத்திய உங்கள் அனுபவம் என்று சிவாச்சாரியார்களுக்குக் கேட்பது போல் ஒரு படிவத்தை வழங்கினார்கள். ஆனால், கருத்துக் கேட்புக் கூட்டம் என்று, பொதுமக்கள், பக்தர்கள், ஆன்மிக தலைவர்கள் ஆர்வலர்கள் என அனைவரையும் அழைத்தார்கள். அவர்கள் எவ்வாறு தமிழில் குடமுழுக்கு நடத்தியதாகத் தங்கள் அனுபவத்தைக் குறிப்பிட முடியும்?! அவர்களுக்கு இந்தப் படிவம் எவ்வகையில் உகந்ததாக இருக்கும்?! எனவே பலரும் இந்தப் படிவத்தை வாங்கிக் கிழித்து எறிந்தார்கள். அந்தப் படிவம்…

மிரட்டப்பட்ட கோயில் பணியாளர்கள்
இந்தக் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு கோயிலில் பணி செய்யும் அர்ச்சகர்கள், சிவாசாரியார்கள், ஓதுவார்களை அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கட்டாயப் படுத்தியிருந்தனர். ஒருவர் குறைந்தது பத்து பேர்களையாவது அழைத்துக் கொண்டு கூட்டத்துக்கு வர வேண்டும் என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு ஊரில் இருந்தும் வேன்கள் மூலம் இந்தக் கூட்டத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டது. வந்தவர்கள் காலை நேர உணவும் கூட்ட அரங்கத்துக்கு வெளியே ஏற்பாடு செய்யப் பட்டது. இப்படி எழுத்துபூர்வமான மிரட்டல் விட்டதற்கான செயல் அலுவலர்கள்/ அதிகாரிகளுக்கான இணை ஆணையரின் கடிதம்…

நீதிமன்றம் கூறியது என்ன? சுகி சிவம் அதைக் கூறாமல் விட்டது ஏன்?

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று, கூட்டத்தைத் தொடங்கி வைத்து சுகி சிவம் பேசினார். அப்போது அவர், 19115 / 2020 எண் கொண்ட வழக்கில், கிருபாகரன், புகழேந்தி என்ற இரு நீதிபதிகள் கொண்ட மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பில், கருத்துக் கேட்புக் கூட்டம் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதாவது, அந்தத் தீர்ப்பின் 16 மற்றும் 17 வது பாய்ண்ட்களை மட்டும் வாசித்துக் காட்டி, அவற்றின் அடிப்படையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாகப் பேசினார். ஆனால், தீீர்ப்பின் 16 மற்றும் 17 வது பாயின்ட்டுகளில் எங்குமே பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என சொல்லப்படவில்லை.
எனவே, தன்னை நேர்மையாளர் என்று அடிக்கடி தானே புகழ்ந்து கூறிக் கொள்ளும் சுகி சிவம், அறநிலையத் துறையின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றதற்கு கைம்மாறாக, தீர்ப்பில் சொல்லப்படாத கருத்தை மேடையில் சொல்வது எந்த வகையில் நேர்மையாகும்? அவர் இதற்கு விடையளிப்பாரா? என்று கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்ட experts மற்றும் stake holders என்ற வார்த்தைகளுக்கு உண்மையான பொருள், சுகி சிவம் சொல்வது மட்டும் தானா? அப்படி எனில், இவர் எந்த வகையில் கோயில் கிரியைகள், கட்டுமானங்கள், வழிபாடுகள் போன்றவற்றில் வல்லுநர் ஆகிறார்? அதற்கான சான்றுகள் வைத்துள்ளாரா? இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இவரது பங்களிப்பு என்ன? தீர்ப்பின் 17 வது பாயின்ட்டில் சொல்லப்பட்ட along with sanskrit verses என்ற முக்கியமான வார்த்தையை அமுங்கிய தொனியில் சொன்னது ஏன் என்று கேள்வி எழுப்பிய சிலர், “இது கருத்துக் கேட்புக் கூட்டம் அல்ல; கருத்துத் திணிப்புக் கூட்டமே!” என்று கூறினர்.
சுகி சிவத்துக்கு எழுந்த கடும் எதிர்ப்பு

தமிழில் குடமுழுக்கு குறித்த இந்து சமய அறநிலையத்துறையின் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுகி சிவத்துக்கு, இந்துமுன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினரும், பாஜக.,வினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னதாக கூட்டம் தொடங்கிய போது, “இந்து சமய அறநிலைத்துறை நடத்தும் நிகழ்ச்சியில், மேடயில் சுவாமி திருவுருவப்படங்களே இல்லை.. என்ன நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்?” என இந்துமுன்னணியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். சிறிது நேரம் சலசலப்பிற்கு பின்பு சுவாமி படம் மேடைக்குக் கொண்டு வந்து மாட்டப்பட்டது.
சுகிசிவம் பேசும்போது, “நீங்கள் இந்து அமைப்பினர் குரல் கொடுத்தால் நாம் தமிழர் கட்சியினர் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுப்பார்கள்” என்று கலகத்தை மூட்டுவது போலப் பேசினார். இதனால் கடுப்பான இந்து அமைப்பினர், தங்களது கடுமையான ஆட்சேபத்தை வெளிப்படுத்தி, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சுகி சிவத்தின் ஆன்மிக விரோத, ஆலய விரோதக் கருத்துகளுக்காகவும், முறையற்ற நபர் இந்தக் குழுவில் இருந்து கொண்டு, கலகத்தை மூட்டி விட்டதற்காகவும்தான் சுகி சிவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக, அங்கிருந்தவர்கள் கூறினர்.

பாதியிலேயே நிறுத்தப்பட்ட
கருத்துக் கேட்புக் கூட்டம்!
கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், மேடையில் தொடர்ந்து யாரும் பேச இயலவில்லை. அதனால், கூட்டத்துக்கு வந்திருந்த இந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் பாஸ்கர் கௌசிகன் என்ற நபர் பேசினார். அவர் பேசும் போதும், ஆளும் தரப்பினரால் செட் செய்யப்பட்டு, ஒன்று போல் விபூதி பூசப்பட்டு, மேக்கப் போடப்பட்டு கூட்டத்துக்கு அழைத்து வரப் பட்டிருந்த சிலரும், சுகி சிவம் குறிப்பிட்ட நாம் தமிழர் கட்சியினரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
இதனால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், அவரவர் எதிர்ப்புகளை, கருத்துகளை தபாலில் அனுப்புங்கள் என்றும், கூட்டத்திற்கு தலைமை வகித்த தவத்திரு பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார். இதனையடுத்து இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தப் பட்டது.