Home இலக்கியம் பாளையங்கோட்டையில் பளபளக்கும்… வாசனை மாறாத ஷேக்ஸ்பியரின் படைப்புகள்…!

பாளையங்கோட்டையில் பளபளக்கும்… வாசனை மாறாத ஷேக்ஸ்பியரின் படைப்புகள்…!

book binding

இந்தப்படத்திலுள்ள #ஷேக்ஸ்பியர் படைப்புகளனைத்தும் 1950 களின் இறுதியில் அச்சிடப்பட்டு சிவப்பு காலிக்கோ பைண்டிங்கில் செய்யப்பட்டு இன்றைக்கும் அப்படியே மிடுக்காக உள்ளது.

அறுபது வருடங்களுக்கு முன்னே வெள்ளைத்தாளில் அச்சிடாமல் பழுப்பு நிறத்தாளில் அச்சிடப்பட்டு இன்றும் அதே பொலிவுடன் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட புத்தகங்கள் கிழிந்து விடுகின்றன.

ஷேக்ஸ்பியரின் படைப்புகள் அப்போது ஆக்ஸ்ஃபோர்ட்,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழ அச்சகங்களில் இப்படி வெளியிடப்பட்டது. அதே போல இந்தியாவில் கல்கத்தாவில் பானர்ஜி பதிப்பகம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை வெள்ளைத்தாலில் காலிக்கோ இல்லாமல் வெறும் அட்டையுடன் வெளியிட்டார்கள்.

இந்தப் படைப்புகள் 1960களில் பிரபல்யமாக இருந்தன.கல்லூரிகளில் பி.ஏ, பி.எஸ்.சி படிப்பவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தில் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் கட்டாயம் ஏதேனும் ஒன்று இருக்கும்.அதைப் புரிந்து கொள்ள சில மாணவர்கள் சிரமப்v படுவார்கள்.

நான் பட்டப்படிப்பு படிக்கையில் #ஆன்டனி&#கிளியோபாட்ரா நாடகம் பாடமாக இருந்தது. அந்த வகுப்பை ஆங்கிலப் பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் குரலில் ஏற்ற இரக்கத்துடன் நடத்தும் போது ஒரு ரசிகனாக ரசித்ததுண்டு.அதுமட்டுமல்ல விபரீத ஆசைகள், அதில் போர்க்குணத்தை கொண்டதெல்லாம் மனதை மட்டுமல்லாது வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் சொற்களாகவே அந்த நாடகத்தை பார்க்கிறேன்.

படத்திலுள்ள அத்தனை படைப்புகளும் இன்றைக்கும் என் நூலகத்தில் வைத்துள்ளேன்.எனது மூத்த சகோதரர் டாக்டர் பாலகிருஷ்ணன் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலி ஜங்ஷன் நெல்லையப்பர் நெடுஞ்சாலை சாலைக்குமரன் கோவிலின் எதிரே இருந்த எஸ்.ஆர். சுப்ரமணிய பிள்ளை புத்தகக்கடையில் வாங்கியதாகும்.

இன்றைக்கும் அதன் ரப்பர் ஸ்டாம்ப் அப்படியே உள்ளது. #திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் வட்டார கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு அரிய புத்தகங்களை வழங்கிய கடைகள் எஸ்.ஆர். சுப்ரமணிய பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை புத்தகக்கடைகள் ஆகும்.

இவர் வ.உ.சி க்கு உறவினர்.இன்று அந்தப் புத்தகக் கடைகள் கிடையாது. நெல்லையில் படித்த மாணவர்களுக்கு தெரியும். அன்று இருந்த நடராஜா ஸ்டோர்ஸ், த.மு.சிவாஜி ஸ்டோர்ஸ் பளையங்கோட்டையிலுள்ள மரியா கேண்டீன், பாலஸ்.டி.வேல்ஸ்.

பாளை தெற்கு பஜாரில் இருந்த சிறிய டீக்கடைகள் இன்றைக்கு காணாமல் போய்விட்டன.

வெளிநாட்டு பயணங்களில் ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ்,யேல், ஹார்ட்வர்ட் பல்கலைக் கழகங்களின் பழமையான, பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பார்த்தாலும் பாளையங்கோட்டைக்கு அவை ஈடாகவில்லையென்றே தோன்றியது.

வாரம் ஒரு முறையேனும் பல பணிகளுக்கிடையேயும் ஷேக்ஸ்பியரின் படைப்பில் ஏதேனும் ஒன்றை சில வரிகளையாவது பென்சிலால் கோடிட்டு படிக்கையில் கிடைக்கும் இன்பம் அலாதியானது வார்த்தைகளில் விவரிக்க இயலாத பரவசம் அது.

இப்படியான புத்தகங்கள் இந்தக் கட்டமைப்பில் ஆண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் இருப்பது போன்று இப்போது வருவதில்லை என்பது கவலையளிப்பதே..

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (திமுக., செய்தி தொடர்பாளர்)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version