Home இலக்கியம் வரலாற்றுடன் தொடர்புடைய நதி: தாமிரபரணி புராணம் நூல் வெளியீட்டில் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

வரலாற்றுடன் தொடர்புடைய நதி: தாமிரபரணி புராணம் நூல் வெளியீட்டில் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

தாமிரபரணி மகாபுஷ்கரம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்தியாவில் இருந்து பக்தகோடிகள் தாமிரபரணி நதிக்கு வந்து புனித நீராடுவதுடன் தங்களுடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களையும் செய்து வாழ்க்கையில் வளம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

தாமிரபரணி நதியானது ஆன்மிகத்தோடு மட்டுமல்லாமல் சரித்திர நிகழ்வுகளோடும் சம்பந்தமுடையதாகும். தாமிரபரணி நதிக்கரையோரம் பல கோயில்கள் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கின்றன. வடக்கே இருந்து வேதம் பயின்ற வல்லுனர்கள் இந்நதிக்கரையோரமாக குடியேறினார்கள் என்றும் இங்குள்ள சில கோயில்களில் அவர்களுக்கு பரம்பரையாக கோயில் கட்டளை உள்ளது என்றும் வரலாற்று செய்திகள் மூலமாக அறிந்து கொள்கிறோம்.

காஷ்மீர் தேசத்து ராஜா தாமிரபரணி நதியில் நீராடி பிள்ளைப் பேறு பெற்றதாகவும் அதனை எண்ணி சேரன்மகாதேவியில் உள்ள ஆலயத்திற்கு சில மானியங்களை வழங்கியதாகவும் திருநெல்வேலி கல்வெட்டுக்கள் சொல்கின்றன. தொல்காப்பியர் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலை எழுதுவதற்கு ஆதாரமாக இருந்த அகத்தியம் என்னும் இலக்கண நூலை தென்பொதிகை மலையில் தாமிரபரணி நதிக்கரையோரமாகத்தான் அகத்தியர் செய்தார் என்ற நம்பிக்கையும் இவ்வூர் மக்களிடையே இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தாமிரபரணி நதியானது வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஜீவநதியாகும். இந்த நதியின் அழகைப் பார்ப்பதற்காக பாபநாசத்திற்கு வந்த சீன யாத்திரிகர்கள் பாபநாசம் படித்துறைக்கு கீழே அழகிய மீன்கள் ஆடி, ஓடி விளையாடுவதை கண்டதாகவும் தங்களுடைய குறிப்புக்களில் எழுதி இருக்கிறார்கள்.

மகாகவி பாரதியார் தாமிரபரணி நதியில் புனித நீராடியதோடு தாமிரபரணி நதிக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் குரங்குகள் எப்படி ஆட்டம் போடுகின்றன என்பதைப் பற்றியும் ஒரு கட்டுரையில் நகைச்சுவையாக எழுதி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்…. என்று கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தனது சொற்பொழிவில் குறிப்பிட்டார்.

சிருங்கேரி மகா சன்னிதானம், சன்னிதானம் ஆகியோரின் அருள் ஆசியுடன் தாமிரபரணி புராணத்தை எழுதி இருப்பதாகவும் இந்நூலை தாமிரபரணி மகாபுஷ்கர காலகட்டத்தில் திருநெல்வேலியில் வெளியீடு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தனது ஏற்புரையில் கீழாம்பூர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஸ்ரீ விவேக சம்வர்தனி சபா ஆதரவில், தாமிரபரணி புராணம் என்னும் நூலை கல்வியாளர் ஜி.வி.கிருஷ்ணன் வெளியிட முதல் பிரதியை ஆடிட்டர் ஜி.நடராஜன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தேஜஸ் பவுண்டேஷனைச் சேர்ந்த பிடிடி ராஜன், இஸ்ரோ விஞ்ஞானி கிருஷ்ணன், சிவசுந்தரி ஆசிரியர் ஆட்சிலிங்கம், திருநெல்வேலி ஆண்டி வாத்தியாரின் சீடர் ஸ்ரீசேகர் வாத்தியார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கௌசிக் ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version