― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்செங்கோட்டை ஆவுடையக்காளின் வேதாந்த ஆச்சே போச்சே!

செங்கோட்டை ஆவுடையக்காளின் வேதாந்த ஆச்சே போச்சே!

- Advertisement -
avudaiakkal

செங்கோட்டை ஆவுடையக்காளின் பாடல் தொகுப்பில் இருந்து இந்த “வேதாந்த ஆச்சே போச்சே” பாடலை பொருள் புரிந்துணரும் வகையில் பதம் பிரித்து இட்டிருக்கிறேன்.

“போனதும் வந்ததும்” என்று இதனைக் கொள்ளலாம். ஏதாவது ஒன்று வெளியே போனால், அதனை ஈடுகட்ட அல்லது அதனினும் மகத்தான ஒன்று உள்ளே வந்து விடும். இது வெற்றிட நிரப்பல் போல் காலத்தால் அமைவது. இயற்கையாய் அமைத்துத் தருவது. போக வேண்டியதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு போகவிடாமல் காலம் தள்ளிச் சென்றால், வருகின்ற மேன்மையானது வராமல் போகும்.

இது இயற்கை நியதி. என்னால்தான் இது நடக்கிறது என்று ஒருவன் மமதை கொண்டு செல்வானேயானால், அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவன் மமதைக்கு மருந்தாகி வேறொருவனை இயற்கை அங்கே நிரப்பி விடுகிறது. பூர்ணமதப் பூர்ணமிதம் பூர்ணாத்… எனும் வாக்கின்படி, ஒரு பூரணத்துவத்தில் இருந்து ஒன்றை எடுத்துவிட்டால், அந்தப் பூரணத்துவத்துக்கு இழப்பு ஏதும் ஏற்படாது. பூரணமாகவே இருக்கும். இதனை கணிதம் இன்ஃபினிட்டி என்கிறது.

முடிவற்ற ஒன்றில் இருந்து ஒரு சிறு துளியை அப்புறப்படுத்துவதால், முடிவற்ற பொருளுக்கு குறைவு ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால், மனித வாழ்க்கையில், ஒன்றின் இழப்பு மற்றொன்றின் வரவுக்கு வழி ஏற்படுத்தும். இதனையே அச்சே போச்சே என்று செங்கோட்டை ஆவுடையக்காள் பாடலாகக் குறிப்பிடுகிறார்.

இந்த ஆச்சே போச்சே விவகாரம், உலகியல் வாழ்க்கைக்கு உண்டான பொருளியல் சார்ந்த லௌகீக “வந்ததும் போனதும்” ஆக இல்லாமல், ஆன்மிக ஞானத்துக்கு உண்டான ஆச்சே போச்சே ஆகத் திகழ்கிறது.

ஆவுடையக்காளின் வேதாந்த ஆச்சே போச்சேயில் இருந்து எது போனது எது வந்தது என்பதை படித்து உணர்ந்து அறிந்தால், வேதாந்தமான, அத்வைத பரமான சிந்தனை உள்ளே தலைதூக்கும்.

(நான் விசிஷ்டாத்வைத மார்க்கத்தை ரசித்து ஏற்று, அழகியலை, ஸத்வ குணத்தை ஆராதித்து அனுபவிப்பவனாயினும், ஆவுடையக்காளின் சிறப்பை உணர்த்துதற்காய் இதனை வெளிப்படுத்துகிறேன்… ஆவுடையக்காள் இதில் 29 இருவரிக் கவிதையாக இதனைப் படைத்துள்ளார். கடைசியில் ஒரே ஒரு ‘இரு வரி’ வார்த்தைகளைச் சேர்ந்து 30 ஆக முடித்திருக்கிறேன்.

