“இந்தியக் கலாசாரத்தை உலகம் அறிய, நம் இலக்கியங்களை மொழிபெயர்க்க வேண்டியது அவசியம்; கலைமகள் இதழ் டிஜிட்டல் வடிவில் உலகமெங்கும் சென்றடைய வேண்டும்” என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், புதுச்சேரி ஆரோவில் பவுண்டேஷனின் செயவருமான ஜெயந்தி ரவி பேசினார்.
‘கலைமகள்’ இதழின், 93வது ஆண்டு விழா. எழுத்தாளர்களுக்கு, ‘கலைமகள்’ விருது வழங்கும் விழா, ‘தாமிரவருணி கேள்வி பதில் நூல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் ஜன.7 ஞாயிறு அன்று நடைபெற்றன.
எழுத்தாளர்கள் மாலன், சுரேஷ் -பாலா, லக்ஷ்மி ரமணன் ஆகியோருக்கு கலைமகள் விருதுகளை வழங்கி, முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஜெயந்தி ரவி பேசியதாவது:
தமிழ் இலக்கியம், வாழ்வியல் நெறிகளை மக்களுக்குச் சொல்ல, ஓர் இதழைத் தொடங்க வேண்டும் என, நாராயணசாமி அய்யர் விரும்பினார். அதன் விளைவாக, பழமையான தமிழ் இலக்கியச் சுவடிகளை தேடித்தேடி கண்டறிந்த உ.வே. சாமிநாத ஐயர் ஆசிரியராகப் பொறுப்பேற்க, கலைமகள் இதழ் வெளியானது. அதில் தான் பிச்சமூர்த்தி, அகிலன் உள்ளிட்டோர் எழுதினார்கள். பாரதியின் முதல் கையெழுத்து கவிதையும் அதில்தான் வெளியானது. அப்படிப்பட்ட கலைமகள் இதழில்தான், மதிப்பு மிக்க இந்திய ஆன்மிகமும், கலைகளும் சொல்லும் சிறுகதைகள் வெளியாகின. அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால், பிற நாட்டினரும் உணர வசதியாக இருக்கும். கலைமகள் இதழ் நவீன காலத்துக்கு ஏற்ப, டிஜிட்டல் வடிவில் மேலும் உலகமெங்கும் சென்றடைய வேண்டும் என்ற ஆசையை இங்கே வெளிப்படுத்துகிறேன்” என்று பேசினார்.
கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பேசியதாவது:
‘தினமணி’ நாளிதழின் ஆசிரியரும், என் தாத்தா உறவுமுறையினருமான ஏ.என்.சிவராமன்தான், என் எழுத்துக்குப் பின் புலமாக இருந்தார். கலைமகளில் அன்றைய காலங்களில் ஆசிரியராக இருந்த கி.வா.ஜகந்நாதன் இலக்கியக் கேள்விகளை எழுதிய விடையவன் பதில்கள் என்ற பகுதி மிகப் பிரபலம். அதன் பின், நான் ஆசிரியராகப் பொறுப்பேற்று, கேள்வி பதில் பகுதியைத் தொடங்க ஆலோசித்த போது, கேள்வி பதில் பகுதியில் ஒரு தனித்துவம் வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்படி, வாசகர்களின் கேள்விக்கு பதில் சொல்வதுடன், அந்த பதிலுடன் சேர்து உபரி தகவல் சொல்வதை வழக்கமாக்கினேன். அதென்ன கேள்வியும் பதிலும் தாமிரபரணி? என்று நண்பர் பிரபுசங்கர் ஒருமுறை கேட்டார். தமிழகத்தின் வற்றாத நதி தாமிரவருணி; அதைப்போல இதுவும் தொடா வேண்டும் என்பதால், இதே பெயர் இருக்கட்டும் என்றார் ஏ.என்.சிவராமன். அதனால்தான். தாமிரவருணி கேள்வி பதில் என்று தலைப்பிட்டேன். இதன் முதல் தொகுதி தற்போது வெளி வந்துள்ளது. இன்னும் 10 தொகுதிகள் வெளிவரும் என்று பேசினார்.
அறிஞர் பட்டாளமே ஆசிரியர் குழுவாய் இருந்த கலைமகள் இதழின் ஆசிரியராக உள்ள, கீழாம்பூர் சங் கர சுப்பிரமணியன், சர்க்கஸ் கயிற்றில் ஒற்றை சக்கர வண்டியை ஓட்டுவது போல பழமையையும், புதுமை யையும் இணைத்து, மிக கவனமாக இதழை நடத்துகி றார். ‘திருக்குறள் களஞ்சியம்” உள்ளிட்ட நுால்களை எழுதிய அவர், ‘தாமிரவருணி கேள்வி பதிலை’யும் எழுதி உள்ளார்; அவருக்கு பாராட்டுகள். நான் பெற்ற இந்த விருதை, இதழியலாளர் மற்றும் எழுத்தாளராக வெற்றி பெற்ற பாரதி உள்ளிட்ட அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். என்றார் விருதைப் பெற்றுக் கொண்ட மாலன்!
