Home இலக்கியம் 90 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் லிப்கோ புத்தக நிறுவனம்!

90 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் லிப்கோ புத்தக நிறுவனம்!

lifco

சென்னை: தி லிட்டில் ப்ளவர் கம்பெனி – லிப்கோ பதிப்பக நிறுவனம், 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பதிப்பகத் துறையில் ஈடுபட்டு பல்வேறு ஆன்மிக தத்துவ வரலாற்று நூல்களை வெளியிட்டு வரும் இந்நிறுவனம் 90ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறது.

1929 ஆம் ஆண்டில் கிருஷ்ணஸ்வாமி சர்மாவால் துவங்கப்பட்டது லிப்கோ நிறுவனம். தமிழ்ப் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, ஆன்மிகம் தழைத்து ஓங்க பதிப்புத் துறையில் ஈடுபடும் குறிக்கோளுடன் துவங்கப் பட்டது இந்த நிறுவனம்.

லிப்கோ தொண்டு நிறுவனம், ஏழை மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் மற்றும் அகராதிகளை வழங்கி வருகிறது. கண்சிகிச்சை முகாம் நடத்தி ஏழைமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது.

லிப்கோ என்ற இந்த புத்தக நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. வைணவ, பக்தி வேதாந்த புத்தகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஆங்கில அகராதி உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு பெருமை பெற்றது. வைஷ்ணவ, ஸ்மார்த்த சந்தியாவந்தனம், நித்யானுஷ்டாக்ரமம், நித்யானுசந்தானம், உபாகர்மம், குடும்ப ஜோதிடம் உள்ளிட்ட புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை.

குடும்பத்தில், அல்லது நண்பர்கள் இல்லத்தில் ஏதாவது உபநயன முகூர்த்தம் இருந்தால், அவற்றில் நான் பெரும்பாலும் லிப்கோவில் சந்தியாவந்தனம் புத்தகத்துடனேயே கலந்து கொண்டு, உபநயனச் சிறுவனுக்கு புத்தகத்தை அளித்து ஆசிகூறுவது வழக்கம்.

இவ்வளவு ஆசார அனுஷ்டானாதிகளுடன் இருந்து புத்தகங்களைப் பதிப்பிதாலும், ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், இந்த நிறுவனத்தின் நிறுவனர் சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் ‘கண் தான மையத்திற்கு’ தானம் செய்தார் என்பது நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஆச்சரியமான செய்தி.

அவருடைய வாழ்க்கைக் குறிப்பு இது…

ஸ்ரீ வரதாச்சாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா (லிப்கோ புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் நிறுவனர்)

ஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா 1908 -ஆம் வருடம் டிஸம்பர் மாதம் 7-ம் தேதியன்று பிறந்தார். உலகப் பெருந் தலைவர் ராஜாஜி தோன்றிய ‘திருமலை நல்லான் சக்ரவர்த்தி’ என்னும் பரம்பரையில் கிருஷ்ணஸ்வாமி சர்மாவும் பிறந்தார். பழைய தென் ஆர்காடு மாவட்டம் மேட்டுப்பாளையம் என்ற கிராமமே அவர் பிறந்த ஊர்.

கிருஷ்ணஸ்வாமி சர்மா தணிக்கைத் துறையில் ஜி.டி.ஏ.(ACA என்று இன்று அறியப்படும்) தேர்வில் வெற்றி பெற்று, பல கோயில்களின் கணக்குகளைத் தணிக்கையும் செய்திருக்கிறார்.

கிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தகங்களை வெளியிடும் ஒரு நிறுவனத்தைத் துவக்க விரும்பினார். அவர் சிறுவனாக இருந்தபோது கடலூர் ஸெயிண்ட் ஜோஸப் உயர்நிலைப் பள்ளி மாணவர் என்ற வகையில், அந்தப் பள்ளியின் முதல்வர் வெர்ஜர் பாதிரியாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்த பாதிரியாரிடம் புத்தக வெளியீட்டு நிறுவனம் குறித்து யோசனை கேட்டார். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் புனித தெய்வமான ‘லிட்டில் ப்ளவர்’ என்னும் பெயரை பிரசுர நிறுவனத்திற்கு வைக்குமாறு அந்த பாதிரியார் யோசனை கூறினார்.

கிருஷ்ணஸ்வாமி சர்மா அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். கிருஷ்ணஸ்வாமி சர்மா ‘லிட்டில் ப்ளவர்’ (www.lifcobooks.com) என்ற பெயரை ஏற்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

வைணவ நம்மாழ்வாருக்கு வகுளாபரணர் என்ற ஒரு பெயரும் உண்டு. வகுள புஷ்பம் சிறியதாகவும், அழகானதாகவும், வாசனை கொண்டதாகவும் விளங்கும். அந்தச் சிறிய புனிதமான பூவைக் கருத்தில் கொண்டும், ‘லிட்டில் ப்ளவர்’ என்ற பெயர் அமைந்தது.

இவ்வாறாக ‘தி லிட்டில் ப்ளவர் கம்பெனி’ 1929-ம் ஆண்டில் பிறந்தது. வடகலை, தென்கலை வைணவப் பிரிவினரை முதலில் ஒற்றுமைப்படுத்தி, பிறகு அத்வைதிகளையும், துவைதிகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும் என்பது அவர் நோக்கம். அதைச் செயல்படுத்த அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.

கிருஷ்ணஸ்வாமி சர்மா ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவரிடம் இடையறாத பக்தி கொண்டவர். சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவருக்கு ஆலயம் எழுப்பப்பட்டதில் அவர் பிரதான பங்கு வகித்தார். இவ்வாறு பலப்பல சமயப் பணிகளை அவர் ஆற்றியுள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் பெரும் பணிகளைப் பாராட்டி மைசூர் ஸ்ரீ பரகால மட ஜீயர் ஸ்வாமிகள் 25-6-1977 அன்று ‘ஹயக்ரீவ சேவா ரத்னம்’ என்ற பட்டத்தை கிருஷ்ணஸ்வாமி சர்மாவுக்கு அளித்தார். ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா 1979-ம் வருடம் ஜூலை மாதம் 22-ம் தேதியன்று ஆண்டவன் திருவடி அடைந்தார்.

கண்தானம் என்பது வெகுவாக பிரபலம் ஆகாத 1979-லேயே, ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் ‘கண் தான மையத்திற்கு’ தானம் செய்தார்.

‘ஸ்ரீசடாரி சேவக’, ‘ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவா ரத்நம்’, ‘பக்தி பிரசாரண பிரவீண’ போன்ற பல பட்டங்களைப் பெற்ற ஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தக வெளியீட்டாளர்களிடையே ஒரு வைரமாக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்.

உண்மைதான். ஆசாரம், அனுஷ்டானம் என்று சொல்லி, பழைமைக் கருத்துகளோடு நவீனத்தை உள்ளே புக விடாமல் இருந்தால் நஷ்டம் சமூகத்துக்குத்தான் என்பதை உணர்த்தியவர். நம் நடைமுறைகள் கால மாற்றத்துக்குத் தக்க மாற்றிக்கொள்ளத் தக்கவை – ஆனால், அடிப்படையை மாற்றாமல்! மறக்காமல்!!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version