இந்த 30வது இரட்டை வரி அடியேன் சிறுமதிக்கு எட்டிய வரிகள். 30 ஆக முழுமை பெறட்டும் என்பதால் சேர்த்து வைத்தேன்.)
~~~~~~

வேதாந்த ஆச்சே போச்சே

ஆதி அந்தம் அற்ற ஆசாரியர் கிருபையினாலே ஆனதும் போனதும் அன்பாகச் சொல்வேன் கேட்பாய்! 1

ஆசைக் கயிற்று ஊஞ்சல் ஆடித் திரிந்ததும் போச்சே அசஞ்சலம் ஆன அகண்ட ஸ்வரூபம் ஆச்சே! 2

ஆண் என்றும் பெண் என்றும் அலைந்து திரிந்ததும் போச்சே… அசையாமல் ஞான ஸ்தலத்தில் இருக்கவும் ஆச்சே! 3

அனந்த ஜன்மத்திற்கு அடியிட்டு இருந்ததும் போச்சே… அனந்த ஜன்மங்களும் இல்லாது இருக்கவும் ஆச்சே! 4

அந்தகனாலே அதட்டி பயந்ததும் போச்சே… அவஸ்தை மூன்றுக்கு அப்புறப்பட்டவனும் ஆச்சே.! 5

அகங்கார துக்கம் அசூயை இடும்புகள் போச்சே… தூங்காமல் தூங்கி சுகமாய் இருக்கவும் ஆச்சே! 6

ஆறு குளங்களும் ஆடித் திரிந்ததும் போச்சே… அதுவே வடிவாய் திடமாய் இருக்கவும் ஆச்சே! 7

அலையில் துரும்பு போல் அலைந்து திரிந்ததும் போச்சே… அசையாத பருவதம் போலே இருக்கவும் ஆச்சே! 8

ஜன்ம இந்திரியங்கள் ஜரையும் தொடர்ந்ததும் போச்சே… ஜகம் எல்லாம் சித்து மயமாய் இருக்கவும் ஆச்சே! 9

தான் பிறர் என்கிற தாழ்த்தி உயர்த்தியும் போச்சே… சாஸ்திர வேதத்திற்கு அப்புறப்பட்டவன் ஆச்சே! 10

நாம ரூபம் நாம் என்ற பேர் எல்லாம் போச்சே… நான்முகனாலே அறியப் படாதவன் ஆச்சே! 11

நீரில் குளித்ததும் நீரில் களித்ததும் போச்சே… நித்திய நிர்மல ஸ்வரூபமே நான் என்பது ஆச்சே! 12

ஸ்தாவர ஜங்கமம் ஸத்தியம் என்பதும் போச்சே… ஸகல லோகங்களுக்கும் சின்மாத்திரம் மிச்சமது ஆச்சே! 13

பசிக்கு இரை தேடி பண்ணும் உபாயங்கள் போச்சே… பவ்யங்களுக்கு உள்ளதும் தானே வரும் என்பதும் ஆச்சே! 14

என்ன செய்வோம் என்று ஏக்கம் பிடித்ததும் போச்சே… ஏதேது வந்தாலும் எல்லாம் ஸ்வபாவமும் ஆச்சே! 15

காம குரோதாதிகள் காயக் கிலேசங்கள் போச்சே… காலத் திரயத்திலும் காணாத இன்னவன் ஆச்சே! 16

லோகாதி லோகங்கள் எனக்குள் இருந்ததும் போச்சே… ஒன்றும் இல்லை என்று தானாய் இருக்கவும் ஆச்சே! 17

கோத்திரங்கள் கல்பிதங் குணங்கள் குடிகளும் போச்சே… குணாதீதமான பரபிரம்மம் நான் என்பது ஆச்சே! 18

இனமும் பிள்ளை நான் என்ற பேர் எல்லாம் போச்சே… எப்போதும் பிரம்ம ஸ்வரூபமே நான் என்பது ஆச்சே! 19

வேத்து உருவமாகப் பார்த்து இருந்ததும் போச்சே… வேறு ஒன்றும் இல்லாமல் தானாய் இருக்கவும் ஆச்சே! 20

புத்திரனாலே கதி உண்டு என்பதும் போச்சே… புத்திரதாராதி பொய் பூர்ணம் நான் என்பது ஆச்சே! 21

பொய்யை மெய் என்று எண்ணி போகம் புசித்ததும் போச்சே… மெய்யை மெய் என்று எண்ணி மெய்யாய் இருக்கவும் ஆச்சே! 22

யக்ஞ யாகங்களும் ஏற்ற விதிகளும் போச்சே… யக்ஞாதி கர்மங்கள் என்னை பஜிக்கவும் ஆச்சே! 23

பஞ்ச கவ்வியத்தால் பலன் வரும் என்பதும் போச்சே… பஞ்ச தன்மாத்திரைக்கு பலனாய் இருக்கவும் ஆச்சே! 24

ஜனன மரணம் எனக்குள் இருந்ததும் போச்சே… ஜனனம் அது பொய் என்று சோதித்து இருக்கவும் ஆச்சே.! 25

சந்தைக் கூட்டம் வாழ்வுதானே மதித்ததும் போச்சே… அந்தக் கூட்டம் விட்டு ஆனந்த ரூபமும் ஆச்சே! 26

ஸப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே… ஸத்து மயமான சாட்சியே நான் என்பது ஆச்சே! 27

மாயையை உபாசித்தால் வரும் மோட்சம் என்பதும் போச்சே… மாயைக்கு அதிஷ்டானம் மாயாவி நான் என்பது ஆச்சே! 28

எனக்கு எதிராக வெகுவாகப் பார்த்ததும் போச்சே… ஏகம் ஏகம் என்று எங்கும் நிறைந்தவர் ஆச்சே!~ 29

(செங்கோட்டை ஆவுடையக்காளின் வேதாந்த ஆச்சே போச்சே சம்பூர்ணம்)

~

காலனை வென்று காலமும் இருப்பதாய் எண்ணும் கர்வமும் போச்சே… காலத்துடன் கலந்து காலமாய் இருப்பதென எண்ணிய காலமும் ஆச்சே! 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version