பாரதி சுராஜ் (வயது 92) இன்று காலை காலமானார். இயற்பெயர் செளந்தரராஜன். சுராஜ் என்று சுருக்கியவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு.
தொடக்க காலத்தில் நிறையச் சிறுகதைகளை எழுதினார். சுதேசமித்திரன், தினமணிகதிர், குமுதம், வெள்ளிமணி போன்ற பத்திரிகைகளில் இவரது பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன. சிவாஜி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்.
எழுத்தாளர்களைப் பற்றிய நகைச்சுவைத் தொடர் ஒன்றையும் சிவாஜி பத்திரிகையில் எழுதினார். `மிஸ்டர் முடியாக் கதை, மிஸ்டர் புரியாதது, மிஸ்டர் மொழிபெயர்ப்பு, மிஸ்டர் தழுவல்` என மிஸ்டர் சுராஜ் எழுதிய தொடர்கள் புகழ்பெற்றவை. `காலச்சக்கரம்` இதழில் இவர் எழுதிய சிறுகதைகள் குறிப்பிடத் தக்கவை.
காலச் சக்கரம் உருண்டு ஓடியது. பின்னாளில் சிறுகதைகள் எழுதுவதை முற்றிலுமாகக் கைவிட்டார். பாரதி இலக்கியக் கட்டுரையாளர் ஆனார். தினமணி, திருமால், ஆலய தரிசனம், சப்தகிரி, கடவுள், காமகோடி எனப் பற்பல பத்திரிகைகள் இவரது கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரித்தன.
தினமணிசுடரில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் மதிப்புரைகள் எழுதியவர். `இவ்வளவு அழகாக மதிப்புரை எழுதுகிறீர்களே, மதிப்புரை எழுதுவது எப்படி?` என இவரைக் கேட்டார் எழுத்தாளர் மகரம். அதற்கு `மதிப்புரை எழுதுவது இப்படித்தான்!` என இவர் ஒரு பதில் எழுதினார். அந்த பதில் மகரம் தொகுத்த `எழுதுவது எப்படி?` என்ற புத்தகத் தொகுப்பில் ஒரு கட்டுரையாக இடம் பெற்றுவிட்டது.
வசதியற்ற பெரிய குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் கட்டணச் சலுகை பெற்றுத்தான ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் படித்தார். லயோலா கல்லூரியில் இன்ட்டர்மீடியட் படித்தபோது ஜெரோம் டிசெளசாவின் அன்பையும் உதவியையும் பெற்றார். வசதிக் குறைவால் ஸ்ரீசென்ன மல்லீஸ்வரர் கேசவப் பெருமாள் இலவச விடுதியில் தங்கிப் படித்தார். உடன் இருந்தவர் பின்னாளில் புகழ்பெற்ற பேராசிரியராக விளங்கிய ந. சஞ்சீவி.
லயோலா கல்லூரித் தமிழ்ச் சங்கத்தில் இவர்தான் துணைச் செயலர். அதே நேரத்தில் தமிழ்ச் சங்கச் செயலராக இருந்தவர் குமுதம் எஸ்.ஏ.பி. அண்ணாமலை. திரைவானில் மங்காத ஒளிவீசிக் கொண்டிருந்த நடிகர் டி.ஆர். மகாலிங்கம் இவரது நெருங்கிய நண்பர்.
பதிவுத் துறையில் சேர்ந்து 40 ஆண்டுகள் பணிபுரிந்து 1986இல் முதல் நிலை சார் பதிவாளராக ஓய்வு பெற்றார். பள்ளிப் பருவத்தில் அமரர் கல்கியிடம் பாரதி கவிதை நூல் பரிசு வாங்கியதிலிருந்து பாரதி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார். 1951இல் சென்னை சைதாப்பேட்டையில் பாரதி கலைக் கழகத்தைத் தொடங்கினார். தொடக்கவிழாவில் பரலி சு. நெல்லையப்பர், நாரண துரைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெ. சாமிநாத சர்மா, கி.வா.ஜ., அ.சீனிவாசராகவன், செளந்தரா கைலாசம், அவ்வை நடராசன், ஆரா. இந்திரா, எஸ். நல்லபெருமாள் போன்ற பலர் இவ்வமைப்பில் பேசியுள்ளார்கள்.
சிலம்புச் செல்வரிடம் இளமையிலிருந்து மட்டற்ற ஈடுபாடு கொண்டவர். `வெளியிலிருந்து என்னைக் கண்காணிப்பவர்` என்று ம.பொ.சி. இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கி.வா.ஜ. இவரைச் சந்திக்கும்போது ஆழ்வார் பாசுரம் சொல்லச் சொல்லிக் கண்ணீர் வடிப்பார்.
தீபம் நா.பா.விடம் இவருக்கு அன்பு மிக அதிகம். (இறப்பதற்கு முதல்நாள், பாரதி கலைக்கழக விழாவுக்குச் செல்ல வேண்டும் என நா.பா கூறியதை எண்ணி இவர் அடிக்கடி நெகிழ்ந்ததுண்டு.) நா.பா. நடத்திவந்த `திண்ணை` என்ற இலக்கிய அமைப்புக் கூட்டங்களுக்கு எழுத்தாளர் சுப்ரபாலனோடு இவர் தவறாமல் வருகை தந்ததுண்டு.
சென்னை கம்பன் கழகத்தில் எம்.எஸ். சதாசிவம் நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருதைப் பெற்றவர். பாரதி இளைஞர் சங்கம் இவருக்கு `பாரதி பைந்தமிழ்ச் செல்வர்` பட்டம் வழங்கியது. சென்னை வானவில் பண்பாட்டு மையம் வழங்கும் பாரதி விருதை முதலில் பெற்றவர் இவர்தான்.
பாரதியைக் கடவுள் நிலையிலேயே வைத்து வழிபடும் இவர், சென்னை மத்திய கைலாஸ் ஆலயத்தில் பாரதி ஆழ்வராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டதில் முழு உடன்பாடு உடையவர்.
இவரின் மறைவு பாரதி அன்பர்களிடம் அளவற்ற துயரத்தைத் தோற்றுவித்துள்ளது.
முகவரி: 2. இருபத்தி ஏழாவது தெரு, நங்கநல்லூர், சென்னை- 600 061. அர்த்தநாரீஸ்வரர் கோயில் அருகில்…
புதல்வர் திரு ராமசாமி தொலைபேசி எண்: 94453 56769
– திருப்பூர் கிருஷ்ணன் (எழுத்தாளர் / பத்திரிகையாளர்)