இது நெல்லை மண்ணுக்கே உரித்தான இலக்கிய பங்களிப்பு. பழங்கால வீடு அமைப்புகள் இன்றைக்கு எப்படி மாறியிருக்கிறது என்பதை ஒரு காட்சி தொகுப்பு போல (நம் நினைவூக்கு வந்தது வருஷம் 16 படத்தில் வரும் வீடு போல) நம்மை சொற்பொழிவு தளத்திற்குள் பயணிக்க வைத்து பிரமிப்பாய் துவக்கினார்.
சுமார் இரண்டரை மணி நேர சொற்பொழிவை பதிவுக்காக மிகவும் சிரமப்பட்டு சுருக்கி சொல்வதானால் மரபு ( இந்துத்துவம்) அதோடு முரண்பட்ட தாராளமயமாக்கல் அதிலிருந்து சற்று விழுமிய மார்க்சியம் இம் மூன்றுமே தளம்
இதன் தோற்றம் வளர்ச்சி முரண்பாடுகள் உரசல்கள் மறுசுழற்சி என பல பரிணாமங்களில் அவரது கருத்துரை அமைந்தது தொடக்கம் முதல் முடிவு வரை ( இடையில் 10நிமிட இடைவெளி தவிர்த்து )ஊசி விழுந்தாலும் கேட்கும் நிசப்தம். நெல்லை இலக்கிய ரசிகர்களின் பண்பட்ட தன்மையின் பிரதிபலிப்பு
மிகப்பெரிய சிந்தனை விருந்து. அத்தனை சுவையும் ஒரு சேர நினைவிற் கொள்ள முடியாவிட்டாலும் ஆண்டாண்டு காலமாய் அசை போடும் அளவிற்கு சுவையான பரிமாற்றம். இந்திய சமயம் இந்து மதம் அதன் உட்பிரிவுகள் பௌத்தம் சமணம் என பரிணாம வளர்ச்சியை பிரித்து வகுத்தளித்தது அருமை.
இதில் புற சமயங்களை தவிர்த்தது அவற்றுக்கும் இந்த மண்ணிற்கும் சம்பந்தமில்லை அவை இந்த தேசத்தின் பண்பாடு வரலாற்றுக்கு அந்நியப்பட்டது என்பதை மறைமுகமாக ஆணித்தரமாக உணர்த்தியது லாகவம்
நெஞ்சில் நின்ற சில கருத்துகள் :
எல்லா முரண்பட்ட சிந்தனைகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து அழிக்கும் என்பது தவறு. சில நேரங்களில் ஒன்றை ஒன்று வளர்த்து புதியதாக ஒன்றையும் உருவாக்கும். உதாரணமாக முரண்பட்ட பாலினம் மல்யுத்தம் செய்து குழந்தை பெறுவது போல
கடலினை கொந்தளிக்க செய்யும் நிலா. அது எந்த சலனமும் இன்றி அப்படியே இருக்கும். இந்த கொந்தளிப்புகள் ஆரவாரம் நிலவை ஒன்றும் செய்யமுடியாது.
மரபுகளும் தாராளமமாக்கல் சிந்தனை மோதல் – சபரிமலை விவகாரம்
இரண்டு முரண்பாடுகளுக்கிடையே இடைவெளியை அதிப்படுத்தி பிரிவினை உண்டாக்கி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதே மார்க்சியம்
இவையெல்லாம் முத்தாய்ப்பாய் சில துளிகள்… வேத காலம் துவங்கி வேகமாய் நகரும் இக்காலம் வரை ஒரு அலசல்.
மார்க்சிய இடது சாரி சிந்தையாளர்கள் நிறைந்த எழுத்துலகில் நடுநிலை தேசிய சிந்தனை எழுத்தாளர் தலைமுறையின் சமீபகால இமாலய நீட்சி திரு.ஜெயமோகன் என்றால் அது மிகையல்ல
இரண்டரை மணி நேரம் நின்று கொண்டு தண்ணீர் கூட குடிக்காமல் அறிவுசார் கூட்டத்தை தன்வயப்படுத்தி கருத்துரை செய்யும் வல்லமையை முதன் முறையாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களிடம் பார்த்தேன்.
– கா.குற்றாலநாதன், நெல்லை