கலைமகள் விருதைப் பெற்றுக் கொண்டு மாலன் ஆற்றிய ஏற்புரையில் தெரிவித்ததாவது…
கலைமகள் என்பது வெறும் பத்திரிகையல்ல, அது ஓர் அறிவியக்கமாகத் தோன்றியது. கலைமகளின் தொடக்க கால ஆசிரியர் உ.வே.சா. அவரது முயற்சிகள் இல்லை என்றால், இன்று, நாம் தமிழ் உலகின் தொன்மையான மொழி என்று ஊரெல்லாம் முழக்கித் திரிவதற்கு முகாந்திரமே இல்லாமல் போயிருக்கும்.
அதன் ஆரம்பகாலத்தில் கலைமகளுக்கு ஓர் ஆசிர்யர் குழு இருந்தது. அதில் இடம் பெற்றவர்கள் எல்லோரும் தத்தம் துறைகளில் பேராளுமை கொண்ட அறிஞர்கள். விவரங்களைச் சொல்லப் போவதில்லை. பெயர்களை மாத்திரம் சொல்கிறேன். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை, ராகவய்யங்கார், பெ.நா. அப்புசாமி, பிஸ்ரீ, கா.ஸ்ரீ ஸ்ரீ. இதில் எனக்கு ஒரு சொல்ப சந்தோஷம், அல்ப சந்தோஷமல்ல, சின்ன சந்தோஷம் உண்டு. இவர்களில் பெரும்பாலானோர் திருநெல்வேலிக்காரர்கள். அவர்கள் தங்களது எழுத்துக்களால் தாங்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அதற்கு அடுத்து வந்த தலைமுறைகளிலும் தாக்கம் செலுத்தினார்கள். கே. ஏ. நீலகண்டசாஸ்திரியில் உள்ள கே கல்லிடைக்குறிச்சியைக் குறிக்கிறது. அவர் தாமிரபரணி தந்த தனயன். ஆனால் அவர் இல்லை என்றால் பொன்னியின் செல்வன் இல்லை. அவரது இம்பீரியல் சோழாஸ் மற்றும் சதாசிவப் பண்டாரத்தார் நூல்களை அடிப்படையாகக் கொண்டே கல்கி தனது பாத்திரங்களை உருவாக்கினார். அண்மையில் அமைச்சர் நிர்மலா சீதாரமன் பத்ரி பதிப்பித்த நூல் வெளியிட்டு விழாவில் தனக்கு திருப்பாவை அறிமுகமானது பிஸ்ரீயின் நூலின் மூலமாக எனச் சொன்னார்.
அறிவியக்கமாக மலர்ந்த இதழில் இலக்கிய மணத்தைச் சேர்த்தவர் கி.வா.ஜ. அப்பாவின் நண்பராக அவர் சிறிய வயதில் எனக்கு அறிமுகமானார். 1960 களின் தொடக்கமாக இருக்கலாம். மதுரையில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதற்கு கி.வா.ஜ. ஆர்.வி. தி,ஜ.ர, அகிலன், சுகி சுப்ரமணியம் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்பா கி.வா.ஜவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். அவர்கள் வரும் நேரம் எனக்கும் என் சகோதரனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. என் சகோதரன் எப்போதுமே வாதத்தில் மல்லுக்கட்டமாட்டார். நானோ பிடித்த முயலுக்கு மூணே கால் அல்ல முணேகால் கால் என விடாக் கண்டன். அவர்கள் இருவரும் வந்ததும் என் பேச்சு நின்று விட்டது. ஆனால் என் குரல் உயர்ந்ததை கி.வா.ஜ கேட்டிருந்திருக்க வேண்டும். அருகில் வந்து முதுகில் வாஞ்சையோடு சாந்தப்படுத்துவது போலத் தடவிக் கொடுத்தார். அப்பா ஆட்டோகிராஃப் வாங்கிக்கோடா என்றார். நான் என் ஆட்டோகிராப் புத்தகத்தை நீட்டினேன். “இன்சொல்லால் உலகத்தை வெல்லலாம்” என்று எழுதிக் கையெழுத்திட்டார். எனக்கு அது ஒரு திறப்பு. வாதத்தில் வெல்ல வேண்டுமானால் குரலை உயர்த்த வேண்டியதில்லை என அன்று புரிந்தது.
கலைமகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடினமான பணியை கீழாம்பூர் செய்து வருகிறார். விழுமியங்கள், ரசனை, வாசிப்பு என்பது மாறிவிட்ட காலத்தில் தரத்தைக் கைவிடாமல் பத்திரிகை நடத்துவது அத்தனை எளிதல்ல. அது ஒற்றைச் சக்கர சைக்கிள் ஓட்டுவது போன்றது. அதை அவர் 27 வருடங்களாகச் செய்து வருகிறார்!
எனக்கு சர்வதேச விருது, இந்திய அளவிலான விருது , இலக்கிய அமைப்புகளின் விருது எனச் சில விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த விருதை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த விருதாகக் கருதுகிறேன். காரணங்கள் மூன்று. எனக்கு ஆசான், நண்பன், விமர்சகன் எல்லாம் பாரதிதான். பாரதியினுடைய அதுவரை வெளிவராத கவிதைகளை முதலில் வெளியிட்ட பெருமை கலைமகளினுடையது. 1966 கலைமகள் தீபாவளி மலரில் பாரதியின் சகோதரர் விஸ்வநாதன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் அதில் அதுவரை வெளிவராத பாரதியின் காதலும் துறவும் என்ற கவிதையை வெளியிட்டிருந்தார். பெ.தூரன் பாரதியின் படைப்புக்களை நூலாகக் கொண்டு வந்த போது சிலவற்றை ‘கலைமகளில் பிரத்யேகமாக வெளியானது’ எனக் குறிப்பிட்டிருந்தார்
என் முதல் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதியவர் தி.ஜானகிராமன். தி.ஜா. தனது ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட இலக்கியப் பயணத்தில் ஐந்து பேருக்குத்தான் முன்னுரை எழுதியிருக்கிறார். இருவர் அவரது நெருங்கிய நண்பர்கள். எம்.வி.வி, ஆர்.வி. இருவர் அவரது சக தில்லி வாசிகள். இ.பா, ஆதவன். ஐந்தாவதாக இது எதிலும் இல்லாத நான். அந்த முன்னுரையில் தி.ஜா. என்னுடைய ஒரு கதையைப் படித்துவிட்டு சிலிர்த்துப் போய் சில வரிகள் எழுதியிருந்தார். “இது சென்டிமெண்டாலிட்டி என்று எள்ளப்படுகிற பேதைத்தனமல்ல. உண்மையை அழகை தரிசிக்கும் போது ஆளையே வேரோடு ஆட்டுகிற ஒளியாட்டம். நல்ல சங்கீதத்தைக் கேட்கும் போது ஊழிக்கூத்தைப் பாரதியார் பார்க்கும் போது, நந்திதேவனை, கவச குண்டலங்களைப் பிய்த்துக் கொடுத்த கர்ணனைப் பார்க்கும் போது ஏற்படும் தரிசனம் ஒளி உதயம்” என்று எழுதியிருந்தார். என்னுடைய முதல் நாவல் வெளியான போது வெளியான மறுநாள் தில்லியிலிருந்து, ‘ அருமையாக வந்திருக்கிறது. ஞாபகத்தை தூங்க அடிக்காமல் இருப்பதுதான் நல்ல எழுத்து. அதனால்தான் இது நல்ல படைப்பு” என்ரு கடிதம் எழுதினார்.
அந்த தி.ஜா தன் வாழ்நாளில் மொத்தம் 122 கதைகள் எழுதினார். அவர் அதிகம் கதைகள் எழுதிய பத்திரிகை கலைமகள். கலைமகளில் 25 கதைகள் எழுதினார். அதற்கு அடுத்தபடியாக கல்கியில் 22. ஆனந்த விகடனில் 20.
பத்திரிகைகளில் பெரிய பத்திரிகை சிறிய பத்திரிகை என்றெல்லாம் கிடையாது. நல்ல பத்திரிகை மோசமான பத்திரிகைதான் உண்டு என்று திஜா சொல்வார். நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இலக்கியச் சிற்றேடுகள் தபாலில் வரும். அவற்றில் சட்டென்று புரியாத மார்டன் ஆர்ட் அட்டையிலும் உள்ளும் இடம் பெற்றிருக்கும். அட்டையை நோட்டுப்புத்தகத்திற்குப் போடுகிற பிரவுன் காகிதத்தில் அச்சடித்திருப்பார்கள். அதைப் பார்த்த அம்மா, ஏண்டா, எழுதறதுதான் எழுதற, நல்ல பத்திரிகையில் எழுதக் கூடாதோ என்பார். நல்ல பத்திரிகை என்றால் என்னம்மா என்றால் கலைமகள், கல்கி என்பார்.
