Home இலக்கியம் இரண்டு கோவில்கள்… பின்னு செஞ்சடை – கி.வா.ஜ.,!

இரண்டு கோவில்கள்… பின்னு செஞ்சடை – கி.வா.ஜ.,!

எந்தை இவன்என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயிலாகத் திகழ்வானை
மந்தி ஏறி இனமா மலர்கள் பல கொண்டு
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

இந்தப் பாடலில் கவி, சூரியன் இறைவனை மனதில் வைத்து இறைஞ்சுவதையும், மன்னுலகில் வாழும் மந்திகள் இறைவனை திருமுதுகுன்றம் எனும் திருக்கோவிலில் மலர்தூவி வணங்குவதையும் மிக அழகாகப் பாடியுள்ளார். 

எம்மைப் படைத்த தந்தை இவன் என்று எண்ணிக் கூறிச் சூரியன் முதலாக வணங்குவார் அனைவருடைய சிந்தைக்குள்ளும் அச் சிந்தையே தான் தன் இயல்பு வெளிப்பட உறையும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றவனை. 

இறைவன் எல்லோருடைய சிந்தையிலும் உறைந்திருக்கிறான். தம்மை நினைப்பவர் மனம் அவனுக்குக் கோவிலாகிறது. தனக்குரிய அரண்மனையிலே தன் இயல்பு விளங்க வீற்றிருக்கும் அரசன் போல, இறைஞ்சுவார் சிந்தையிலே திகழ்கிறான் இறைவன், அந்தச் சிந்தையே தான் உறையும் கோவிலாக கருதி விளங்குபவன் இறைவன். இப்படி இரவி முதலானோர் வணங்க அவர்தம் சிந்தையே கோயிலாகத் திகழும் சிவபெருமான் புறத்தே உள்ள கோயிலிலும் திகழ்கிறான். அந்தக் கோவிலில் வழிபடுபவர்கள் யார்?

எல்லோருமே எடுத்தவுடம் தம் சிந்தையைக் கோவிலாக்கி விட முடியாது. அந்தத் தகுதி இல்லாதவர்களும் கண்டு வணங்கும் வண்ணம் இறைவன் சிவன் பல திருக்கோவில் கொண்டுள்ளார். அப்படிப் பட்ட தலங்களில் ஒன்றே முதுகுன்றக் கோவில். இது நடு நாட்டில் உள்ள தலம். இப்போது விருத்தாசலம் என்று வழங்குகிறது. பழமலையென்றும் இலக்கியங்களில் இது காணப்படுகிறது.

முதுகுன்றக் கோவிலில் அன்புள்ள மக்கள் வந்து வழிபடுகிறார்கள்.அன்பர்கள் வழிபடுவதைக் கண்டு மற்ற மக்களும் வழிபடத் தொடங்குகிறார்கள். நாளடைவில் அவர்களும் அன்பர்களாகி விடுகிறார்கள். மற்ற மக்களும் உள்ளம் உருகி அன்பர்களைப் போல வழிபடப் புகுவது ஆச்சரியம் அன்று. இதோ குரங்குகள் கூட வழிபடுகின்றன பாருங்கள் !

ஆம், மனிதன் செய்வதைப் பார்த்து அப்படியே செய்ய முயற்சிப்பது குரங்கின் இயல்பு. திருமுதுகுன்றக் கோவிலின் அருகில் உள்ள சோலைகளில் வாழும் குரங்குகள் அன்பர்கள் இறைவனை வழிபடும் முறைகளைக் கவனிக்கின்றன. அவர்கள் மலர்களைக் கொண்டு வழிபடுவதையும், கனிகளைக் கொண்டு நிவேதனம் செய்வதையும் பார்க்கின்றன. 

அவைகளும் அவ்வாறு செய்ய எண்ணுகின்றன. பலவகை மலர்களைப் பறித்துத் தொகுக்கின்றன. முதுகுன்றத்தின் சூழலிலே வாழ்வதினால் அவைதம் இயல்பே மாறிப்போகின்றன. குரங்கின் கையில் மலர்களைக் கொடுத்தால் அது அதைக் கசக்கி விடும் என்பர். இந்தக் குரங்குகளோ சார்பின் சிறப்பால் தாம பல இனமலர்களைப் பறித்துக்கொண்டு முதுகுன்றக் கோவிலின் முன் சென்று மலரைத் தூவிக் கைகுவிக்கின்றன, தலை சாய்த்து வணங்குகின்றன. 

குரங்காட்டியின் பழக்குதல் இன்றி, இங்கே யாரும் பழக்காமல் சூழ்நிலையின் வாசனையினால் அன்பர்களைப் போல மரத்தின்மேல் ஏறிப் பல இனமலர்களைக் கொண்டுவந்து முதுகுன்றக் கோவிலின் முன் வந்து அவைகளைத் தூவி தொழுது வணங்குகின்றன.

இத்தகைய அற்புதமான சூழ்நிலையை உடையது திருமுதுகுன்றக் கோவில். மந்தி என்பது பெண் குரங்கிற்குப் பெயர் ஆயினும் இங்கே பொதுவாகக் குரங்குகளைச் சுட்டியது.

இரவி முதலான இறைஞ்சும் பக்குவர்களின் உள்ளமாகிய திருக்கோவிலிலும் இறைவன் எழுந்தருளி உள்ளான், அன்பர்களும் மந்திகளும் வழிபட யாவருக்கும் எளியனாக முதுகுன்றக் கோவிலிலும் விளங்குகின்றான். சிந்தை எனும் திருக்கோவிலும் சிலையால் அமைத்த திருக்கோவிலும் இறைவன் சிவன் உறையும் இருவகைக் கோவில்கள். அகக் கோயிலில் வழிபடும் தகுதி வரவேண்டுமானால் முன்பு புறக்கோவிலில் வழிபடுதல் நன்று…..

மனதிற்கு குரங்கை உவமையாகச் சொல்வது வழக்கம். இறைவனுடைய திருக்கியயிற் சார்பு பெற்றால் பலவாறு திரியும் மனம் ஒருவழிப்பட்டு இறைவனை வழிபடும் என்ற குறிப்பு இந்தத் திருப்பாட்டினால் புலனாகும்.

  • கி.வா. ஜகந்நாதன், (அமுத நிலையம் வெளியீடு)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version