இந்த விருதை இந்த மூவரும் சேர்ந்து அளிக்கும் ஆசிர்வாதமாகக் கருதி நெகிழ்கிறேன். நான் எனக்கு கிடைத்த விருதுகள் எல்லாம், எனக்கு அளிக்கப்பட்டவை அல்ல, , அருளப்பட்டவை எனக் கருதுவது வழக்கம். அவை என் மொழிக்கு, அதன் மரபிற்கு, அதைச் செழுமைப் படுத்திய என் முன்னோடிகளுக்கு அளிக்கப்பட்டவை, அவர்கள் சார்பில் அதை நான் பெற்றுக் கொள்கிறேன் என்று கருதுகிறவன். அதனால் அவற்றை அவர்களுக்கு சமர்பிப்பது வழக்கம்.
எனக்கு பாரதிய பாஷா பரிஷத் விருது அளிக்கப்பட்ட போது, அதை தங்கள்து மொழியில் எழுதிய போதிலும் பிற இந்திய மொழிகளில் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் என்று தாகூருக்கும், பங்கிம் சந்திரருக்கும் அர்ப்பணித்தேன். சாகித்ய அகாதெமி பரிசை மொழிபெயர்ப்பு மொழியாக்க முன்னோடிகள் கம்பன், பாரதி, த.நா. குமாரசாமி, கா.ஸ்ரீஸ்ரீ உள்ளிட்டவர்களுக்கு அர்ப்பணித்தேன். ‘உரத்த சிந்தனை’ வாழ்நாள் சாதனை விருது அளித்த போது வாழ்நாள் முழுதும் எனக்கு உறுதுணையாக இருந்து வரும் என் சகோதரருக்கு அர்ப்பணித்தேன்.
இலக்கியம் பத்திரிகை என இரு குதிரைகளில் பயணித்த என் முன்னோடிகளின் பட்டியல் பாரதி, திரு.வி.க, எனத் தொடங்கி, கல்கி, சி.சு..செல்லப்பா, பி.எஸ்.ராமய்யா, க.நா.சு, கஸ்தூரிரங்கன், நா.பா என விரிந்து இன்று வரை கீழாம்பூர் ,திருப்பூர் கிருஷ்ணன் எனத் தொடர்கிறது. இந்த விருது அவர்களுக்கு உரியது. இதை அந்த முன்னோடிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.. என்றார் மாலன்.
ஏற்புரை நிகழ்த்திய சுபா – இரட்டை எழுத்தாளர்களில் ஒருவரான சுரேஷ் பேசியபோது,
நான் மாணவனாக இருந்த போது, கலைமகள் குழுமத்தின் கண்ணன் இதழ் அறிமுகமானது. அதில், கதைகளைப் படித்த நான், அதற்கே என் கதைகள் அனுப்பினேன்; அவை பிரசுரமாகின. நான் எழுத்தாளரானேன். கல்லுாரியில், எழுதுவதில் ஆர்வம் உள்ள பாலகிருஷ்ணன் நண்பரானார். இருவரும் இரண்டு கதைகளை ஒரு பரிசுப் போட்டிக்கு அனுப்ப இருந்தோம். எங்களுக்குள் போட்டி வரக்கூடாது என்பதை உணர்ந்து, சுரேஷ், பாலகிருஷ்ணன் என்பதன் முதல் எழுத்துகளை வைத்து, ‘சுபா’ என்று மாற்றி அனுப்
பினோம்; பரிசு கிடைத்தது. இப்போது வரை, நாங்கள் இரட்டை எழுத்தாளர்களாக தொடர்கிறோம்…
‘நானும் எழுத்தும்’ என்ற சமூக வலைத்தளத் தொடரில் என் முதல் கதையைப் பதிப்பித்து, பத்தாம் வகுப்பிலேயே என்னை எழுத்தாளனாக அங்கீகரித்த ‘கண்ணன்’ பத்திரிகை பற்றி எழுதியது குறித்து தெரிவித்தேன். கண்ணன் பத்திரிகை மூலமாக அன்றே எனக்குப் பெருமை சேர்த்த கலைமகள் குழுமத்தின் இன்னொரு கருணை இன்று எனக்கு அருளப்பட்டது. பாரம்பரியம் மிக்க கலைமகள் தனது 93-ஆம் ஆண்டில் எனக்கும் பாலாவுக்கும் – சுருக்கமாக சுபாவுக்கு – கலைமகள் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. ” என்று குறிப்பிட்டார்.
“நான் பிரமித்த கலைமகளில், நானும், ‘தாய்பசு, போட்டி சித்திரம் உள்ளிட்ட கதைகளை எழுதினேன். அதிலிருந்து விருது பெறுவது சந்தோஷம்,” என்றார் பாலகிருஷ்ணன் என்ற பாலா.
எழுத்தாளர் லஷ்மி ரமணன் பேசுகையில், “கலைமகள் இதழில் எழுதுவதும், விருது பெறுவதும் பெருமை; அது கிடைத்துள்ளது. நன்றி,” என்றார்.